நவராத்திரி நாயகி:
அன்னையர்களுக்கெல்லாம் அன்னையான அவளை நினைத்து...
எங்களின் வீட்டிற்கு அருகில் குடி கொண்டிருப்பவள் பற்றித்தான் எழுதியிருக்கிறேன்.
'ஆயிரம் நாமத்தால் அர்ச்சனை செய்தாலும்
அன்னை உந்தன் பெருமை சொல்லத்தரமோ
ஆயுளும் யோகமும் ஐஸ்வர்யம் யாவும் உன்
அன்பினால் கடைக்கண் பொழி அருளே - திருவே..
ஸ்ராவண பௌர்ணமி முன் சுக்கிரவாரத்தில்
சௌந்தர்யவதி உன்னை ஸ்ரத்தையாய் பூஜிக்க
தேவாதி தேவரும் தேடி வருவார் தேவி
உந்தன் திருவருளை நாடி வருவார்
ஸர்வா பரணமொடு காஷி தருவாய்
மன ஸஞ்சலங்கள் துடைத்து ஆட்சி புரிவாய் - திருவே செந்திருவே..'
பீம்ப்ளாஸ் ராகத்தில் அமைந்திருக்கும் இந்தப் பாடல் பாடும் பொழுதெல்லாம் குளமான கண்களுக்குள் ராஜேஸ்வரி அமர்ந்திருப்பாள்!
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஆலயம் சிறிய குன்று(மலை)மேல், ஆற்றின் கரையோரம் அற்புதமான அழகுடன் இயற்கை சூழலில் அமைந்திருக்கிறது.
இங்கு வருடம்தோறும் நவராத்திரி கொண்டாட்டம் பிரமாதப்படும் இந்தப் பத்து நாளும் கோயில் திருவிழாக் கோலத்துடன் ஜொலிக்கும் கொலுவின் நடுநாயகமாக பெரிய உருவத்தில் திருப்பதி ஏழுமலையான் தத்ரூபமாக கொலு மண்டபத்தில் எழுந்தருளியிருப்பார்,அம்பாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்துடன் அழகாக காட்சி தருவாள், நாட்டியம், வீணை, வயலின், பாட்டு என ஒவ்வொரு நாளும் கோவிலுக்குச் சென்று இன்றைக்கென்ன அலங்காரத்தில் அன்னை இருப்பாள், யாரின் நாட்டியம், பாடுவது யார், இன்று வயலினா, வீணையா வாசிக்கப் போவது யார் என அறிய ஆவலாக போய்ப் பார்க்க மனதிற்கு ரெம்ப மகிழ்ச்சியாக ஆனந்தமாக இருக்கும்.
ஒரு கோவிலைப் பற்றி சொன்னால் அங்குள்ள குருக்கள் பற்றியும் கண்டிப்பாக சொல்லத்தான் வேண்டும்.
தினமும் அம்மனுக்கு அலங்காரம் செய்யும் ரமேஷ் குருக்கள் கைகளில் அப்படி என்ன சக்தி இருக்கோ தெரியாது மூலஸ்தானத்தில் அம்பாளின் அழகை ரஸித்து அடுத்து கீழே கொலுமண்டபம் சென்றால் அங்கு வேறொரு அலங்காரத்தில்! விதவிதமாக ஒவ்வொரு நாளும் அவரின் கைவண்ணத்தில் தோற்றமளிக்கும் அம்பாள் இருக்கும் அழகு!.
நவராத்திரி சமயம் பலவிதப் பழங்களைக் கொண்டு மாலையாகக் கட்டி அவளுக்கு அணிவித்து அவர் செய்யும் அலங்காரம்(!) கணீரென்ற குரலில் அவர் (மட்டுமல்ல இன்னும் மற்ற குருக்களும் அவர்களும் மிகச் சிறந்தவர்கள்) செய்யும் அர்ச்சனை (பாடும்) அந்தாதி! அத்தனையும் நம்மை மெய்மறக்கச் செய்துவிடும்!
தவிர்க்க முடியாத தருணத்தில் அவர் ஊர் சென்றிருக்கும் சமயம் இங்கே அம்பாளின் முகத்தில் அவரின் பிரிவு தெரியும்!.
