செவ்வாய், நவம்பர் 02, 2004

தாமதம் ஏன்..

தாமதம் ம்..ம்.. என்ன செய்வது இந்த எழுத்தை சரி செய்ய எடுத்த
முயற்சியினால்தான் இத்தனை நாட்கள் ஆகிவிட்டது.

ஒருவாரமாக அடை மழை, உள்ளம் உடல் எல்லாம் குளிரில்
நடுங்குகிறது.மழையென்றதும் ஒரு நினைவு..

முன்பு ஒரு முறை உயிரெழுத்தின் முகப்புப் படத்திற்கு
(மழையில் நனைந்து மகிழும் ஒரு பெண்)பொருத்தமான
கவிதை எழுதவேண்டி (கவனிக்க) கவிஞர்களைக் கேட்டுக்கொள்ள
வழக்கம் போல் எனக்குள்ளிருந்த வான்கோழி துள்ளி எழ :))
நானும் எழுத!அன்று(4.8.03)நிறைவேறியது என் எவ்வளவோ
நாள் ஆசை.

'நனைந்த முகம்'

என் வீட்டின் வளவிற்குள்
குற்றாலத்தின் அருவியாய்
கூடருவாயில் கொட்டும்
அந்த மழையில்
குதூகலமாய்
முகம் நனைத்துக் குதித்த
என் பழைய நினைவு
பசுமையாய்...
இந்த முகம் பார்த்து!

''''''''''''''''''''''

இந்த மழையை நாம் எல்லாம் எப்படிப் பார்கிறோமோ, ஆனால் உயிரெழுத்தில் கிரி ஒரு மழைக் கவிதை எழுதியிருக்கிறார் வறுமையில் உழல்பவர்கள் எப்படி மழையை எதிர்கொள்கிறார்கள் என்று.

அதைப் படித்து இந்த விதத்தில் எப்போதாவது ஒரு கணமேனும் சிந்தித்தோமா என்று, நினைத்துப் பார்த்தேன், மனச் சங்கடமாகவும் அதை நினைத்து வெட்கமாகக் கூட இருந்தது. என்ன இப்படி இருந்திருக்கிறோமே என்று. ஓரிருவர்தான் மற்றவர்களின் இழப்புகளையும் இப்படி யோசிப்பார்கள் பெரும்பாலானவர்கள்(என்னப் போல்தான்)அவரவர்களின் கண் கொண்டுமட்டுமே பார்ப்பார்கள்,நீங்களும்தான் அதைப் படித்துப் பாருங்களேன்.

அவரின் மழைக் கவிதை:
மழை

ஊரே வேண்டி நிற்க
எனக்குமட்டும் மழை விருப்பமில்லை
ஏனென்றா கேட்டாய் தோழி?
காலடியில் நீரோடையும்
சுவரெல்லாம் நீர்வீழ்ச்சியும்
அடுப்பில் எரியும் நீரும் பார்த்திருக்கிறாயா நீ?
வா வந்துபார் எம் குடிசையில்!!
அடுக்களையும் அடுக்குமிடமும் ஒன்றாயிருக்க
படுக்கையும் கூரையும் பகலில் கைகோர்க்கும்
ஒற்றையறை குடிசைக்குள் பார்!

கொஞ்சம் முயன்றால் எண்ணிவிடலாம் வின்மீண்களையும்
எம்குடில் கூரைக்கண்களிடம் பலிக்காது உன் திறமை!
ஓட்டைக்கு ஒன்றாய் இறங்கினாலும்போதும்
காலடியில் ஓடையென்ன, ஓராழியே ஓடும் தோழி!

ஒருநாள் இல்லை
ஒவ்வொரு நாளும் பிழைத்திருக்க
இருட்டுமுதல் இருட்டும்வரை
ஓடவேணும் நாங்கள்
ஓரிடம் முடங்கினால் உண்டியேது?
கையூன்றி கரணமிட சேறு ஆகாது தோழி.

மாளிகை மாடமேறி மழை இரசிக்க ஆகும் உனக்கு.
இங்கே மழையன்றோ எம் குடிலேறும்,
எங்கே போவோம் நாங்கள்?

கால்கோப்பை நீர் உன் சிரமேறவே
மூன்றுநாள் தடுமல் உனக்கு
மேலிருந்து பொழியும் மழையில்
கால்வரை நனையும் எங்களை யோசித்தாயா தோழி?

சுத்தமான உங்கள் வீட்டின் கழிவுகள் எங்கே போகின்றன தெரியுமா??
சுற்றிவருகிறது எங்கள் வீடுகளையே!!
மழைக்கு பயந்து அவை ஒதுங்குவது
எங்கள் ஓட்டைக் குடிசையில்தான்!
நாங்கள் எங்கே ஒதுங்கட்டும் தோழி?
பணத்தின்மேல் பாயும் உங்கள்
பாடசாலைகள் நாங்கள் ஒதுங்கவும் வரிகேட்குமே??


இப்போது சொல் தோழி,
இன்னுமா என்னை மழையை இரசிக்கச் சொல்கிறாய்?
இன்னுமா என்னை மழையை விரும்பச்சொல்கிறாய்?

-கிரி

நன்றி கிரி.

(உங்கள் அனுமதி இல்லாமலே இங்கு போட்டதற்கு
மன்னித்துக் கொள்ளுங்கள் கிரி.)


இனி அடிக்கடி வருகிறேன்?

அன்புமிகு
மீனா.

வியாழன், அக்டோபர் 28, 2004

வாசகசாலை

என் சிறுவயதில் எங்கள் ஊரில் உள்ள வாசகசாலையில்
போய்ப் படிக்க மிகவும் ஆசைப்படுவேன்,ஆனால் மிகவும்
சிறுவயதென்பதால் என் அப்பாவின் வயதொத்தவர்கள் எல்லாம்
உள்ளே அமர்ந்து படிப்பதைப் பார்த்து அவர்கள் எல்லாம்
என்ன சொல்வார்களோ என்ற பயத்தில் வாசலோடு ஓடி வந்து
விடுவேன், தினமும் இது தொடரும்.

அதன் பிறகு அதை மறந்தே போய்விட்டேன் இன்று இங்கு
எனக்கென்று ஒரு வாசக சாலை!,இந்த என் புதிய இடத்திற்கு
என்ன பெயர் வைப்பது என யோசிக்கும் போது என்றோ மனதின்
ஆழத்தில் மூழ்கிக் கிடந்த 'வாசக சாலை' திடீரென்று வெளிவந்து
பழைய நினைவுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வைத்து விட்டது!

நிறைய எழுத ஆசையுடன்..
ரங்கமீனா.