வியாழன், ஜூலை 14, 2005

நீண்ட நாட்களுக்கப்புறம்...

என் அபிமான கவிஞரின் கவிதை இன்று கண்ணில் பட்டது! அக்கவிதையை இங்கே இடவேண்டும் என்ற உந்துதலில் நீண்ட நாளுக்கப்புறம் மீண்டும் இன்று!


கனாக் கண்டேன்


அமுத நீர் சுரக்கும் இதயக் கிணற்றில்
ஊமைக் காயங்களாய் மூடிக் கிடக்கும்
அவளின் ஆசை ஊற்றுக்கண்கள்
அத்தனையையும்
அந்தரங்க விரல்கள் நீட்டி
மெல்ல மெல்ல உடைத்தான்
அவன்


வெள்ளம் வெள்ளம்
எப்போதும் இல்லாத அளவில்
விழி மனம் உயிர் ஆன்மா
அனைத்தையும் நனைத்துத் துவைத்து
பொங்கிப் பெருகி
அவளுள் ஒரு வெள்ளத் திருவிழா


குருதிச் சித்திரங்கள் தீட்டி
துடித்து வெடித்து விளைந்த
அவனின் கந்தகக் காயங்களிலெல்லாம்
மெல்லிய மன இழைகளால்
பொழுதுகள் தப்பாமல்
அவளின் நேச உயிர் ஒத்தடங்கள்


கண்ணீர் கண்ணீர்
இமைகளைக் கரைத்தழித்துக்கொண்டு
கருணையில் நெகிழ்ச்சியில்
கனிந்து குழைந்த அவனின் கண்களில்
காட்டாற்றுக் கண்ணீர்ப் பெருவிழா


ஆம்...


வாடி வதங்கி
உயிர்மட்டும் மீதம் வைத்து
வான் நோக்கிக்கிடந்த
காய்ந்த பழைய செடியில்
பூத்தது ஒரு சந்தனமுல்லை


காலப் பெருமரத்தில்
முட்டி மோதி அடிபட்டு
குற்றுயிராய்க் கிடந்த
ஒரு வண்ணத்துப் பூச்சு
திடுதிப்பெனத் தேடிவந்த
பொன் வசந்தத்தில்
மூச்சுப் பற்றி உயிர்த்தது


தன்னையே பதித்துப் பூத்த
சந்தன முல்லையின் இதயவனத்தில்
ஓர் ஈர முத்தமாய்ச் சென்றமர
கருகிக் கிடந்த சிறகுகளை
புத்துறவுக் காற்றில் புதுப்பித்துக்கொண்டு
சிறகடித்துச் சிறகடித்துச் சிலிர்த்தது
வாஞ்சைமிகு வண்ணத்துப் பூச்சு


வண்ணத்துப் பூச்சே வண்ணத்துப் பூச்சே
அங்கேயே நில் என் வண்ணத்துப் பூச்சே


அருகிலொருபோதும் வாராய்
என் உள்ளங்கவர் வண்ணத்துப் பூச்சே


என்னைப் பறித்தெடுத்துத்
தன் போலிக் கருங்கூந்தல் சூடி
விருந்துக்குச்செல்ல விரைந்து வருகிறாள்
அதோ... அதோ.... என் எஜமானி


நான் அவள் தோட்டத்து மலரல்லவா
நாமோ நியதிகளின் தவறல்லவா என்று
முகம் மூடி விசித்தது சந்தன முல்லை


தொடரும் இவைபோன்ற
பிரபஞ்சக் காட்சிகளில்
இயற்கைத் தளிர்களையெல்லாம்
துண்டுதுண்டாய் நறுக்கிப்போட்டு
எத்தனை எத்தனையோ
கூட்டுக்கறி சமையல்கள்


நிரம்பி வழியும் ஏக்கங்களில்
பெருகி உயரும் துயரங்களில்
சுற்றிச்சுழலும் பெருமூச்சுப் புயல்களில்
பிரபஞ்சம் நிச்சயம் அழிந்துபோகும் என்று
பிரபஞ்சமே கதறுவதுபோல்
கனாக் கண்டேன் நானின்று!


----- ---



என்றும் உங்களின் அன்புமிகு
மீனா.