செவ்வாய், அக்டோபர் 19, 2010

அப்பச்சி... 7

அப்போ...? இங்கேயிருந்து அக்கரை போவதற்கே அரை மணி நேரமாகும்அதுக்கப்புறம் அங்கேயிருந்து ரெண்டரை மணி நேரம் என்றால் மூணு மணிநேரத்துக்குமேல ஆகுமே '?ஆத்தா குரல் என்னமோ மாதிரி..


(என் கவனம் பூராவும் காடி ஃபெரியுனுள் நுழைவதை வேடிக்கை பார்க்க திரும்பியது)ஃபெரிக்குள்ளே ரெண்டு மூணு பேரு நடுவுல நின்னுகிட்டு (உள் நுழையும்) கார் எல்லாத்தையும்  ரோடுக்கு நடுவுல போலீஸ்காரர் ஒருத்தர் நின்னுகிட்டு கார் பஸ் எல்லாம் கையை காட்டி காட்டி போக சொல்வாரே அது மாதிரி நடுவில நின்னுகிட்டு கையை ஆட்டி ஆட்டி இடது பக்கமும் வலது பக்கமுமா வரச்சொல்லிட்டு அப்பறம் விலகிக்கிட்டு நடுவிலயும் மூணு வரிசையா நிறுத்தச் சொன்னாங்க!. என்னதுது! நம்ம மட்டும் போகாம காடியையும் சேத்து உள்ள ஏத்த முடியுமா அட!! ஒண்ணு ரெண்டுல்லே நெறையக்காடி மோட்டார்பைக்கெல்லாம் ஏத்தறாங்களே அதுவே பெரிய அதிசயமா இருந்துச்சு என்னால நம்பவே முடியலை  ஊருக்கு போயி எல்லாருகிட்டயும் சொல்லணும்!!!

எங்க காடிக்குப் பின்னாடி ரெண்டு காடி மட்டும் உள்ள விட்டாங்க அதுக்கப்புறம் பெரிய் … .ய இரும்பு சங்கிலிய குறுக்கே போட்டு கட்டி அதுக்கப்புறமா மோட்டார்பைக், சைக்கிள் எல்லாம் உள்ள விட்டாங்க!
எல்லாம் வந்து நின்னதுக்கப்புறம், உள்ள வரும்போதுடொம் டொம்மென்று சத்தம் வந்துச்சே.. அதான் காடியெல்லாம் உள்ள வரதுக்கு போட்டிருந்த(ஃபெரியையும் கரையையும் இணைத்திருந்த) இரும்பு ' பலகை'. அது மேல ஏறித்தான் காடிகள் எல்லாம் வந்துச்சு அந்த இரும்பு  பலகையை அப்படியே மேலே தூக்கியவுடன்...

ஃபெரியில மடிச்சு இருந்த இரும்பு கதவை விரித்து பாதையை அடச்சு கனமான  இரும்பு கொக்கியை போட்டுட்டாங்க!பாதையை அடைச்ச ஒடனே அங்க காருக்குள்ள இருந்த எல்லாரும் கீழ இறங்கி அந்த கதவுகிட்டே போயி நிக்க ஆரம்பிச்சுட்டாங்க!

எங்க காடி உள்ளுக்குள்ளே வந்து நின்னதும்  அண்ணனும் அம்மானும் எங்க கிட்டே சொன்னாங்க ' காருக்குள்ளேயே காமணி நேரம் அரமணி நேரம் இருக்குறது செரமம் அதனாலே கீழ எறங்கி நிக்கிறதுன்னா  நில்லுங்க 'ன்னு இப்ப எல்லாரையும் பார்த்ததும் நானும் ஒடனே  எறங்கிட்டேன். அதனாலதான் என்னால எல்லாத்தையும்  பார்க்க முடிஞ்சுச்சு! ஆத்தாதான் நான் எறங்கலை காருக்குள்ளேயே இருக்கிறேன்னுட்டாங்களே.

ஃபெரி மெதுவாக புறப்பட்டுருச்சு, அண்ணனும்வா வா அங்க முன்னாடிப் போய் நின்னு பாக்கலாம் என்று  கையை பிடித்து முன் பக்கம் கூட்டி போனார்கள் எனக்கு பயம் ,ஃபெரியின் சத்தம் காது அடைச்சுச்சு, முன்னாடி போனா காத்து! அள்ளிக்கிட்டு போச்சு! பக்கத்தில் போனதும் ஒரே சாரல்! "இந்த பக்கம் கொஞ்சம் தள்ளி நின்னுக்க சாரல் மேல படாது " நான் அசையவே இல்லை எனக்குத்தான் இந்த மாதிரி சாரலில் தலையை நீட்டி முகம்பூரா சிலு சிலுன்னு சாரல் பட்டு நனையறது ரொம்ம்ப புடிக்குமே! அப்படியே நின்னுகிட்டு எல்லாத்தையும் பாத்துக்கிட்டேயிருந்தேன்! சந்தோஷமா இருந்துச்சு!

