செவ்வாய், மே 30, 2006

'கீத கோவிந்தம்'

திரு நா.கண்ணன் அவர்களின் கவிதையே..பாடலாக!(ஆர்.எஸ்.மணி அவர்களின் குரலில் அவரே இசையமைத்தது!)

இங்கே: http://www.rsmani.com/gita_govindam/

கேட்டுப்பாருங்கள் உள்ளம் உருகும்! நான் மிகவும் ரசித்தது நீங்களும் ரசிக்க.


காத்திருப்பேன் உனக்காக கண்ணா
காத்திருப்பேன் உனக்காக

காத்திருப்பேன் உனக்காக கண்ணா
காத்திருப்பேன் உனக்காக

தூரத்து மணியோசை
ஒலித்திடும் போ....தெல்லாம்

தூரத்து மணியோசை
ஒலித்திடும் போ...தெல்லாம்

நீ வருவாயென்று
நானறிவேனதனால்
தினம் தினம் மணியோசை
கேட்டிட மனம் நாடி

வீற்றிருப்பேன் வாயில் முன்னே கண்ணா
வீற்றிருப்பேன் வாயில் முன்னே

காத்திருப்பேன் உனக்காக கண்ணா
காத்திருப்பேன் உனக்காக

செம்பவழ மாலையிலே
வைத்த கரு முத்தினைபோல்
செம்மை நிற மாலை நேரம்
உன்னுருவம் தோன்றும் வரை

தாயினது கழுத்தினிலே
ஆடும் மணியோசை கேட்க
கொட்டிலிலே துடித்திருக்கும்
சின்னஞ் சிறு கன்றினைப் போல்

காத்திருப்பேன் உனக்காக கண்ணா
காத்திருப்பேன் உனக்காக

காத்திருப்பேன் உனக்காக கண்ணா
காத்திருப்பேன் உனக்காக

நா.கண்ணன்

திங்கள், மே 29, 2006

'காத்திருப்பு'

காத்திருத்தல்
எதற்கென்று தெரியவில்லை
காத்திருக்கிறேன்
காத்திருத்தல்
வீணானது
தெரியுமா?
ஏன் இன்னும்
காத்திருக்கிறேன்?
காத்திருத்தல்
சுகமோ?
தெரியவில்லை
காத்திருக்கிறேன்.

இப்படித்தான்
சில பொழுதுகளில்
எங்கேயோ
காணாமல் போய்
எனக்காக
நானே காத்திருப்பேன்

மீனா.

ஞாயிறு, மே 14, 2006

"ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி"

நவராத்திரி நாயகி:





அன்னையர்களுக்கெல்லாம் அன்னையான அவளை நினைத்து...

எங்களின் வீட்டிற்கு அருகில் குடி கொண்டிருப்பவள் பற்றித்தான் எழுதியிருக்கிறேன்.

'ஆயிரம் நாமத்தால் அர்ச்சனை செய்தாலும்
அன்னை உந்தன் பெருமை சொல்லத்தரமோ
ஆயுளும் யோகமும் ஐஸ்வர்யம் யாவும் உன்
அன்பினால் கடைக்கண் பொழி அருளே - திருவே..

ஸ்ராவண பௌர்ணமி முன் சுக்கிரவாரத்தில்
சௌந்தர்யவதி உன்னை ஸ்ரத்தையாய் பூஜிக்க
தேவாதி தேவரும் தேடி வருவார் தேவி
உந்தன் திருவருளை நாடி வருவார்
ஸர்வா பரணமொடு காஷி தருவாய்
மன ஸஞ்சலங்கள் துடைத்து ஆட்சி புரிவாய் - திருவே செந்திருவே..'

பீம்ப்ளாஸ் ராகத்தில் அமைந்திருக்கும் இந்தப் பாடல் பாடும் பொழுதெல்லாம் குளமான கண்களுக்குள் ராஜேஸ்வரி அமர்ந்திருப்பாள்!

ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஆலயம் சிறிய குன்று(மலை)மேல், ஆற்றின் கரையோரம் அற்புதமான அழகுடன் இயற்கை சூழலில் அமைந்திருக்கிறது.

இங்கு வருடம்தோறும் நவராத்திரி கொண்டாட்டம் பிரமாதப்படும் இந்தப் பத்து நாளும் கோயில் திருவிழாக் கோலத்துடன் ஜொலிக்கும் கொலுவின் நடுநாயகமாக பெரிய உருவத்தில் திருப்பதி ஏழுமலையான் தத்ரூபமாக கொலு மண்டபத்தில் எழுந்தருளியிருப்பார்,அம்பாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்துடன் அழகாக காட்சி தருவாள், நாட்டியம், வீணை, வயலின், பாட்டு என ஒவ்வொரு நாளும் கோவிலுக்குச் சென்று இன்றைக்கென்ன அலங்காரத்தில் அன்னை இருப்பாள், யாரின் நாட்டியம், பாடுவது யார், இன்று வயலினா, வீணையா வாசிக்கப் போவது யார் என அறிய ஆவலாக போய்ப் பார்க்க மனதிற்கு ரெம்ப மகிழ்ச்சியாக ஆனந்தமாக இருக்கும்.

ஒரு கோவிலைப் பற்றி சொன்னால் அங்குள்ள குருக்கள் பற்றியும் கண்டிப்பாக சொல்லத்தான் வேண்டும்.

தினமும் அம்மனுக்கு அலங்காரம் செய்யும் ரமேஷ் குருக்கள் கைகளில் அப்படி என்ன சக்தி இருக்கோ தெரியாது மூலஸ்தானத்தில் அம்பாளின் அழகை ரஸித்து அடுத்து கீழே கொலுமண்டபம் சென்றால் அங்கு வேறொரு அலங்காரத்தில்! விதவிதமாக ஒவ்வொரு நாளும் அவரின் கைவண்ணத்தில் தோற்றமளிக்கும் அம்பாள் இருக்கும் அழகு!.

நவராத்திரி சமயம் பலவிதப் பழங்களைக் கொண்டு மாலையாகக் கட்டி அவளுக்கு அணிவித்து அவர் செய்யும் அலங்காரம்(!) கணீரென்ற குரலில் அவர் (மட்டுமல்ல இன்னும் மற்ற குருக்களும் அவர்களும் மிகச் சிறந்தவர்கள்) செய்யும் அர்ச்சனை (பாடும்) அந்தாதி! அத்தனையும் நம்மை மெய்மறக்கச் செய்துவிடும்!

தவிர்க்க முடியாத தருணத்தில் அவர் ஊர் சென்றிருக்கும் சமயம் இங்கே அம்பாளின் முகத்தில் அவரின் பிரிவு தெரியும்!.

அவரைப் பற்றிய சிறு குறிப்பு:

அலங்காரபூஷணம் அருள்ஞானமணி (இவருக்கு திருமுருக கிருபானந்த வாரியார் கொடுத்த பட்டம்), சந்தனகலா சிற்பி கம்பீரகானமணி (Dr.வான்மீகிநாத ஸ்தபதியினாலும், இங்கு ராஜேஸ்வரி கோவில் தலைவரினாலும் கொடுக்கப்பட்டது),சென்னை குமரக்கோட்டம் ஸ்தானிகர் சேகல் (சொந்த ஊர்) சுந்தரமூர்த்தி கைங்கர்ய சபா ஸ்தானிகர் சிவஸ்ரீ ரமேஷ் சிவாச்சாரியார்(!) என்பவர்தான்!. படித்தது திருச்சிமாவட்டத்தில் உள்ள அல்லூரில், குரு விஸ்வாநாத சிவாச்சாரியார். இத்தனைக்கும் இவர் ஒன்றும் அப்படி வயதானவர் இல்லை), எல்லாம் ராஜேஸ்வரியின் கருணையோ! அப்படித்தான் இருக்கும். ஏனென்றால் ரமேஷ்க் குருக்கள் மட்டுமல்ல இன்னும் அம்பாளுக்கு சேவை செய்ய இந்த கோவிலுக்கு வரும் எல்லோருமே எல்லா விதத்திலும் சிறந்தவர்களாகத்தான் திகழ்கிறார்கள். அதோடு அங்கு எந்நேரமும் அத்தனை பேரும் மகிழ்ச்சியுடனும் மலர்ந்த முகத்துடனும் சேவை செய்வதைப் பார்க்கும் போதே தெரியும் அவள் எவ்வளவு கருணை உள்ளவள் என்று!

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆலயத்தின் நுழைவாயிலில் இருபத்தைந்து படிகள் ஏறி மேலே வந்தால் பளிச்சென்று காற்றோட்டத்துடன் விசாலமான பிராத்தனை மண்டபம்! (உள்ளே நுழைந்தவுடன் மனதில் ஏற்படும் அந்த உணர்வு! வந்து பாருங்கள் தெ(பு)ரியும்) கோயிலின் அடித்தளத்தில் கல்யாண மண்டபம் அதன் மேல்த் தளத்தில்த்தான் ஆலயம் அமைந்திருக்கிறது. மண்டபத்தின் உள்ளே ஆலயத்தின் பிரதான கருவறையின் இடப்பக்கத்தில் சித்திவிநாயகராக வீற்றிருக்கிறார் ஐந்து கரப் பெருமான். ஆலயத்தின் மற்ற திருமேனிகளைப் போலவே இந்தத் திருமேனியும் தமிழகத்தின் புகழ் பெற்ற சிற்பி தேவகோட்டை முத்துக் கருப்பரால் ஒற்றைக் கருங்கல்லில் செதுக்கப் பட்டதாகும்! 1977ல் நிகழ்ந்த முதல்த் திருக்குட நன்னீராட்டு மங்கள விழாவில் இத்திருமேனி பிரதிஷ்டை செய்யப் பட்டது.

சித்திவிநாயகரைச் சுற்றி வலம் வரும்போது முதலில் காட்சி அளிப்பவர் விஷ்ணு துர்கை என வழங்கப்படும் அன்னை துர்காதேவி, தொடர்ந்து வலம் வர (பிரதானக் கருவறையின் வலப்பக்கம்) இங்கு காட்சி அளிப்பவர் (பாலசுப்பிரமணியனாக அருள்பாலிக்கும்) திருமுருகப்பெருமான் ஆவார். அடுத்து பிரார்த்தனை மண்டபத்திற்கு வரும் படிக்கட்டுகளின் எதிரே மூலஸ்தானம், வாயிலில் துவாரபாலகர்கள் (தூய வெண்கற்களில்) இருவருடனும், எதிரே ஏற்றமுடன் காட்சியளிப்பது பொற்றாமரையின் மேல் அமர்ந்த நிலையில் சௌந்தரவல்லியாக உலகநாயகி ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரித் தாயார்.

பிரார்த்தனை மண்டபத்தின் இருபுறமும் இரு சிறிய மண்டபங்கள் உள்ளன, மூலஸ்தானத்தின் இடப்புறம் உள்ள ராஜேஸ்வரி மண்டபத்தில் ஸ்ரீகணேசர், ஸ்ரீதுர்கை, வள்ளிதெய்வானை சமேதரராய் ஸ்ரீ முருகப்பெருமான் வீற்றிருக்கின்றனர். வலப்புறம் உள்ள நடராஜ மண்டபத்தில் சண்டிகேஸ்வரராக சிவபெருமான், சிவகாமி சமேதரராய் நடராஜர், நாயன்மார்கள் நால்வர் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். கீழே ஆலயத்தின் இடப்பக்கம் வெளிப் பிரகாரத்தில் ஆற்றின் ஓரத்தில் நவக்கிரக நாயகர்களுக்கென்று தனி திருக்கோயில் அமைந்திருக்கிறது.

நவக்கிரக சந்நிதிக்கும் ஆற்றுக்கும் இடையில் அரசமரம் ஒன்று ஆலயத்தின் மேல் குளு குளுவென்று தன் நிழலைப் பரப்பிக் கொண்டு கம்பீரமாக நிற்பது, ஆற்றின் இருபக்கமும் (கோயிலின் உள்ளே) செண்பக மரங்களும், கரும்பும், நவக்கிரக மூலஸ்தானத்திற்கு வலப்புறம் பெரி(ய்)யநாவல் மரம் ஒன்று(!) மஞ்சள் பூக்களுடன் பழங்களுடன் பசுமையாக கிளை பரப்பி நிற்பதும் (கொட்டிக் கிடக்கும் பழங்களைப் பொறுக்கி ஒட்டியிருக்கும் மண்ணை ஊதும் போது ஔவையும், ஆடுமேய்க்கும் முருக(சிறுவ)னும் நினைவில் வருவது!) கருவறையின் முன்புறம் வில்வமரம் ஒன்று உயர்ந்து அடர்ந்த கிளைகளுடன், கோவிலின் உட்புறம் வன்னி மரங்களும், ஆலயத்தின் இடப்பக்க நுழைவாயிலுக்கும் கோயிலின் வெளிப்பிரகாரத் துக்கும் இடையில் இருவேப்பமரங்கள் இம்மரங்களின் கிளைகள் அம்பாளின் மூலஸ்தானத்திற்கு மேல் குடைபோல் படர்ந்து இருப்பதும் அதிசயம்! அற்புதம்! அழகு!.

மலேசியா வருபவர்கள் அவசியம் ராஜராஜேஸ்வரியை தரிசித்துச் செல்லவேண்டும் அவசியம் வாருங்கள் (அப்படியே எங்கள் வீட்டிற்கும்?) இது என் வேண்டுகோள்.

===o===

இவ்வளவு சொன்னவள் இக்கோயிலின் வரலாறு சொல்ல வேண்டாமா?

ம.இ.க.அம்பாங் கிளையின் அன்றைய தலைவரும், அம்பாங் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான திரு சுப்பையா அவர்கள் 19.11.1956 அன்று இராஜராஜேஸ்வரி ஆலயம் எழுப்ப அம்பாங் சாலையில் நான்காம் மைலில் இருந்த நிலத்தை வழங்கக் கோரி அம்பாங் மாவட்டத் துணையதிகாரிக்கு எழுதிய கடிதம்தான் ஆலயம் உருவாகக் காரணம்! ஆனால் அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டது, ஆனாலும் ஒரு மாற்று நிலத்தை அடையாளங்காட்டி மூன்று வருடங்கள் விடாது தொடர்ந்து செய்த அவரின் பெரு முயற்சி வெற்றியளித்தது!மாநில முதல்வர் நிலம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளார் என்ற செய்தி 1.6.1959 தேதியிட்டு கோலலம்பூர் நில அலுவலகத்தில் இருந்து அனுப்பிய கடிதம் மூலம் உறுதியானது.

அதன் பிறகு மூன்று வருடங்களில் ஜாலான்(ரோடு) உலுகிளாங்-கில் (என்வீடும் இருப்பது!) இருந்த 1/3ஏக்கர் நிலம் 5.11.1962 அன்று முறையாகப் பதிவு செய்யப்பட்டது. அதுவே இன்று ஆலயம் அமைந்திருக்கும் நிலமாகும். அதன் பிறகு பத்து வருடங்கள் கழித்து 1972ல் ஆலயக் கட்டடக் குழு அமைக்கப் பட்டு பதிவு செய்யப்பட்டது, அன்னை மாரியம்மன் பெயரில் ஆலயம் எழுப்ப1973ல் நிதி வசூல் செய்து, பின்னர் மலாயாப் பல்கலைக்கழக இந்தியத் துறையின் அன்றைய பேராசியர் கோ.சுந்தரமூர்த்தி அவர்களின் ஆலோசனைக்கிணங்க ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி ஆலயம் எனும் பெயரோடு, தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ் பெற்ற ஸ்தபதி திரு.இராமசாமி அவர்களின் தலைமையில் நிர்மாணிப்புப் பணி தொடங்கியது.

அன்றே சுற்று சூழல் அழகுற அமைய பயன்தரும் மரங்கள் பூச்செடிகள் நடப்பட்டு அவை இன்று சோலையின் நடுவே அமைந்த ஆலயமாகப் புகழ் பெற்றுவிட்டது!

15.11.74 அன்று ம.இ.கவின் அன்றைய தேசியத் தலைவரும் தொழில் அமைச்சருமான டான்ஸ்ரீ டத்தோ வே.மாணிக்கவாசகம் அவர்கள் அடிக்கல் நாட்ட கட்டடவேலை தொடங்கி டத்தோ டாக்டர் பி.டி.அரசு, டத்தோ வி.எல்.காந்தன் ஆகியோரின் முயற்சியில் சிலாங்கூர் மாநில முதல்வர்களின் நிதியுதவியாலும், பலவிதமான முயற்சிகள் எடுத்து நிதிதிரட்டி ஆலயம் திருக்குட நன்னீராட்டு மங்கள விழாவுக்கு தயாராகி 26.6.1977 அன்று காலை முதலாவது கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

அரசு நிலம் வழங்கி பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு திரு.சுப்பையா அவர்களின் கனவு நனவாகியது!

1982ல் (ஆலய வளாகத்தில் அமைந்துள்ள) நவக்கிரக சந்நிதி நிர்மாணிக்கபட்டு 9.7.1982ல் நவக்கிரகப் பிரதிஷ்ட மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 9.7.1989ல் இரண்டாவது கும்பாபிஷேகம் சைவத்திரு சாம்ப மூர்த்தி சிவாச்சாரியாரால் நடத்தப் பட்டது. அதுபோது ஆலய வளாகத்தினுள் மகாலட்சுமி தடாகம் ஒன்றும் நிறுவப்பட்டது.

அதன் பிறகு டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு அவர்களின் யோசனையின் பேரில் அவர்களாலேயே செயல்வடிவம் பெற்று பல மாற்றங்களுடன், மேலும் சில சீரமைப்புகள் செய்து ஆலயத்தை அழகுற அமைத்து, பக்தர்களின் நன்கொடையினாலும் வங்கி கடன் பெற்றும் 24.12.1998ல் ஆலயத்திற்கு அடுத்துள்ள இடத்தையும் ஒப்பந்தம் செய்து துப்புரவு செய்து நில வாஸ்து பூஜை 28.10.1999ல் நடத்தி, மூன்றாவது கும்பாபிஷேக விழாவின் யாகசாலை பிரம்மாண்டமாக அமைத்து (எங்களின் திருமண தினமான!) 3.6.2001 அன்று கும்பாபிஷேகமும் வெகு விமரிசையாக பெரிய விழாவாக நடந்தேறியது, இன்றளவும் மறக்க முடியாதது .

ராஜ ராஜேஸ்வரியின் ஆலயம் இருக்கும் இடம்:

SRI RAJA RAJESWARY TEMPLE
4 1/2 MILES,JALAN ULU KELANG
68000 AMPANG,
SELANGOR DARUL EHSAN.
MALAYSIA.

நன்றி: இராஜராஜேஸ்வரி திருக்கோயில் கும்பாபிஷேக மலர்


(இரண்டு வருடங்களுக்கு முன் தோழியர் http://womankind.yarl.net/archives/2004/10/22/280 வலைப்பதிவில் எழுதியது).

மீனா.

வெள்ளி, ஏப்ரல் 14, 2006

"புத்தாண்டு வாழ்த்துகள்"

புதிய நம்பிக்கையோடும்
புத்துணர்ச்சியோடும்
புதுப்பொலிவோடும்
நல்லதை செய்யவும்
நல்லதை நினைக்கவும்
நல்வழி காட்டவும்
இயற்கை வளம்
குன்றாதிருக்கவும்
பகை,போர்,பசி,பிணி
இல்லாதிருக்கவும்
உலகமெங்கும்
அமைதியும் நிம்மதியும்
பெருகவும் இறைவனை
வேண்டி அனவருக்கும்

"புத்தாண்டு வாழ்த்துகள்"

புதன், ஏப்ரல் 12, 2006

நடை அனுபவம்

கொஞ்ச நாளாவே நடக்கறதை நெறுத்திட்டேன் ஏன்? சோம்பேரித்தனமா இல்லை நேரமில்லாததாலா? என்னவென்றே தெரியலை இன்றுமட்டும் இன்றுமட்டும்னு ஒரேயடியா நெறுத்திட்டேன்.

இனி முடியாது மறுபடி தொடரணும் என்ற முடிவோடு இரண்டு நாள் முன் மீண்டும் நடைபயிற்சியை ஆரம்பித்துவிட்டேன்.

வழியில் எதிர்படுபவர்கள் 'ஹாய் என்று கைகாட்டுபவர்களும்,என்ன ரொம்ப நாளா ஆளைக்காணும் என்று புன்னகைக்கிறவர்களுமாய் 'என்ன முன்பு இருந்ததற்கு இப்போ மெலிஞ்சிட்டீங்களே?!இல்லையே அப்படியா தெரியுது!
(இரண்டுகிலோ கூடியிருப்பது எனக்குத்தானே தெரியும் ஹி ஹி)இப்படி சந்தோஷமாய்!

எத்தனை மாதங்களுக்கப்புறம் இந்தப் பக்கம் வருகிறேன், ஆனாலும் அங்கு ஒருவீட்டில்(என் சினேகிதர்கள்!)மூன்று நாய்குட்டிகள்(?)(என்ன ஒற்றுமை!) மறக்காமல் ஓடிவந்து கேட்டின் அருகே நின்று கொண்டு வாலை ஆட்டி ஆட்டி(இப்படி கூட வாலை ஆட்டமுடியுமா என்ன!) நாங்கள் உன்னை மறக்கவில்லை தெரியுமா என்பது போல் அவைகளின் அன்பை தெரிவிக்க,(ஒவ்வொரு நாளும் அவ்வீட்டைக் கடக்கும் போதும் சும்மா போக மாட்டேன் அவைகளைக் கூப்பிட்டு கொஞ்சிவிட்டுதான் போவேன்) ஒரு நாளாவது ஏதாகிணும் பிஸ்கட் கொண்டுவந்து கொடுக்கணும் என்று மனதில் நினைத்ததோடு சரி அதை போடப்போனால் அதன் உரிமையாளர்கள் விரும்ப மாட்டார்களே ஏதும் சொல்லிவிட்டால்)என் பங்கிற்கு நானும் கையை காட்டி அதற்குமேல் ஒன்றும் செய்யமுடியாது போய்க் கொண்டே இருப்பேன் ஒரு(பெரிய) சுற்று சுற்றி திரும்பவும் அங்கு வரும்போது சிறிது தூரத்திலேயே நான் வருவதை அறிந்து மீண்டும் உள்ளேயிருந்து குடுகுடுவென்று முன்பக்கம் வந்து தயாராய் வாலை ஆட்டிக் கொண்டு நிற்கும் அழகு!.

அப்பாடி நடக்க ஆரம்பித்தபிறகு என்ன சுகம் என்ன சுறுசுறுப்பு!கால்களில்மட்டுமல்ல,மொத்த உடம்பில், மனத்தில் எங்கிருந்துதான் இத்தனை உற்சாகம் வருகிறதோ!நடக்கிறதால எவ்வளவு ஆரோக்கியமான விஷயங்கள் இருக்கிறது!ஆனால் ஏனோ நிறையபேர் இதை ஒரு பெரிய வேலை(என்னன்னமோ வேலைகள் எல்லாம் செய்கிறார்கள்)என நினைத்து
ஒதுக்கி விடுகிறார்கள்.

எடை கூடிவிட்டது சாப்பாட்டை குறைக்கணும் அதை சாப்பிடக் கூடாது இதை சாப்பிடக்கூடாது என்று எல்லாத்தையும் குறைத்து கடைசியில் எதுவும் செய்யமுடியாமல் உடம்பில் சத்தில்லாமல் பலமிழந்து விடுகிறார்கள்,ஏன் இப்படி?
இவர்களுக்கு நான் சொல்வேன் காலையிலோ மாலையிலோ ஒரு நடை போய்விட்டு வாருங்கள் உடம்புக்கு மட்டுமல்ல
மனதிற்கும் நல்லது என்று, யார் கேட்கிறார்கள்.(ஏதோ விளம்பரத்திற்கு அட்வைஸ் பண்ணுவது போல் இருக்கோ? :))


அய்யய்யோ மழை ஆரம்பிச்சுருச்சே இனி எங்கே நடக்கிறது ஒரே ஓட்டம்தான்! :)

எத்தனை பேருங்க நடக்கிறீங்க? சொல்லுங்கள் உங்கள் நடை அனுபவத்தை

அனைவருக்கும் 'புத்தாண்டு வாழ்த்துகள்'

திங்கள், பிப்ரவரி 27, 2006

சிறுகூடல்பட்டி

சிறுகூடல்பட்டிக்கு மேலும் பெருமை சேர்த்துவிட்டது!
மதிப்பிற்குறிய கவிஞர் சக்திதாசன் அவர்கள் அளித்த வாழ்த்துப்பா!

சிறுகூடல்பட்டி தந்த
சிந்தனைச் செல்வனே !
சிறியதாயொரு கிராமமல்ல
சிறுகூடல்பட்டி
சிறப்புமிகு தலமே !
கவிபாடும் உலகில் குயில்
தந்த
காவியத்திரு ஊராம் கேளீர் !
தமிழன்னை புகழ்சொல்லும்
தலைமகனென்று மனம் துள்ளும்
கற்றவர் சபையும்
கண்தூக்கிப்பார்க்கும்
கவியரசன் என்னெஞ்சத்து
தேரிருக்கும்
கண்ணதாசனைத் தந்தவொரு
மண்ணன்றோ
கரம்கூப்பி வணங்கிடுவேன்
அவ்வூரை
அழகுமிகு பட்டுச்சேலைக்கு
கரைவைத்துப்
அலங்காரம் செய்கையில்
மிளிரும் சேலைபோல்
சுவையான தமிழிற்கு எம்
கவிஞன் தந்த
சுந்தரஎழில் கண்டு துள்ளாத
தமிழனும் உண்டோ?
தமிழர் நெஞ்சங்களில்
வரைபடமாய்
தங்கியிருக்கும்
சிறுகூடல்பட்டியே
மனமிறைந்து கவியரசன்
வணங்கும்
மலயரசித்தாயின் அருள்
மிகுஊராம்
தமிழ் வாழ்க, கவியரசன்
புகழ் வாழ்க
தங்கமகனையீன்ற
சிறுகூடல்பட்டி வாழ்க!

சக்தி
சக்திதாசன்


கவிஞர் சக்திதாசன் அவர்களுக்கு நன்றி மிகவும்


எத்தனை பெருமை எத்தனை பெருமை!
எங்களருமை கண்ணதாசனை ஈன்ற
என் ஊரை நினைக்கும் போதெல்லாம்
எனக்கெத்தனை பெருமை!

எங்களம்மா மலையரசி தாயே
எல்லோரையும் காத்தருள்வாயே

என்றும் அன்பு
மீனா.

திங்கள், பிப்ரவரி 20, 2006

யாரிவர்

இந்த அற்புதமான கவிஞரின் பல கவிதைகள் எனக்கு புரிந்து கொள்ள கடினமாய் இருக்கும்(கவிதை நல்லா ரசிப்பேன் அதுக்கு மேலே தெரியாதுங்க)ஆனாலும் எப்படியாவது புரிந்து கொண்டுவிட வேண்டும் என்று திரும்ப திரும்ப படித்து பார்ப்பது மிகவும் பிடிக்கும்!

அவரின் கவிதைகளில் ஒன்று:

'மாலை ஸ்பரிசம்'


அன்று கடல் அமைதியாக இருந்தது
ஆழத்தை மறைத்துப் போர்த்திய மேலாடை
தூரத்து கப்பலசைவால்
சிற்றலையாய் வந்து என்
பாதம் தொட்டபோது உன் ஆழம் புரிந்தது
புன்னகையில் உள்ளம் சொல்லும்
காதலியின் சிரிப்பு போல
அது கப்பலுக்கும் எனக்கும் கூட
தொடர்பைத் தந்தது
வின்னில் பறந்த மாலைக் கொக்குகள்
கிழித்த காற்றசைவு காதில் பட்டது
சொல்லாமல் சொல்லும் உன் காதற் சேதியாய்.
மரங்கள் தளிர்த்தன
மலர்கள் மலர்ந்தன
நாளைச் சூரியன்
வந்து தொடும்
சுகம் நினைந்து.
உள்ளுக்குள் பசித்தது.
பசிதான் வாழ்வு
பசிதான் நெருப்பு
நெருப்புதான் ஓட்டம்.
ஓட வைக்கச் சிரிப்பதும்
ஓடவைத்துச் சிரிப்பதும்
உன் வழக்கமெனினும்
இன்று
உன் புன்னகை
அது தரும் சுகம்
தூரத்துச் சிற்றலையாய்
கொக்கு கிழித்த காற்றாய்
மெல்ல வந்து
என்னைத் தொடும்
உன் நினைவாக
உன் ஸ்பரிசமாக.


இன்னொன்று:


கற்கள் நாங்கள்.
சில நீரை எதிர்த்து
பாறாங்கல்லாய் இன்னும்
நிற்கின்றன
எதிர்ப்பின்றி நீரின் ஓட்டத்தில்
ஓடிய போது கூர்முனை
மழுங்கி சுருக்கம் போய்
கல்லென்றே தெரியாவண்ணம்
வெண்ணைய் போல் உருண்டு திரண்டு
உன் கை ஒரு நாள் தீண்டும் சுகத்தில்
வெட்டவெளியில்
ஆற்றுப்படுகையில்
அலைகடற்கரையில்
அன்னாந்து பார்த்தபடி
நான்".

இக்கவிதைக்கான விளக்கத்தை அவரிடம் கேட்டால்..!

வாழ்வைக்குறித்த என் தேடல்கள் பல நேரங்களில் கவிதையாய் உருவெடுக்கின்றன.

கவிதையை ஆரம்பித்து வைக்கிறார் திருமங்கை ஆழ்வார்(கலியன்)பெற்ற தாயைவிட
இறைவன் செய்வான் என்பது துணிபு. உண்மையா?என்று கேள்வி வருகிறது.பெளதீகமாக
இல்லை என்ற விடை கிடைத்தவுடன்,ஏன் குறை நமக்கு வருகிறது என்ற கேள்வி போகிறது.
அப்போது ஒருபுதிய புரிதல் வருகிறது.ஏதாவது நாம் முதல் போட்டிருந்தால் லாபம் வரவில்லை
என்று அங்கலாய்க்கலாம் .எந்த முதலும் இல்லாமல் வாழ்வு ஒரு மாபெரும் பரிசாக நமக்கு
கிடைத் திருக்கிறது.ஒவ்வொரு நிமிடமும் லாபம்தான்.நட்டம் என்பதே இல்லாத ஒரு
சமாச்சாரம் வாழ்வு.

எல்லாமே-நமது துக்கம்,சுகம்,இனிமை எல்லாம் வரவுதான்.அவைதான் வாழ்வை ஓட்டுகின்றன.இப்படி
பார்க்கும் போது வாழ்வைக் குறித்து சலிப்புறும் மனது சமனப்படுகிறது.கனியன் பூங்குன்றன் சொன்ன
உவமை உடனே நினைவிற்க்கு வருகிறது.புனல் வருகிறது.பூங்குன்றன் வாழ்வைப் புனலில் மிதக்கும்
இலையென்றான்.எனக்கென்ன மோ 'நாம்' கல் போன்றவர்கள் என்று தோன்ற்கின்றது.எதையும் வருகின்ற
வழியில் ஏற்றுக் கொள்ளாததால்,எதிர்வினை கொடுப்பதால் 'கல்' பொருந்தும் என்று தோன்றுகினறது.வெறும்
பாராங்கல்லாய் சிலர்,கூழாங்கல்லாய் சிலர்,கூழாங்கல்லில் ஒரு சேதி இருக்கிறது.

இதுதான் என் கவிதை. என்று அதற்கான விளக்கத்தை அழகாக எடுத்து சொல்வார்!

இவர் யாரென்று தெரிகிறதா?

இங்கே சென்றுதான் பாருங்களேன் http://kavithai.rediffblogs.com/



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~


சமீபத்தில் படித்ததில் ஒரு கவிதை...!(மேலே உள்ள கவிதைகளுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லைங்க)

மீன் முள்
காலில் குத்த
துள்ளிக்குதித்த
என்பிள்ளையிடம்
கேட்டேன்
மீன்ஏன் துள்ளுகிறது?
பிள்ளைத்தமிழ் பேசியது:
மீனின்ஒரு முள்
குத்தியே நான்
குதித்து துள்ளீனேன்
இத்தனை
முள்ளும்மொத்தமாய்க்
குத்தினால்
ஏன்
துள்ளாது மீன்?

அப்துல் காதர்.----------

அன்பு மீனா.

சனி, பிப்ரவரி 18, 2006

தைப்பூசம்

சென்ற சனிக்கிழமையன்று (பிப்ரவரி 11) பினாங்கு தைப்பூசத்திற்கு சென்று வந்தேன் அதன் நினைவாக...

(சென்ற வருடம் 'மின்சுவடி'யில் எழுதியது)


தைப்பூசம் என்றவுடன் தண்ணீர்மலை முருகனின் முறுவலிக்கும் முத்தான முகம் மனதில்!தமிழ் மக்கள் மட்டும் இன்றி சீனர்களும் சேர்ந்து வணங்கும் கடவுள். அவன்மேல் முழு நம்பிக்கை வைத்து வணங்கி வழிபடுகிறார்கள். அவனும் அவர்கள் கேட்பதெல்லாம் உடனுக்குடன் வழங்கி திக்கு முக்காட வைக்கிறான்.

அவர்களும்தான் ஒவ்வொரு வருடமும் அன்னதானத்திற்கு மூட்டை மூட்டையாய் அரிசி, காய்கறிகள், பழங்கள், அவன் பவனிவரும் பாதையெல்லாம் (கொளுத்தும் வெயிலில் காத்திருந்து) கோபுரம்போல் குவித்த ஆயிரக்கணக்கான தேங்காய்கள் என (உடைத்து) தங்களின் அன்பைப் பொழிந்து அவனை மலைக்க வைத்து விடுகிறார்கள்.ஐயாயிரம், பத்தாயிரம் என்று அவன் ஊர்வலம் செல்லும் சாலை நெடுக குவியல் குவியலாய் எங்கு பார்த்தாலும் தேங்காய்கள்! அதன் மேல் கட்டுக் கட்டாய் ஊதுபத்திகள்! சாலையெங்கும் ஆறாக ஓடும் தேங்காய்த் தண்ணீர்!.

பினாங்கில் தைப்பூசத் திருவிழாவின் முதல்நாளை 'செட்டி(நகரத்தார்)பூசம்'எனச் சொல்வார்கள். பூசத்திற்கு இரண்டு நாள் முன் பினாங்கு ஸ்தீரீட்டில் உள்ள கோவில்(கிட்டங்கி) வீட்டில் நகரத்தார்களின் மயில்காவடிகளுக்கும், முருகப் பெருமானுக்கும் பூசைகள் செய்து வணங்கி வழிபட்டு, அடுத்த நாள் (பூசத்திற்கு முதல் நாள்) கோவில் வீட்டில் இருந்து அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ நகரத்தார்களின் காவடிகள் முன் செல்ல வெள்ளிரதத்தில் முருகப் பெருமானின் ஊர்வலம் புறப்படும்.

வழி நெடுகிலும் மக்கள் (ஏராளமான சீனர்களும்) அர்ச்சனைகள் செய்து முன் குறிப்பிட்டபடி பல்லாயிரக் கணக்கில் தேங்காய்கள் உடைக்க அங்கங்கே நின்று அவையெல்லாவற்றையும் அன்புடன் ஏற்று மெதுவாக வரும் ஊர்வலம் மதியம் 'காமாட்சியம்மன்' ஆலயம் வந்தடைந்து அன்னையின் ஆசி பெற்று அடுத்து, பக்கத்திலேயே எதிர்புறத்தில்'சிவன்' கோவில் வந்தடைந்து அய்யனின் ஆசியையும் பெற்று- அங்கு சிறிது நேரம் இளைப்பாற்றி மீண்டும் அங்கிருந்து தண்ணீர்மலைக்கோவிலை நோக்கி தன் ஊர்வலத்தை தொடருவார்!.

மதியம் ரதத்தின் கூடவே நடக்கும் பக்தர்களுக்கு (வெயிலில்) கால் சுடாமல் 'பினாங்கு நகராட்சி' சாலை நடுவே தண்ணீர் ஊற்றிக் கொண்டே செல்வது! (தேங்காய்த்தண்ணீரும் சேர்ந்து ஓடும்!) அந்த சூடுபறக்கும் சாலையில் காலணி அணியாமல் நடந்து கொண்டிருப்பவர்களுக்கு மிகவும் இதமாயிருக்கும்.ஊர்வலம் போகும் வழியெங்கும் தனியார் மற்றும், அரசாங்க நிறுவனங்களும் தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர், மோர், ஜூஸ், காப்பி, டீ உள்பட அன்னதான(மு)ம் வழங்குவதும், ஒவ்வொரு தண்ணீர்ப் பந்தல் வாசலிலும் சிறு சிறு செயற்கை நீரூற்றுகளும் அதன் மேல் விநாயகர், முருகர், அம்பாள், சிவன் என்று விதவிதமான தெய்வச் சிலைகளை வைத்தும்; சில தெய்வங்களுக்கு, பால் அபிஷேகம்! சாலையில் வண்ண வண்ணமாக, பெரிய பெரிய ரங்கோலியிட்டு!அன்று இரவு வெள்ளிரதம் தண்டாயுதபாணி கோவில் வந்தடைவதற்கு இரவு பத்தரை ஆகிவிடும்.



அதன்பின் சாமி இறக்கி ஆலயத்தின் உள்நடையில் நிறுத்தி பக்தர்கள்' இருவர் பாமரம்வீச பார்த்திருக்கும் அத்தனை பேரும் பரவசமடைய- பெரியவர் ஒருவர் கட்டியம் கூற (முருகனின்மேல் பாடுவார்) முருகன் கனிவோடு நின்று கேட்டிருக்க- பார்த்திருக்கும் அனைவருக்கும் அற்புதமான உணர்ச்சிகள் அலைமோத- தவறாது காணவேண்டும் இக்காட்சியை!. இரண்டாம் நாளான பூசத்தன்று காலையில் நான்கு மணியில் இருந்தே
காவடிகள் வர ஆரம்பிக்கும். பினாங்கு சிவன் கோவிலில் இருந்து பால்குடங்கள் புறப்பட்டு கால் நடையாக தண்டாயுதபாணி கோவிலுக்கு வந்து பால் குடங்களைî செலுத்துவார்கள்.நேரம் ஆக ஆக பால் குடங்கள், வித விதமான அழகான காவடிகளுடன் ஆடல் பாடலுடன் அவர்கள் வரும் அழகு!கோவில் கொள்ளாத கூட்டம்; கொண்டாட்டம்.அத்தனை பேரும் கீழே தண்டாயுதபாணியைத் தரிசித்து அதன் பிறகு எதிர்புறத் தில் மலைமேல் இருக்கும் பால தண்டாயுதபாணியை தரிசித்து செல்வர்.அன்று முருகப் பெருமானுக்கு மஹேஸ்வர பூஜை அபிஷேக ஆராதனைகள் நடந்து கொண்டிருக்கும் போது இன்னொருபுறம் குழந்தைகளுக்கு முடியிறக்கி தொட்டி கட்டுதல். (ஒரே சமயத்தில் ஐந்து ஆறு குழந்தைகளுக்கும் தொட்டில் கட்டுவார்கள்.) இரண்டு கரும்புகளை ஒன்றுசேர்த்து இரு புறமும் இருவர் பிடித்துக் கொள்ள பட்டுப் புடவைகளைக் கொண்டு அதில் தொட்டில் கட்டி (புடவையின் மேல் அழகாக பூச்சரங்கள் தொங்கவிட்டு) தொட்டிலுக்குள் குழந்தைகளைô படுக்கவைத்து சில குழந்தைகள் பலமாகì கத்தò துவங்க, சில குழந்தைகள் எந்தî சலனமும் இல்லாமல் சுகமாகò தூங்க அவரவர் சுற்றத்தார் சுற்றிலும் வர மேள தாளத்துடன் வரிசையாக  கரும்பு தொட்டில்கள் முருகனின் சன்னிதியைப்பிரகாரமாய் வந்து வேண்டுதலை நிறைவேற்று வார்கள். பகல் பன்னிரண்டு மணிக்கு ஆராதனையின் உச்சì கட்டமாக முருகனுக்கு தீபமாகி அதன் பின் அன்னத் திற்கும் (கோபுரம் போல் குவித்திருக்கும் சாதத்திற் கும்) மற்றும் சமைத்து வைத்திருக்கும் பாயசம், சாம்பார், ரசம், காய்கறிகள் வகைகளுக்கும் தீபம் காண்பிக்கும் போது (அன்னதீபம் பார்க்க வேண்டி அடங்காத கூட்டத்திற்குள் முண்டியடித்து) முன்வந்து நின்று அன்னதீபம் பார்ப்பதில் பரம திருப்தி!. இதற்கிடையில் பலர் மஹேஸ்வர பூஜை முடிந்து அன்னதீபம் காண்பிப்பதற்குள் மேல் கோவிலுக்குô போய்வந்து விடலாம் என்று கிளம்பி பால தண்டாயுதபாணியைò தரிசிக்கவென்று அங்கு செல்ல, அங்கேயும் அபிஷேகம் ஆரம்பிக்க (குடம் குடமாகô பால் அபிஷேகம்!) தரிசனம் காண வந்தவர்களில் சிலர் கீழே போய் அன்னதீபம் (மேலேயும் அன்னதீபம் அன்னதானம் உண்டு) பார்க்கவேண்டுமே என்பதையும் மறந்து அங்கேயே அமர்ந்து கண்கள்குளிரô பார்த்து அதன்பின் அவசர அவசரமாகச் செல்வர்; மற்றவர் மேலேயே அன்னதீபம் பார்த்துச் செல்வர்.அன்னதீபம் காட்டியபிறகுதான் சாப்பாடு. கோவிலுக்குள்(சொக்கட்டான் வடிவத்தில் அமைந்துள்ள
இடத்தில்) நாலாபுறமும் இலை போட்டுவந்திருக்கும் அவ்வளவு கூட்டத்திற்கும் இல்லையென்னாது மதியம் ஒரு மணிக்கு ஆரம்பிக்கும் சாப்பாட்டுô பந்தி மாலை நான்கு வரை தொடர்ந்து நடக்கும்.காவடிப் பிள்ளைகள் யாவரும் கலந்து கொண்டு உற்சாகமாக சளைக்காமல் பரிமாறுவார்கள்.நாள் முழுதும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் காவடிகள். கடைசிக் காவடி இரவு பன்னிரண்டு மணிக்கு வந்து அதனுடன் பூர்த்தியடையும் அன்றைய பொழுது. மூன்றாம் நாள் காலை('நகரத்தார்கள் பூசத்திற்கு முதல் நாள் இரவு தண்டாயுதபாணி ஆலயத்தில இறக்கி வைத்த ) காவடிகளுக்கு 'காவடிப் பாட்டுகள்' பஜனைகள் செய்து நல்ல நேரம் பார்த்து காவடி தூக்கி ஆலயத்தின் அருகில் எதிர்ப்புற சாலையில் அமர்ந்திருக்கும் முனீஸ்வரரின் சன்னிதியின் முன் (சாலையில்) சிறிது நேரம் (காவடி) ஆடி அதன் பிறகு தண்டாயுதபாணி ஆலயத்தின் முன்புறம் ஆடுவார்கள்; (ஆட்டம்) அற்புதமாயிருக்கும்! அதன் பின் உள்ளே பிரகாரத்தில் நான்கு மூலையிலும் சிறிது சிறிது நேரம், அப்படியே பிரகாரமாய் வேலின் முன் வந்து வரிசையாக சன்னிதிக்குச் சென்று காவடியை தண்டாயுதபாணிக்குச் செலுத்துவார்கள். அப்படிக் கொண்டு செலுத்துவதற்குள் அவர்கள் ஒவ்வொருவரும் "முருகா முருகா" என்று துடிக்கும் துடிப்பு!.(பூசத்திற்கு முதல் நாள் இரவு கோவிலுக்குள் வந்த காவடிப் பிள்ளைகள் மூன்றாம் நாள் காவடி செலுத்திய பின்தான் வெளியில் வருவார்கள்) அதன் பிறகு தான் அவர்கள் எல்லோரும் குடும்பத்தாருடன் மலைக்குச்சென்று எந்த இடையூறும் இல்லாமல் நல்லபடியாக காவடி தூக்கிவர துணை நின்ற பால தண்டாயுதபாணிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து சிதறுதேங்காய் உடைத்து நன்றி தெரிவித்து தரிசனம் பார்த்துò திரும்புவார்கள். அன்று இரவு ஏழு மணிக்கு ஆலயத்தில் இருந்து முருகப் பெருமான் வெள்ளி ரதத்தில் புறப்பட்டு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடவர இரவு முழுதும் கோலாகலமாக வழியெங்கும் தேங்காய்கள் உடைத்து அர்ச்சனைகள் செய்து காலை ஏழு மணிக்கு மீண்டும் பினாங்கு ஸ்திரீட்டில் உள்ள கோவில் வீட்டை வந்து சேர்வார்.பினாங்கு'தைப்பூசம்' அவசியம் ஒரு தடவையாவது பார்க்க வேண்டும்.
எல்லோரும் தண்டாயுதபாணியின் அருள் பெற வேண்டி பிரார்த்திக்கிறேன்! அன்பு மீனா.