அவரைப் பற்றிய சிறு குறிப்பு:
அலங்காரபூஷணம் அருள்ஞானமணி (இவருக்கு திருமுருக கிருபானந்த வாரியார் கொடுத்த பட்டம்), சந்தனகலா சிற்பி கம்பீரகானமணி (Dr.வான்மீகிநாத ஸ்தபதியினாலும், இங்கு ராஜேஸ்வரி கோவில் தலைவரினாலும் கொடுக்கப்பட்டது),சென்னை குமரக்கோட்டம் ஸ்தானிகர் சேகல் (சொந்த ஊர்) சுந்தரமூர்த்தி கைங்கர்ய சபா ஸ்தானிகர் சிவஸ்ரீ ரமேஷ் சிவாச்சாரியார்(!) என்பவர்தான்!. படித்தது திருச்சிமாவட்டத்தில் உள்ள அல்லூரில், குரு விஸ்வாநாத சிவாச்சாரியார். இத்தனைக்கும் இவர் ஒன்றும் அப்படி வயதானவர் இல்லை), எல்லாம் ராஜேஸ்வரியின் கருணையோ! அப்படித்தான் இருக்கும். ஏனென்றால் ரமேஷ்க் குருக்கள் மட்டுமல்ல இன்னும் அம்பாளுக்கு சேவை செய்ய இந்த கோவிலுக்கு வரும் எல்லோருமே எல்லா விதத்திலும் சிறந்தவர்களாகத்தான் திகழ்கிறார்கள். அதோடு அங்கு எந்நேரமும் அத்தனை பேரும் மகிழ்ச்சியுடனும் மலர்ந்த முகத்துடனும் சேவை செய்வதைப் பார்க்கும் போதே தெரியும் அவள் எவ்வளவு கருணை உள்ளவள் என்று!
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆலயத்தின் நுழைவாயிலில் இருபத்தைந்து படிகள் ஏறி மேலே வந்தால் பளிச்சென்று காற்றோட்டத்துடன் விசாலமான பிராத்தனை மண்டபம்! (உள்ளே நுழைந்தவுடன் மனதில் ஏற்படும் அந்த உணர்வு! வந்து பாருங்கள் தெ(பு)ரியும்) கோயிலின் அடித்தளத்தில் கல்யாண மண்டபம் அதன் மேல்த் தளத்தில்த்தான் ஆலயம் அமைந்திருக்கிறது. மண்டபத்தின் உள்ளே ஆலயத்தின் பிரதான கருவறையின் இடப்பக்கத்தில் சித்திவிநாயகராக வீற்றிருக்கிறார் ஐந்து கரப் பெருமான். ஆலயத்தின் மற்ற திருமேனிகளைப் போலவே இந்தத் திருமேனியும் தமிழகத்தின் புகழ் பெற்ற சிற்பி தேவகோட்டை முத்துக் கருப்பரால் ஒற்றைக் கருங்கல்லில் செதுக்கப் பட்டதாகும்! 1977ல் நிகழ்ந்த முதல்த் திருக்குட நன்னீராட்டு மங்கள விழாவில் இத்திருமேனி பிரதிஷ்டை செய்யப் பட்டது.
சித்திவிநாயகரைச் சுற்றி வலம் வரும்போது முதலில் காட்சி அளிப்பவர் விஷ்ணு துர்கை என வழங்கப்படும் அன்னை துர்காதேவி, தொடர்ந்து வலம் வர (பிரதானக் கருவறையின் வலப்பக்கம்) இங்கு காட்சி அளிப்பவர் (பாலசுப்பிரமணியனாக அருள்பாலிக்கும்) திருமுருகப்பெருமான் ஆவார். அடுத்து பிரார்த்தனை மண்டபத்திற்கு வரும் படிக்கட்டுகளின் எதிரே மூலஸ்தானம், வாயிலில் துவாரபாலகர்கள் (தூய வெண்கற்களில்) இருவருடனும், எதிரே ஏற்றமுடன் காட்சியளிப்பது பொற்றாமரையின் மேல் அமர்ந்த நிலையில் சௌந்தரவல்லியாக உலகநாயகி ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரித் தாயார்.
பிரார்த்தனை மண்டபத்தின் இருபுறமும் இரு சிறிய மண்டபங்கள் உள்ளன, மூலஸ்தானத்தின் இடப்புறம் உள்ள ராஜேஸ்வரி மண்டபத்தில் ஸ்ரீகணேசர், ஸ்ரீதுர்கை, வள்ளிதெய்வானை சமேதரராய் ஸ்ரீ முருகப்பெருமான் வீற்றிருக்கின்றனர். வலப்புறம் உள்ள நடராஜ மண்டபத்தில் சண்டிகேஸ்வரராக சிவபெருமான், சிவகாமி சமேதரராய் நடராஜர், நாயன்மார்கள் நால்வர் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். கீழே ஆலயத்தின் இடப்பக்கம் வெளிப் பிரகாரத்தில் ஆற்றின் ஓரத்தில் நவக்கிரக நாயகர்களுக்கென்று தனி திருக்கோயில் அமைந்திருக்கிறது.
நவக்கிரக சந்நிதிக்கும் ஆற்றுக்கும் இடையில் அரசமரம் ஒன்று ஆலயத்தின் மேல் குளு குளுவென்று தன் நிழலைப் பரப்பிக் கொண்டு கம்பீரமாக நிற்பது, ஆற்றின் இருபக்கமும் (கோயிலின் உள்ளே) செண்பக மரங்களும், கரும்பும், நவக்கிரக மூலஸ்தானத்திற்கு வலப்புறம் பெரி(ய்)யநாவல் மரம் ஒன்று(!) மஞ்சள் பூக்களுடன் பழங்களுடன் பசுமையாக கிளை பரப்பி நிற்பதும் (கொட்டிக் கிடக்கும் பழங்களைப் பொறுக்கி ஒட்டியிருக்கும் மண்ணை ஊதும் போது ஔவையும், ஆடுமேய்க்கும் முருக(சிறுவ)னும் நினைவில் வருவது!) கருவறையின் முன்புறம் வில்வமரம் ஒன்று உயர்ந்து அடர்ந்த கிளைகளுடன், கோவிலின் உட்புறம் வன்னி மரங்களும், ஆலயத்தின் இடப்பக்க நுழைவாயிலுக்கும் கோயிலின் வெளிப்பிரகாரத் துக்கும் இடையில் இருவேப்பமரங்கள் இம்மரங்களின் கிளைகள் அம்பாளின் மூலஸ்தானத்திற்கு மேல் குடைபோல் படர்ந்து இருப்பதும் அதிசயம்! அற்புதம்! அழகு!.
மலேசியா வருபவர்கள் அவசியம் ராஜராஜேஸ்வரியை தரிசித்துச் செல்லவேண்டும் அவசியம் வாருங்கள் (அப்படியே எங்கள் வீட்டிற்கும்?) இது என் வேண்டுகோள்.
===o===
இவ்வளவு சொன்னவள் இக்கோயிலின் வரலாறு சொல்ல வேண்டாமா?
ம.இ.க.அம்பாங் கிளையின் அன்றைய தலைவரும், அம்பாங் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான திரு சுப்பையா அவர்கள் 19.11.1956 அன்று இராஜராஜேஸ்வரி ஆலயம் எழுப்ப அம்பாங் சாலையில் நான்காம் மைலில் இருந்த நிலத்தை வழங்கக் கோரி அம்பாங் மாவட்டத் துணையதிகாரிக்கு எழுதிய கடிதம்தான் ஆலயம் உருவாகக் காரணம்! ஆனால் அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டது, ஆனாலும் ஒரு மாற்று நிலத்தை அடையாளங்காட்டி மூன்று வருடங்கள் விடாது தொடர்ந்து செய்த அவரின் பெரு முயற்சி வெற்றியளித்தது!மாநில முதல்வர் நிலம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளார் என்ற செய்தி 1.6.1959 தேதியிட்டு கோலலம்பூர் நில அலுவலகத்தில் இருந்து அனுப்பிய கடிதம் மூலம் உறுதியானது.
அதன் பிறகு மூன்று வருடங்களில் ஜாலான்(ரோடு) உலுகிளாங்-கில் (என்வீடும் இருப்பது!) இருந்த 1/3ஏக்கர் நிலம் 5.11.1962 அன்று முறையாகப் பதிவு செய்யப்பட்டது. அதுவே இன்று ஆலயம் அமைந்திருக்கும் நிலமாகும். அதன் பிறகு பத்து வருடங்கள் கழித்து 1972ல் ஆலயக் கட்டடக் குழு அமைக்கப் பட்டு பதிவு செய்யப்பட்டது, அன்னை மாரியம்மன் பெயரில் ஆலயம் எழுப்ப1973ல் நிதி வசூல் செய்து, பின்னர் மலாயாப் பல்கலைக்கழக இந்தியத் துறையின் அன்றைய பேராசியர் கோ.சுந்தரமூர்த்தி அவர்களின் ஆலோசனைக்கிணங்க ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி ஆலயம் எனும் பெயரோடு, தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ் பெற்ற ஸ்தபதி திரு.இராமசாமி அவர்களின் தலைமையில் நிர்மாணிப்புப் பணி தொடங்கியது.
அன்றே சுற்று சூழல் அழகுற அமைய பயன்தரும் மரங்கள் பூச்செடிகள் நடப்பட்டு அவை இன்று சோலையின் நடுவே அமைந்த ஆலயமாகப் புகழ் பெற்றுவிட்டது!
15.11.74 அன்று ம.இ.கவின் அன்றைய தேசியத் தலைவரும் தொழில் அமைச்சருமான டான்ஸ்ரீ டத்தோ வே.மாணிக்கவாசகம் அவர்கள் அடிக்கல் நாட்ட கட்டடவேலை தொடங்கி டத்தோ டாக்டர் பி.டி.அரசு, டத்தோ வி.எல்.காந்தன் ஆகியோரின் முயற்சியில் சிலாங்கூர் மாநில முதல்வர்களின் நிதியுதவியாலும், பலவிதமான முயற்சிகள் எடுத்து நிதிதிரட்டி ஆலயம் திருக்குட நன்னீராட்டு மங்கள விழாவுக்கு தயாராகி 26.6.1977 அன்று காலை முதலாவது கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
அரசு நிலம் வழங்கி பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு திரு.சுப்பையா அவர்களின் கனவு நனவாகியது!
1982ல் (ஆலய வளாகத்தில் அமைந்துள்ள) நவக்கிரக சந்நிதி நிர்மாணிக்கபட்டு 9.7.1982ல் நவக்கிரகப் பிரதிஷ்ட மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 9.7.1989ல் இரண்டாவது கும்பாபிஷேகம் சைவத்திரு சாம்ப மூர்த்தி சிவாச்சாரியாரால் நடத்தப் பட்டது. அதுபோது ஆலய வளாகத்தினுள் மகாலட்சுமி தடாகம் ஒன்றும் நிறுவப்பட்டது.
அதன் பிறகு டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு அவர்களின் யோசனையின் பேரில் அவர்களாலேயே செயல்வடிவம் பெற்று பல மாற்றங்களுடன், மேலும் சில சீரமைப்புகள் செய்து ஆலயத்தை அழகுற அமைத்து, பக்தர்களின் நன்கொடையினாலும் வங்கி கடன் பெற்றும் 24.12.1998ல் ஆலயத்திற்கு அடுத்துள்ள இடத்தையும் ஒப்பந்தம் செய்து துப்புரவு செய்து நில வாஸ்து பூஜை 28.10.1999ல் நடத்தி, மூன்றாவது கும்பாபிஷேக விழாவின் யாகசாலை பிரம்மாண்டமாக அமைத்து (எங்களின் திருமண தினமான!) 3.6.2001 அன்று கும்பாபிஷேகமும் வெகு விமரிசையாக பெரிய விழாவாக நடந்தேறியது, இன்றளவும் மறக்க முடியாதது .
ராஜ ராஜேஸ்வரியின் ஆலயம் இருக்கும் இடம்:
SRI RAJA RAJESWARY TEMPLE
4 1/2 MILES,JALAN ULU KELANG
68000 AMPANG,
SELANGOR DARUL EHSAN.
MALAYSIA.
நன்றி: இராஜராஜேஸ்வரி திருக்கோயில் கும்பாபிஷேக மலர்
(இரண்டு வருடங்களுக்கு முன் தோழியர் http://womankind.yarl.net/archives/2004/10/22/280 வலைப்பதிவில் எழுதியது).
மீனா.
6 கருத்துகள்:
அம்மா
ராஜராஜேஸ்வரியை நேரில் தரிசித்த திருப்தி :) அடுத்தமுறை வரும்போது அவசியம் என்னை அழைத்துச்சென்று காமியுங்கள் :)
சிவா..>:) ஸ்ரீஷிவ்..
'அதற்கென்ன சிவா அவசியம் அழைத்து செல்கிறேன்'.
நீங்கள் எல்லோரும் சென்ற முறை எங்கள் வீட்டிற்கு வர நேரமில்லாமலே போய்விட்டது.
மறுமுறை மனைவியுடன் வந்து அவளை பார்க்கவேண்டும் என்றிருக்கிறது போலும்! :)
மீனா.
அசந்து போய் விட்டேன்.. அனைத்தயும் படித்து விட்டு நீண்ட பின்னூட்டம் இடுகிறேன்:)
இதுவே நிறைவான பின்னூட்டம்தான் :)
நன்றி மஹேஸ்!
ஹா ஹா யார் அது மஹேஸ்?
ஹ ஹ ஹா :D
அடடா! இங்கே செராஸில் இருக்கிறாள்!அவளோட பேசிய நினைவில் :)
என்னப்பா? எல்லாம் ஈஸ்வரியா இருந்து கொண்டு ஒண்ணும் புரியலே
சுட்டிகாட்டியதற்கு நன்றி பரமேஸ்(இப்போ?..ம்ம் ஒழுங்கா குறிப்பிட்டிருக்கேன் ):))))))
கருத்துரையிடுக