என் கணவர் பல பல வருடங்களுக்கு முன் சபரிமலைக்கு வருவதாக வேண்டிக்கொண்டு வேண்டிக்கொண்ட புதிதில் இந்த வருடம் போகணும், அடுத்த வருடம் போகலாம் என்று இப்படி சில வருடங்கள் சொல்லிக் கொண்டே இருந்தவர் போக போக அது குறித்து பேசுவதேயில்லை!மறந்து விட்டாரா! இல்லை நினைவில் இருந்தும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையா தெரியவில்லை.
எனக்குள் எப்போதும் அந்த எண்ணம் ஓடிக்கொண்டே இருக்க சென்ற மாதம் ஒரு நாள் அவரிடம் கேட்டேன் ‘அய்யப்பன் கோவிலுக்கு போறேன்னு வேண்டிக்கிட்டீங்களே..எப்ப போறது? எவ்வளவு வருஷங்கள் ஆகிருச்சு சொல்லிகிட்டு! இனியும் சுணங்காமல் போயிட்டு வந்துட்டா தேவலை’ என்றேன்.
அவரிடம் இருந்து எப்போதும் போல வழக்கமான பதில் ’ம்..ம் பார்ப்போம்’ அவ்வளவுதான்! இரண்டு மூன்று நாட்கள் உள்ளூர அது பற்றியே நினைவுகள்!
இது நடந்த நான்காம் நாள் அவர் வேலைக்கு சென்றுவிட்டார். காலை 11 மணி. வெளிக்கேட்டை தட்டும் சத்தம்!(அழைப்பு மணி வேலைசெய்ய வில்லை!)உள்ளிருந்து கண்ணாடிகதவின் வழியே பார்க்கும் போது யாரோ ஒருவர் பார்க்க மலாய்க்காரர் போல தெரிந்தது! கேட்டின் அருகே நின்று கொண்டு கையை நீட்டி தானம் கேட்பது போல சைகை காண்பித்தார்! எனக்கு தெரிந்து விட்டது, இப்படி அவ்வப்போது பெண்ணோ ஆணோ யாராவது நன் கொடை கேட்டு வருவார்கள்! நானும் ஏதாவது பணம் கொடுத்தனுப்புவேன்.
இருந்தாலும் யாரென்று கேட்கலாம் என்று இங்கிருந்தபடியே ’என்ன வேண்டும்’ என்று மலாய் மொழியில் கேட்டேன், அவர் படு சுத்தமான தமிழில் கணிரென்ற குரலில் ’அய்யப்பசாமி கோவிலுக்கு காணிக்கை வாங்க வந்தேன்’ என்றார்!! அசந்து போய்விட்டேன்!.
அந்த அதிர்ச்சியுடன் மறு பேச்சு பேசாமல் உள்ளே வந்து பணத்தை எடுத்துக் கொண்டு அவரிடம் கொடுக்கலாம் என்று கேட்டருகே சென்றேன். அப்போது தான் அவரை கவனித்தேன் நல்ல உயரமாக, சிவந்த நிறம்,நெற்றியில் பெரிய குங்குமப்பொட்டு,கையில் விரித்தபடி குடை,தோளில் இந்தியாவில் போட்டுக் கொள்வது போல ஜோல்னா பை! கம்பீரமாக தெரிந்தார்!
கை நீட்டி பணத்தை வாங்கியவர் எவ்வளவு என்றுக்கூட பார்க்கவில்லை அதை அந்த பைக்குள் வைத்துக்கொண்டு கேட்டார் (எங்கள் வீட்டிற்கு வெளியே ஒரு வேப்பமரம் இருக்கிறது)
’இந்த மரம், தானா வந்ததா இல்லை நீங்க வைத்ததா?’(மலையாளம் கலந்த தமிழ்!)
’இல்லை நாங்கள் வைத்தது’
’எத்தனை வருஷம் ஆச்சு?அதுக்கு விளக்கேற்றி வைப்பீர்களா?’
’எட்டு வருஷம் இருக்கும். விளக்கேற்றுவதில்லை’
’இனிமேல் ஏற்றிவையுங்கள் எல்லாம் நல்லபடியே நடக்கும்.’ஆமா அய்யப்பன் கோவிலுக்கு போயிட்டு வந்துட்டீங்களா?
(என்ன இது!!)..’ம்.. இல்லை இன்னும் இல்லை!’
’ஏன்? நீங்க இந்தியாவிற்கு வருவதில்லையா?’
’வருவோம் அடிக்கடி வருவோம்’
’அப்போ ஏன் கேரளாவுக்கு வரலை?உங்க ஊர் எங்க இருக்கு?’
சொன்னேன்.
’சரி இங்கே இவ்வளவு தூரத்தில் இருந்து அடிக்கடி ஊருக்கு வரீங்க அப்போ அங்கருந்து கேரளா ரொம்ப தூரமில்லையே? அதுல ஒரு தடவையாவது சபரிமலைக்கு வந்துட்டு போயிருக்கலாமே? அடுத்த முறை அய்யப்பன் கோவிலுக்கு அவசியம் வாங்க’
’அவசியம் வரணும் வரோம்’. நீ…ங்க… எங்க இருகீங்க?
’நான் கேரளா..! அங்கருந்துதான் வரேன் இப்படித்தான் அப்பப்ப எப்பவாவது வருவேன், வந்து நாளாச்சு அதான் இப்ப வந்தேன். சரி போயிட்டு வரேன்மா எதை பத்தியும் கவலைப்படவேண்டாம் எல்லாம் சுபிட்ஷமாக இருக்கும் வரட்டுமா என்று சொல்லியபடி அவர் பாட்டுக்கு போய்விட்டார்!
இன்னும் பிரமிப்பிலிருந்து விடுபடவில்லை நான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக