"யாத்தி"
பெரிய வீடு அது. வெளி கேட்டில் இருந்து உள்ளே வந்தால் இரண்டு கார்கள் நிறுத்தும் அளவு நீளமான வாசல்! வரிசை வீடுகளில் கடைசி வீடு. ஆதலால் வீட்டின் வலது பக்கம் சுற்றிலும் பெரியதாக இடம்! தானாக இயங்கும் கருப்பு நிற கேட், அதை ஒட்டி வீட்டின் சுற்று சுவர். கட்டையாக பாசி படிந்த கான்கிரீட் சுவரின் மீது முனைகள் கூறாக வேல் போன்ற வடிவத்தில் கறுப்பு நிறக்கம்பிகள் பொருத்தப் பட்டிருந்தன. அவைகளில் துரு ஏற ஆரம்பித்திருந்தது.
இடது புறம் பக்கத்து வீட்டுக்கும் இந்த வீட்டிற்கும் பொதுவான சுவர்! அதிலும் வலப்பக்கத்தில் உள்ளது போல் கம்பிகள், உள் புறத்தில் சுவரை ஒட்டினாற்போல் வரிசையாக வைக்கப் பட்டிருக்கும் தொட்டிகளில் பல வண்ணங் களில் பொகைன்வில்லா என்னும் காகிதப்பூ செடிகள்! சரியாக தண்ணீர் விடாமல் பூக்களெல்லாம் காய்ந்து கொட்டியபடி! கேட்டின் ஓரத்தில் ரம்புத்தான்மரம் நிறைய பூ காய் பழங்களுடன்! மரத்தை சுற்றிலும் இலைகளும் பூக்களும் பிஞ்சுகளுமாக உதிர்ந்து எங்கு பார்த்தாலும் குப்பையும் கூளமுமாகக் கிடந்தது.
யாத்தி அந்த வீட்டிற்கு வந்தவுடன் அவளின் உழைப்பில் துரு ஏறியிருந்த கம்பிகள் மீண்டும் கறுப்பு வண்ணம் அடிக்கப் பட்டு, பாசி படிந்திருந்த சுவர்கள் வாரம் ஒருமுறை தேய்த்து கழுவப்பட்டு, தினமும் தோட்டம் முழுதும் கூட்டி, செடிகளுக்கு தண்ணீர் விடப்பெற்று, இப்போது புதுப் பொலிவுடன் திகழத் தொடங்கின அந்த வீடும், அதன் சுற்றுப் புறமும்!.
இரண்டரை வருட ஒப்பந்தத்தில் ஏஜென்சி மூலமாக பத்தொன்பது வயது இந்தோனிசிய பணிப்பெண் யாத்தி அந்த வீட்டிற்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகப் போகிறது.
***
வெளியில் துணி காயப்போடுவதற்கென்று கட்டியிருக்கும் கொடியை அழுத்தமாக துடைத்துக் கொண்டிருந்தாள் யாத்தி! பக்கத்தில் துவைத்த துணிகள் கூடைகொள்ளாமல் நிரம்பி வழிந்தது! கயிற்றில் தூசி ஒட்டியிருந்தால்? துணி அழுக்காகி விடுமே... அதனால் தினமும் அதை துடைத்த பிறகே காயப்போட வேண்டும் என்பது லிசாவின் கட்டளை.
ரம்புத்தான் மரத்தில் காய்கள் எல்லாம் மஞ்சளும் சிவப்புமாய் மாறி விட்டிருந்தது!. இன்னும் சில தினங்களில் முழுக்க பழுத்துவிட்டால்! மரத்தின் கிளைகள் முழுதும் கைக்கெட்டும் தூரத்தில் கூட!(முட்டை யின் வடிவத்தில் எலுமிச்சை அளவில் மேல் தோலில் மொசு மொசு வென்று அதன்முடி(!)யுடன்) கொத்து கொத்தாய் பழுத்து தொங்கும் பழங்களின் ரத்த சிவப்பு நிறமும், இலைகளின் ஆழ்ந்த பச்சை நிறமும் தெருவில் போகிறவர்களின் கண்ணைப்பறிக்கும்!. இதை ஒரு நாளாவது ரசித்திருப்பாளா இந்த லிசா.
கேட்டின் அருகே வெளிர் சந்தன நிறத்தில் (ஷாட்ஸ்)ட்ரவுசரும் வெள்ளை நிறத்தில் மேல் சட்டையும் அணிந்து சாப்பிடவே மாட்டாளோ என்பது போல் ஒல்லி குச்சியாக சிரிப்பை மறந்த முகத்துடன் இடுப்பில் கையை வைத்துக் கொண்டு என்னடா தவறு கண்டு பிடிப்போம் என்று உன்னிப்பாய் யாத்தி துடைப்பதையே கவனித்துக் கொண்டிருக்கும் அவளுக்கு இதையெல்லாம் ரசிக்க எங்கே நேரமிருக்கிறது?.
எதிர் வீட்டில் குடி இருப்பவள், லிசா யாத்தியை படுத்தும் பாட்டை தினமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள். இன்றும் அதே காட்சி! இப்படி எங்கேயாவது கொடியையெல்லாம் துடைத்து கிட்டு இருப்பாங்களா? என்ன கிறுக்கோ இவளுக்கு என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்! லிசாவிற்கு இவர்களோடெல்லாம் பழகுவதற்கே நேரமில்லை.
எத்தனையோ வருடங்களாக அங்கு வசிக்கிறார்கள் என்றாலும் இது நாள் வரை அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் யாருடனும் பழக்கம் இல்லை அவளுக்கு. அப்படியே எப்போதாவது நேருக்கு நேர் பார்க்கும்படி வந்தாலும் அவர்கள் சிநேக பூர்வமாய் சிரிக்க, இவளோ அதை கவனிக்கவே மாட்டாள். அடுத்த முறை அவர்கள் இவளை கண்டும் காணாத மாதிரி போய் விடுவார்கள்.
***
ரொம்ப நேரமாக அழைப்பு மணியை அழுத்திய தண்ணீருக்கான மீட்டர் பார்க்க வந்த ஆள், சிறிது நேரம் நின்று பார்த்து விட்டு பிறகு உத்தேசமாக ஒரு தொகையை எழுதி சுவரில் பதித்திருந்த மெயில் பாக்ஸில் போட்டு சென்று விட்டான்.
அழைப்பு மணியின் சத்தம் உள்ளே அயன் செய்து கொண்டிருந்த யாத்திக்கு கேட்டு அவசரமாக வெளியே வருவதற்குள் அவன் அடுத்த வீட்டிற்குள் நுழைந்திருந்தான்! குளித்துக் கொண்டிருக்கும் எஜமானி லிசாவிற்கு தெரிந்தால்? அப்போதே பயம் அவளை கவ்விக் கொண்டது!
அவன் போட்டு விட்டு போயிருந்த பில்லை எடுத்து கொண்டு திரும்பியவளின் பார்வை கேட்டிற்கு வெளியே குப்பை லோரி வந்து சென்றதற்கான அடையாளமாக காலியான குப்பை தொட்டி ஒரு பக்கமும் மூடி ஒரு பக்கமுமாக கிடப்பதை கவனித்ததும் நல்ல வேளை மேம் பார்க்கவில்லை என்று நினைத்துக் கொண்டவளாக பர பரவென்று வெளியில் போய் அதை சரி செய்து விட்டு உள்ளே வந்தாள்..
அப்போதுதான் நினைவு வந்தது 'அய்யோ..அயன்...!'அவசரத்தில் மின்சார இணைப்பை துண்டிக்காமல் அப்படியே வைத்து வந்தது நினைவிற்கு வர தலை தெறிக்க ஓடினாள், அதற்குள் பாதி அயன் செய்த நிலையில் லிசாவோட சட்டையின் மார்பு பகுதித் துணி எரிந்து சுருங்கி விட்டிருந்தது. அந்த நிமிடத்தில் உடல் முழுக்க அச்சம் பரவ சட்டையை கையில் வைத்துக் கொண்டு செய்வதறியாமல் தடுமாறி கொண்டிருந்த போது 'ஏய் காலிங் பெல் சத்தம் கேட்டதே யார்'? கேட்டபடி அங்கு வந்த லிசா..
பேயரைந்தவள் போல நிற்கும் யாத்தியைப் பார்த்ததும் 'என்னாச்சு'? கேட்டவளின் பார்வை யாத்தியின் கையில் எரிந்து சுருங்கிய நிலையில் இருந்த சட்டையின் மேல் பட்டது..
பதட்டத்துடன் சட்டையை பறித்து பிரித்து பார்த்த லிசா கோபமாக அதை யாத்தியின் முகத்தில் வீசி எரிந்து விட்டு யாத்தியின் முதுகில் ஓங்கி ஓர் அடி வைத்தாள்.நிலை தடுமாறி விழப்போனவளை பிடித்து பக்கத்தில் இருந்த அந்த சூடான அயன்பாக்ஸை எடுத்து "புது... சட்டை அதற்குள் எரித்து விட்டாயே இனிமேல் இப்படி செய்வியா...?" என்று சொல்லிக் கொண்டே "மே..ம் வேண்டாம் மே..ம்... இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் விட்டு விடுங்கள்" என்று யாத்தி கதற கதற அவளின் சட்டையின் மேல் மார்பு பகுதியில் வைத்து.. அழுத்தினாள்.தோல் பொசுங்கி... வலி தாளாமல் மார்பை பிடித்தபடி அந்த பெண் துடிக்க துடிக்க சூடு வைத்த திருப்தியில் ஏனென்று கேட்காமல் போயே போய் விட்டாள்.
அன்று இரவும் அடுத்தடுத்த நாட்களிலும் எரிச்சல், வேதனை தாள முடியாமல் அதோடு சற்றும் ஓய்வில்லாமல் வேலைகளையும் பார்த்துக் கொண்டு யாத்தி பட்டிருக்கும் பாடு...
இன்று அந்த சின்னப்பெண்ணின் மார்புப்பகுதி சுருங்கி மாட்டுக்கு சூடு வைப்பது போல் என்றுமே அழியாத வடுவாக அயன் பாக்ஸின் அடையாளம்..
லிசாவின் இந்த கொடுமைகளை யாரிடமும் சொல்வதற்கோ எதிர்ப்பதற்கோ வழியு மில்லை, தைரியமுமில்லை யாத்திக்கு. லிசாவின் கணவனோ பிஸினெஸ் விஷயமாக பாதி நாள் வீட்டில் இருப்பதில்லை.அப்படியே இருந்தாலும் இதையெல்லாம் அவன் கண்டு கொள்வதே இல்லை. மேலும் அவனும் நல்லவனல்ல ஆத்திரம் வரும் சமயத்தில்அவனும் இவளை அடிப்பவன்தான் அவனிடம் எப்படி இரக்கத்தை எதிர்பார்க்க முடியும் இவள்?.
இந்தோனிசியாவில் இருக்கும் அம்மா, அப்பா, சகோதரியுடன் தொலைபேசி வழி பேசவும் முடியாது அதையும் எஜமானி பூட்டி வைத்துவிட்டாள்.கடிதம் எழுதலாம் என்றால் அதையும் படித்து விட்டுத்தான் அனுப்புவாள். அதனால் இரண்டு வீடுகள் தள்ளி ஒரு வீட்டில் வேலை செய்யும் இந்தோனிசிய பெண்ணிடம் கடிதம் கொடுத்தனுப்பியதை லிசா கண்டு பிடித்ததில் இருந்து அதற்கும் வழியில்லாமல் போய் விட்டது.
லிசா தினமும் யாத்தியுடன் சண்டையிட்டு கத்துவது அக்கம் பக்கத்து வீடுகளில் இருப்பவர்களுக்கு காலையிலேயே ஆரம்பித்து விட்டாளா என்று எரிச்சல் படும் அளவிற்கு போய் விட்டது.
பல தடவை யாத்தி அழுது கொண்டே எஜமானிக்கு பதில் சொல்வது கூட கேட்கும்! லிசாவின் குணம் அறிந்திருந்த அவர்கள் வீட்டிற்குள் நடக்கும் கொடுமை தெரியாம லேயே வெளியில் நடப்பதை வைத்து அதற்கே பாவம் அந்த பெண் இவளிடம் வந்து மாட்டிக்கொண்டது என்று நினைத்துக் கொண்டார்கள்.முழுதும் தெரிந்தால் இந்த இரக்கமில்லாதவளிடம் இருந்து யாத்தியை யாராவது காப்பாற்றி இருப்பார்களோ இல்லை நமக்கேன் வம்பு என்று இருந்திருப்பார்களா?
யாத்தியும் அந்த வீட்டுக்கு வந்து இரண்டு வருடங்கள் ஓடி விட்டன. இன்னும் மீதம் இருக்கும் ஆறு மாதங்கள் எப்போது முடியும், அது வரை எப்படி சமாளிக்க போகி றோம் என இவளிடம் இருந்து விடுதலை கிடைக்கப் போகும் அந்த நாட்களை எண்ணி ஏங்கி கொண்டிருந்தாள.
***
டைனிங் டேபிளின் முன்னே அமர்ந்திருந்தான் ஜோ. அவன் கையில் இருந்த க்ளாஸில் கலங்கலான நிறத்தில் தண்ணீ ர். அதை குடித்தவன் கோபத்துடன் கிளாஸை நங்கென்று மேஜை மேல் வைத்தான். இயல்பான சுவை மாறி அலண்டு கிடந்த தண்ணீர்தான் அவனின் அந்த கோபத்திற்கு காரணம்.
"வர வர ஒரு வாய் தண்ணி கூட குடிக்க முடியலை கவனின்னு எத்தனை தடவை சொல்லிட்டேன்!!"
"ஏ, லீஸா!..ரொம்பவும் விலையுயர்ந்த ஃபில்ட்டர்ன்னுதானே இதை மாட்டணும்னு சொன்னே? என்ன ஃபில்ட்டர் இது?" வாங்கினதிலிருந்தே கழுவலியா? இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை சுத்தம் செய்யணும்னு வேலைக்காரிகிட்ட சொல்லி இருக்கியா.. இல்லையா?"என்று சத்தம் போட்டவன் "ச்சேய்..." என்றபடி அவன் அமர்ந்திருந்த நாற்காலியை பின்புறமாக சர்ரென்று சத்தத்துடன் தள்ளிவிட்டு எழுந்து போய் விட்டான்.
கணவனுக்குப் பதில் சொல்லாமல்.. விடு விடுவென்று சமையலறைக்குள் வந்த லிசா அங்கே ஏதோ கழுவிக் கொண்டிருந்த யாத்தியின் தலையில் ஓங்கி குட்ட,வலி தாளாமல் "அல்..லமா" என்றபடி சோப் நுறையோடு கையைக் கழுவக்கூட தோன்றாமல் தலையை பிடித்தபடி திரும்பியவளிடம் "சொல்ல சொல்லக் கேட்காமல் என்ன செய்கிறாய் ? நேத்தே சொன்னேன் இல்ல ஃபில்டரை சுத்தம் செய் என்று" செய்தியா இல்லையா"?
"யா மேம்," என்று கண்ணீருடன் தலையை ஆட்டினாள் யாத்தி. யாத்திக்கு இதெல்லாம் பழகிவிட்டது என்றாலும் லிசா தலையில் குட்டும் போது, முகத்தில் அறையும்போது, கையில் என்ன கிடைத்தாலும் அதைக் கொண்டு தாக்கும் போது ஏற்படும் வலியின் வேதனையை லிசாவின் மிரட்டலுக்கு பயந்து அடக்க நினைத்தாலும் அவளையும் மீறி வலி தாங்க முடியாமல் அவ்வப்போது இப்படி கண்ணீர் வந்து விடும்.
"எல்லாத்துக்கும் அழுதின்னா இன்னும் குட்டுவேன். நிறுத்து உன் அழுகையை முதல்ல" என்று லிசா கையை ஓங்க, எங்கே மறுபடி குட்டுவாளோ என்ற பயத்தில் சட்டென்று தலையில் இருந்த கையை எடுத்து கண்ணை துடைத்து பொங்கி வந்த அழுகையை அடக்கி கொண்டாள் யாத்தி.
"பொய் சொல்லாதே. நான் பாக்கணும் எப்படித்தான் சுத்தம் பண்ணியிருக்கே ன்னு இப்பவே திற" என்று கோபமாகக் கத்தினாள்.
யாத்தியின் முகம் பயத்தில் வெளிறியது. அதை அவள் கவனிப்பதற்குள் பள்ளிக்கு கிளம்பிய அவளின் மகன் சாம்,"மா........ம்!! எனக்கு நேரமாச்சு....வறீங்களா இல்லையா?" என்று அவசர படுத்த "இதோ வரேன்.." என்றபடி வேறு வழியில்லாமல்"இரு.. இரு....உன்னை திரும்பி வந்து பாத்துக்கறேன்" என்பது போல் கண்ணாலேயே யாத்தியை மிரட்டி விட்டு வெளியே விரைந்தாள் லிசா.
"மாதம் ஒருதடவை ஃஃபில்ட்டரைக் கழட்டி சுத்தம் செய்யணும். இந்த 'முட்டாள்' யாத்தி கழுவாம இருந்துட்டாளோ? ஒருவாரமோ இரண்டு வாரமோ நல்லாருக்கு. மீண்டும் அதே கலங்கள். அதே வாடை. இவ ஒழுங்கா கழுவலை அதுதான் வரட்டும். போற வழியெல்லாம் அதே எண்ணம்தான்.வேலைக்கார பெண்ணை நினைக்கும் போதே புசு புசு வென்று ஆத்திரம் பொங்கியது லிசாவுக்குள்.
மகனை பள்ளியில் விட்டு திரும்பியவள் வீட்டருகே வந்ததும் தன்னிடமிருந்த தானாக இயங்கும் விசையை தட்டி கதவை திறந்து காரை உள்ளே செலுத்தி நிறுத்திய வேகத்தில் "யாத்தீஈஈஈ.." என கத்திக் கொண்டே வீட்டினுள் நுழைந்தாள்.
எந்த பதிலும் வராதது கண்டு மேலும் ஆத்திரத்தோடு நேராக சமையல் கட்டிற்கு சென்றாள் அங்கு யாத்தியை காணோம்! சாமான்கள் கழுவியது போக மீதம் சோப் போட்டபடி, வெளியில் துவைக்கும் மிஷினில் இருந்து எடுத்த துணிகள் இன்னும் காயப்போடாமல்ஸ. "ஏய் யாத் தீ..." என்று கூப்பிட்டுக் கொண்டே வீட்டின் எல்லா இடமும் பார்த்து தேடி கொண்டே வர அப்போது தான் அவளுக்கு உணர்த்தியது வீட்டில் நிலவிய அமைதி! பகீரென்றது அவளுக்குள்! அங்குமிங்கும் ஓடினாள்.
யாத்தியை எங்கும் காணவில்லை. தொலைபேசியில் ஜோவை தொடர்பு கொண்டு உடனே அவனை வரச்சொல்லி விட்டு பதட்டத்தோடு காத்திருந்தாள்.
***
அழுது கொண்டே இருந்தாள் யாத்தி! ஊரின் மையப்பகுதியில் எங்கு போவது என்று தெரியாமல் சுற்றித்திரிந்தவளை போலீஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தற்போது சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்தாள்.
இரண்டு வருடங்களாக அடிபட்டு அடிபட்டு ஏற்கனவே உருக்குலைந்திருந்த அவள் முகம், அழுததில் மேலும் வீங்கி விகாரமாய் இருந்தது. தலை முதல் கால்வரை உடம்பெல்லாம் காயங்கள்!!.
அவளை விசாரித்த போது எஜமானி என்னை அடித்து சூடு வைத்து சித்தரவதை படுத்தினாள். எஜமானரோ அவர்களின் வயது வந்த பையனின் முன் என்னை அடித்து அவமான படுத்துவார் "அவர்களை பழிவாங்க வேண்டும் என்று நினைத்தேன். இதை விட்டால் எனக்கு வேறு என்ன செய்வதென்று தெரியவில்லை. அதனால்தான் அப்படி செய்தேன்." இது தெரிந்தால் எஜமானி என்னை என்ன வேண்டுமானாலும் செய்வாள் அதற்கு பயந்துதான் வீட்டை விட்டு ஓடிவந்தேன். எனக்கு எதுவும் வேண்டாம் தயவு செய்து என்னை என் பெற்றோரிடம் சேர்த்து விடுங்கள், என்ற அவளை பார்ப்பதற்கே பரிதாபமாயிருந்தது.
***
பலவிதமான சந்தேகங்கள் திடீரென்று எங்கே போயிருப்பாள்? எப்படி போனாள்? முன்பக்கமும் பின்பக்கமும் கதவு பூட்டியபடி இருக்கிறது அப்புறம் எப்படி? பின்புறம் சென்று பார்த்தாள் தோட்டத்தின் மூலையில் ஒரு ஸ்டூல்! அருகே சென்று பார்க்கும் போதுதான் தெரிந்தது அதில் ஏறி குதித்து ஓடியிருக்கிறாள் என்று. பின்பக்கம் உள்ள வீட்டில் யாரும் புழக்கம் இல்லை குதித்து ஓடும்போது யாரும் இவளை பார்த்திருக்க முடியாது. அப்படியே பக்கத்து வீடுகளில் யாரும் பார்த்திருந்தாலும் அதை இவளிடம் சொல்லமாட்டார்கள் என்பது இவளுக்கு தெரியாது!.
ஏதோ சந்தேகம் வர ஃபில்டரை திறந்துதான் பார்ப்போமே என்று அதன் மேலே இருந்த ஸ்குரூவைக் கழட்டி. மேல் மூடியை நீக்கினாள். உள்ளே சுற்றிலும் மெல்லிய வடி கட்டி போல அமைக்கப்பட்டு அதன் நடுவில் தண்ணீர் ஊற்றுவதற்கென்று கொஞ்சம் பெரிய குவளை ஒன்று மூடியுடன் இருக்கும்.அதைத் திறந்து மெதுவாக உள்ளே எட்டி பார்த்தவள் அதிர்ச்சியில்...
"ஓ....மை காட்.."!! இரு கைகளாலும் வாயைப் பொத்தி கொண்டு செய்வதறியாது அப்படியே சரிந்து விட்டாள்!.
அவசர அவசரமாக தனது விலையுயர்ந்த காரை வீட்டின் முன் நிறுத்தி விட்டு உள்ளே ஓடினான் ஜோ!
"லீ....சா... லீ...சா.....
கூப்பிட்டுக் கொண்டே பின்புறம் ஓடினான் குளியலைறையில் இருந்து சத்தம் வர அங்கு போய் பார்க்கும் போது உமட்டி உமட்டி வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள் லிசா.... இவனுக்கு ஒன்றும் புரியவில்லை..
"லிசா என்ன நடந்தது? நிஜமாகவே ஓடிப்போயிட்டாளா அந்த கழுதை? சொல் என்ன நடந்தது?"
திரும்ப திரும்ப அவன் கேட்க இவளால் பதில் சொல்ல முடியவில்லை தடுமாறியபடி ஃபில்டரை நோக்கி கையை காண்பித்தாள் அதை எட்டிப் பார்த்தவன் அதிர்ந்து போனான்.....!!
உள்ளே!!
'குப்..!பென்று முகத்தில் அறைந்த துர்வாடையுடன் கறுஞ்சிவப்பு நிறத்தில் மிதந்து கொண்டிருந்தது "சானிடரி நேப்கின்" ஒன்று!!
-மீனாமுத்து
5 கருத்துகள்:
படிக்கும்போதே ஏதோ ஒரு சொல்ல இயலாத வலி ஏற்படத் துவங்கியது.
முடிவில் அந்தக் வலிக்கு மருந்திடப்பட்ட திருப்தி ஏற்பட்டாலும்...
அந்த திருப்தி என் உள்மன குரூரத்தனத்தின் வெளிப்பாடோ என்கிற அச்சம் உருவாகிறது.
சமீபத்தில் இணையம் மூலம் நான் படித்த மிக நல்ல எழுத்து.
தவிரவும்...
ஒரு தீவிர இலக்கியத்தன்மை உங்கள் எழுத்தில் வெளிப்படுகிறது.
தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.
தங்களின் மனம்திறந்த பாராட்டு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது அந்தோனி.நன்றி
\\ முடிவில் அந்தக் வலிக்கு மருந்திடப்பட்ட திருப்தி ஏற்பட்டாலும்... \\
உண்மையில் நடந்த இரு வேறு சம்பவங்களை ஒன்று சேர்த்து எழுதப்பட்டது இந்த கதை
இதில் என் கற்பனை என்பது சுற்றிலும் நடக்கும் சம்பவங்கள் மட்டுமே :)
மீண்டும் என் நன்றி.
மிக நல்ல கதை. கதையோட்டம் அருமை. எதிர்பாரா முடிவு. இலக்கியச் சிந்தனைக்கு தேர்வாகி இருப்பதில் மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் :)
நன்றி நிலா!
இந்தப்பக்கம் நிலா வந்து சென்றதில் மகிழ்ச்சி
தமிழ்நாடு கடந்து வாழும் தமிழர்களின் எழுத்தைப் படிக்க மிக ஆர்வமாக இருக்கும்.. உங்களின் யாத்தீ அதற்கு ஒரு நல்ல வடிவைக் கொடுத்தது.. நல்ல நடை.. அடிவயிற்றில் ஒரு பதட்டம் தொற்றிக் கொண்டது.. முடிவு.... ம்ம்ம்ம்ம். இயலாமையில் ஒரு பெண் எடுத்த முடிவு..
எழுதுங்கள் தோழி.. உங்கள் ஊரின் மலேசிய தமிழ் மணக்க எழுதுங்கள்..
வாழ்த்துக்களும் அன்பும்..
கருத்துரையிடுக