திங்கள், டிசம்பர் 10, 2007

மலைக்கோட்டை

என்னவோ இப்போதெல்லாம் ஒண்ணுமே எழுத தோணலை. தோணலைன்னு சொல்லிகிட்டே தோணறதை எழுதலாம்னு...

ஒரு வாரமா தொண்டை வலி,வரட்டு இருமல் இப்படி ஒரேயடியா படுத்துது.விடாத மழை காரணமா இல்ல யாருகிட்டெ இருந்தாவது ஒட்டிகிச்சா தெரியலை.

எது எப்டி இருந்தாலும் அதோடே ஒரு வாரமா வீட்லயும் வெளியிலெயுமா ஒரே விருந்துதான்!இன்னைக்கு எல்லோரும் அங்கயும் இங்கயுமா சென்றதும் வீடு வெறிச்சென்று அமைதியா இருக்கு.

எழுத வேண்டியதெல்லாம் அப்படியே கிடக்குது நேத்து மதிய சாப்பாடுக்கப் புறம் போரடிச்சுப்போயி டிவியை தட்டினா அப்பத்தான் சரியா 'வெள்ளித்திரை' யில் ஆரம்பிச்சிருந்திருந்தது விஷால் நடிச்ச'மலைக்கோட்டை' என்ன்ன்ன படம்மப்பா இப்பல்லாம்! நாயகன் பஸ்ல போயி கிட்டுருக்கானாம் அது ஒரு இடத்துல போக்குவரத்து நெரிசல்ல மாட்டி கிட்டு அப்படியே நின்னுடுதாம் அந்த இடத்துல ரோட்டோரத்துல ஒரு வீடாம் அந்த நேரம் பாத்து தேவதை போன்ற பெண்ணொருத்தி அந்த மொட்டை மாடிக்கு வந்து காக்காக்கு(அதோடு கொஞ்சி கொஞ்சிப்பேசிகிட்டு )சோறு வக்கிறாளாம் நம்ப நாயகன் அதைப்பாத்து அப்படியே மயங்கி... (அட பொங்கப்பா...)அடடா டா டா டா.. இப்படியே இப்படியே... என்ன கதை! என்ன கதை!! நான் ஒண்ணும் சொல்ல்லல்லப்பா...

சனி, அக்டோபர் 06, 2007

வறட்டி தட்டிய கதை!

எனக்கு திருமணம் ஆன புதிது!

எங்கள் வீட்டில் மூன்று பசுக்கள், இரண்டு கன்னுகுட்டிகள் இரண்டு ஜோடி காளை மாடுகள் இருந்தன. பெரீய மாட்டுக் கொட்டகை.
தினமும் காலையில் கன்னுவிட வரும் காளியண்ணன் வந்து கன்னு குட்டிகளையும் சிறிது நேரம் அதன் அம்மாக்களிடம் அவிழ்த்து விட்டு அதன் பிறகு பால் கறந்து வைத்து விட்டு போய் விடுவார்.அதன் பிறகு வேலை செய்யும் பெண் வந்து கன்னு குட்டிகளையும் பசுக்களையும் பிடித்து கட்டி விட்டு (காளை மாடுகள் காலையிலேயே அதுகளின்(ஆபீஸ்!) வேலைகளை பார்ப்பதற்கு வயலுக்கு போய்விடும்) மாட்டுக் கொட்டகையை சுத்தம் செய்ய ஆரம்பிப்பாள்.

காய்ந்த சாணிகளையெல்லாம் அள்ளி வயலுக்கு எடுத்து போகும் குப்பையில் கொட்டி விட்டு மற்றவைகளை அள்ளி வந்து அதற்கான பத்தியில் கொட்டுவாள் பிறகு வாளியில் தண்ணி எடுத்து அதை கொஞ்சம் கொஞ்சமாக சாணியில் ஊற்றி சேர்த்து வெகு லாவகமாக விளாம்பள அளவு உருண்டைகளாக வெகு லாவகமாக(!) கையை திருப்பி திருப்பி சாணியை உருட்டி(அப்போது வரும் டப் டப்பென்று சத்தம் ஏதோ பாட்டுக்கு தாளம் போடுவது போல்! ) உருட்டி ஒரு அகலமான ஏந்தினால் போன்ற கூடையில் நெல்லு உமியில் போட்டு உருட்டி உருட்டி அதே போன்ற இன்னொரு கூடையில்(அவையெல்லாம் இப்போது வெறுமனே உபயோகமில்லாமல் கிடக்கிறது) போட்டு மொத்தமாக பத்தியின் இந்த கடைசியில் கொண்டு வந்து அழகா நேருக்கு நேரா ஒரு வரிசைக்கு ஏழு ஆக 20 ,25 வரிசை தட்டி விடுவாள்! வரிசை எந்த பக்கம் இருந்து பாத்தாலும் அழகா இருக்கும்! தினமும் அவள் இதையெல்லாம் செய்யும் நேர்த்தியை அதிசயமா பார்த்து ரசிப்பேன்!
மாட்டிக் கொண்டேன் ஒரு நாள்... !

நான்கு நாட்கள் சேர்ந்தார்ப்போல அந்த பெண் என்ன காரணமோ என்னவோ வராமல் இருந்து விட்டாள். பார்த்தார்கள் என் மாமியார் இனி சுத்தம் செய்யாமல் இருக்க முடியாது என்று அவர்களே ஆரம்பித்து விட்டார்கள் அந்த வேலையை! அப்போது மாமியார் என்ன வேலை செய்தாலும் கூட மாட செய்யணும் இல்லையென்றால் எல்லாவற்றையும் இழுத்து போட்டு நாமே செய்யணும் என்று எனக்கு சொல்லிக் கொடுக்க பட்டிருந்தது! எல்லாம் அவங்க கிட்ட நல்ல பேர் எடுக்கத்தான்(நல்லபேர் எனக்குமட்டுமில்லே எங்கம்மாக்கும்! நல்லா வளர்த்திருக்காங்கன்னு:))

அடுத்த இரண்டு நாட்களும் என் மாமியார்தான் செய்தார்கள்.அவங்க மாட்டு கொட்டகை மட்டும் சுத்தம் செய்திருந்தால் பரவாயில்லை.. வரட்டியும்ல தட்டினாங்க! அதான் அதான் எனக்கு என்ன செய்றதுண்ணு தெரியலை இரண்டு நாளும் கப் சிப்பென்று கண்டுக்காம இருந்திட்டேன் அப்புறம் மூணாவது நாள் பாருங்க.....

அன்னைக்குன்னு பாத்து பக்கத்து வீட்டுக்காரம்மா வந்தவங்க சும்மா இருக்கக்கூடாதா 'என்னதுது வேலை செய்யும் பெண் வரலைன்னா வேற யாரையும் செய்ய சொல்லக் கூடாதா வேகாத வெயில நீங்க ஏன் செய்யணும்'? ங்க அவ்வளுவுதான் யாராவது கேக்க மாட்டாங்களாண்ணு இருந்தவங்களு க்கு தோதாப்போச்சு 'ஆமா இங்க யாரு செய்ரம்கிறா நாந்தான் செய்யணும் இதெல்லாம் செய்றதுக்கு வேற யாரு இருக்கா? நம்மவுட்டு பொண்ணா இருந்தா செய்யுங்க மத்தவங்கள்ளாம் செய்வாங்களா' என்று பொறும ஆரம்பிச்சிட்டாங்க.

அவங்க என்னைத்தான் சொல்றாங்கன்னு நல்லாவே தெரிஞ்சது, அவ்வளவுதான் தப்பு செய்திட்டமோன்னு பயந்தே போயிட்டேன், இவரும் அங்கு இல்லை தொலை தூரத்தில் படிச்சிட்டிருந்தார் (அய்யோ பாவம் சின்னபொண்ணு நானு:( :) ஆறுதலுக்கு யாரும் இல்லை ராத்திரியெல்லாம் தூக்கமே வரலை.

அடுத்த நாளும் அந்த பெண் வரலை. பார்த்தேன் என்ன ஆனாலும் பரவாயில்லை நாமளே களத்துல இறங்கிடுவோம்ணு காலையிலேயே பெரிய தட புடலா கூடையென்ன விளக்குமாறு என்னன்னு எடுத்துகிட்டு புடவையை ஒரு பக்கமா இடுப்பில சொருகி கிட்டு மாட்டுக் கொட்டகைக்கு போனதை எதிர வந்த காளியண்ணன்"என்னா ஆச்சி பண்ணப் போறிய?பெரியாச்சி எங்க'?ன்னு கேட்டுகிட்டே ஒரு மாதிரி என்னை பாத்து கிட்டே உள்ள போனாரு.

அங்க மாட்டுகொட்டகையில பாத்தா...வண்டி வண்டியா சாணி! 'சே என்ன மாடுங்க இதெல்லாம் இவ்வளவு சாணியா போடுங்க என்று மனதுகுள்ள நொந்துகிட்டே எப்படி எடுக்கிறதுண்ணு யோசிச்சு அங்கே கீழே ஒடஞ்சு கிடந்த ஓ(ட்)டை எடுத்துகிட்டு அதனாலே சாணிய எடுக்க பாத்தா ம்ஹூம்.. அது எங்கே எடுக்கவா வந்துச்சு! சாணி கிட்ட ஓட்ட வச்சு கரண்டியால எடுக்கற மாதிரி எடுத்தா எடுக்க எடுக்க அது தள்ளி கிட்டே போகுது! பின்னாடியே நானும்...! கடைசியிலே சுத்து சுவர் கிட்டே வந்துதான் நின்னுச்சு! !அப்பாட எடுத்துட்டேன்! கொஞ்ச தூ..ரத்துல இருக்கு அந்த சுவர், ஓவ்வொரு தடவையும் அந்த ஓரத்துக்கு கொண்டு போய் எடுக்கறதுண்ணா எப்படி?

இப்படியே கொஞ்ச நேரம் அவஸ்தை பட்டுட்டு இப்படி சுவரை தேடி ஓடிட்டு இருந்தா இரண்டு நாளாகும் எடுத்து முடிக்க! இது ஆகாதுன்னுட்டு ஒரு வழியா (கைக்கும், மனசுக்கும் சங்கடப்படக்கூடாது இதெல்லாம் புனிதமானது என்று பலவிதமா எடுத்து சொல்லி ) கொஞ்சம் கொஞ்சமா கூடையில நிரப்பி (இந்த மாடு வேற என்னாட்டமா நா அதைப் பாக்குற மாதிரியே ஓரக்கண்ணால என்னை பாத்துட்டே இருந்துச்சு! அது வேற பயம்!) உள்ள கொண்டு வந்து கொட்டி ஒரு தடவைக்கு ஒருக்கா கையை கழுவி காலை கழுவி சிலிப்பர் எல்லாம் மிதித்து ஒவ்வொரு தடவையும் அதை வேறு கழுவி இதெல்லாம் செஞ்சு முடிக்கிறதுக்கே யப்பா போதும் போதும்னு ஆகிடுச்சு!.

அதுக்கப்புறமா அதை கூட்டி பெருக்கி! அவ்வ்வ்வளவு நேரம் ஆச்சு! இப்ப பாக்கணுமே ஆஹா! மாட்டுக் கொட்டாய் சும்மா பள பளண்ணு! என்ன இருந்தாலும் எங்க மாமியாருக்கு இப்படியெல்லாம் பளிச்சின்னு செய்ய தெரியலை!.

அப்புறம்தான் கதை! கொட்டிவைத்துள்ள சாணியை எல்லாம் தண்ணி ஊத்தி பிசையணுமே? தலையை சாச்சி அடுப்படி பக்கம் எட்டி பாத்தேன் ஏதோ எங்க மாமியார் இப்பவாவது வந்து பரவாயில்லை நீ எந்திரி இனி நான் செய்றேன் னு சொல்வாங்களாக்கும்னு.. அவங்க ஆளையே காணும், வெயிலு வேற மண்டைய பொளக்குது.. என்ன பன்றது சாணியை குச்சி கம்பு அது இதுன்னு என்னல்லாமோ வச்சு கலக்கப் பாக்குறேன் ஒண்ணும் முடியலை சரின்னு தண்ணி உமியெல்லாம் போட்டு கையாலேயே பிசைந்து(அந்த பெண் செய்தது கண் முன் தெரிய) பந்து விளையாடுவது போல தூக்கி போட்டு பிடிக்க குந்தியிருந்த என் மடியில சாணி உருணடை விழ 'போச்! அப்பத்தானா
தலை, மூக்கு, காது எல்லாம் ஒட்டு மொத்தமா மாத்தி மாத்தி அரிக்கணும்! வாளிக்குள்ள இருந்த தண்ணீல கைய கழுவி கழுவி அது சாணியா தண்ணியான்னு தெரியாம உருமாறி! நானும்தான்! எப்படியோ வெற்றிகரமா வரட்டி தட்டி முடிச்சேன்! .

அன்னைக்கி தட்டின வரட்டி முழுக்க( சன் டிவியில'அன்புடன்' புரோகிராமில் கடைசில விருந்தாளிங்களை கை முத்திரை பதிக்க சொல்வாங்களே கௌதமி! )அப்படி அச்செடுத்த மாதிரி என் கை முத்திரை! தமாஷா இருந்துச்சு!
ஆனா மாமியாரோ நா வறட்டி தட்டிருக்க அழக பாத்து.. “இப்படியா தட்டுவாக என்ன இருந்தாலும்......' யாரிடமோ என்னை பாராட்டிட்டிட்டு இருந்தாங்க :(
ஆனாலும் உள்ளூர மாமியாருக்கு ஒரே சந்தோஷம்! (அது போதுமே :)
அதுக்கப்புறம் நாலைந்து நாட்கள் அந்த கம கம வாசத்தோடதான் சுத்திட்டு இருந்தேன் :)))

அன்னைக்கு பாதி வறட்டி தட்டிகிட்டு இருந்தப்போ என் தாய்விட்டு உறவினர் வர,நான் இருந்த கோலத்தைப் பாத்து "என்னடி தினமும் நீதானா இதெல்லாம் செய்வாய்?"(கண்டதே காட்சி... :) நான் என்ன மறுத்தும் அப்படியே எங்கம்மா கிட்ட போய் சொல்ல ..

“எம்பொண்ண எப்படியெல்லாம் வளத்தேன்... அப்டி இப்டின்னு......
மத்தவங்க கிட்ட சொல்லி மூக்கை சிந்த அது எங்கெல்லாமோ சுத்தி எங்கல்லாம் போனேனோ அங்கெல்லாம் என்கிட்ட துக்கம் விசாரிக்கிற மாதிரி எல்லோரும் கேட்க இப்படியாக ஊர் முழுக்க தெரிஞ்சு போச்சு நான் வறட்டி தட்டுன கதை! :))