தூரத்தில கப்பல் ஒண்ணு நின்னுகிட்டு இருந்துச்சு! அதான் நாங்க வந்த கப்பலோ ? அதுக்கு அந்தப் பக்கம் ஒண்ணு அதை விட கொஞ்சம் சின்ன கப்பல் , அங்கங்கே குட்டி குட்டியாக நெறய படகுகள்! அப்பறம் நடு நடுவில அங்கொண்ணும் இங்கொண்ணுமாக என்னவோ கறுப்பா இரும்பு கோபுரமாட்டம் கடல்ல மெதந்து கிட்டு இருந்துச்சு!    ' அந்தா அங்க மெதந்துகிட்டு இருக்கே அது என்ன' ன்னு கேட்டேன் ' அதுவா அது மிதக்குற இடத்துல தண்ணி ஆழமில்லாம இருக்கும் அத பாத்துட்டு அந்தபக்கம் கப்பல் படகு இதெல்லாம் போகாது அந்த அடையாளத்துக்காக த்தான் அது இருக்கு ' அப்படின்னு சொல்லிட்டு 'சரி 'வா'த்தா கரை வரப்போகுது போய் காடியில ஏறி ரெடியா இருக்கணும்ல வா 'ன்னு.. கூப்பிட்டாங்க.எனக்கோ போக மனசே இல்ல என்னை நிக்கவிடாம கூட்டிகிட்டு போயிட்டாங்க.. திரும்ப காடிக்குள்ள ஏறினோம் எங்களைப் போலவே மத்த காடியில இருந்து எறங்கி  நின்னவங்களும்  வந்து அவங்கவங்க காடியில உக்காந்து எல்லாரும் புறப்பட ரெடியாக காடிய ஸ்டாட் பண்ணி வச்சுகிட்டு இருந்தாங்க...

வேகமா போயிகிட்டுருந்த ஃபெரி மெதுவா போயி கரைய  அணைஞ்சு எல்லாரும் புறப்பட ரெடியாகி மோட்டர்பைக்கை ஸ்டாட் செய்யட்ர்று ட்ர்றுன்னு எல்லாம் சேந்து சர்...ரியான சத்தம் , பினாங்கில உள்ளது போல இங்கயும் ஃபெரி கரைய தொட்டதும்  ஃபெரியில் உள்ள கதவில் மாட்டியிருந்த பெரிய கொக்கியை எடுத்து விட்டு மெதுவாக கதவை  மடிச்சு மடிச்சு! திறந்தாங்க, அப்புறம் அங்க இருந்த மாதிரியே இங்கயும்  இரும்புப் பலகை! மேல இருந்து அந்த இரும்பு பலகை மெது மெதுவா கீழே இறங்கிச்சு! அதை கரைக்கும் ஃபெரிக்கும் நடுவுல பாதை மாதிரி போட்டுட்டாங்க!

இப்போ கரையில இருந்து ரெண்டு மூணு ஆளுங்க உள்ள வந்தாங்க. வந்து நடுவில உள்ள காடிகளை முதல்ல வெளியில ஒவ்வொண்ணா போகச் சொன்னாங்க. எங்க காடிய நடுவரிசையில நிறுத்தி இருந்ததால  நாங்க ஃபெரியை விட்டு  சீக்கிரமா வந்துட்டோம்!,இங்கயும்  பினாங்குல இருந்த மாதிரியே இமிகிரேஷன்! அதை முடிச்சுகிட்டு அங்கருந்து வெளியில வந்தோம், இந்த ஊர் பேரு என்னன்னு கேட்டதுக்கு ' பட்டர் வொர்த் 'ன்னாங்க அம்மான்.

அங்கருந்து புறப்படுவதற்கு முன் ஆத்தாகிட்ட " காலையில இருந்து ஒண்ணுமே சாப்பிடலையே பினாங்கில் கேட்டதுக்கு பசிக்கலை அப்புறம் பாக்கலாம்னீங்க இப்ப இங்கு ஏதாவது சாப்பிடுறியளா?" என்று அண்ணன் கேட்டாங்க ' ஆத்தாவோ இல்ல ஒண்ணும் வேண்டாம் போயிரலாம்னு சொல்லிட்டாங்க



கருத்துகள் இல்லை: