செவ்வாய், ஜூன் 30, 2009

கதையல்ல…..இது…..!

இந்த புளிய மரத்தில்தான் எவ்வளவு பூ!! மறைந்து கொண்டிருக்கும் மஞ்சள் வெயிலில் அதன் நிறம்..! இள மஞ்சள்? இல்ல பழுப்பு..? நுனியில் சின்னதா வளஞ்சு கொஞ்சமா சிகப்பு!வினோதமான(புளியம்)பூ!அந்தச் சின்னப்பூ அழகுபோல இருக்கு! இன்னும் கொஞ்ச நாளில் காய்ச்சு குலுங்கும்! ஆனால் யாரும் தேடுறதில்லை. அது பூக்கறதையும் காய்க்கறதையுமாவது யாராவது கவனிப்பார்களா? முதலில் பூக்கள்,அதுக்கப்புறம் குட்டி குட்டியா இளம் பச்சை நிறத்துல பிஞ்சு!எப்போ பெரிசாகுது!

அட! ரெண்டு நாலாச்சு இந்தப்பக்கமா வந்து..அதுக்குள்ள இப்ப ஓடுகள் பழுப்பு நிறமாக மாறி! ஓ.. பழுத்து விட்டது!. ம்..ம் இன்னும் ரெண்டு மூணு நாள்ல ஒவ்வொன்னா கீழே விழுக ஆரம்பிச்சுடும்..! இப்படி தினமும் எவ்வளவு புளியம்பழம் கொட்டுது ஆனா யாரும் தேடாம, அந்த வீட்டுக்கு முன்னாடி நிறுத்துற காருகளுக்கு அடியில் நசுங்கி... கொஞ்சம் கொஞ்சமாய் அவ்வளவும் காணாம போயிரும்! இல்லை இதோ உருண்டையா சதுரமா கோணல் மாணலாய் காப்பித்தூள் நிறத்தில் கொட்டிக் கிடக்கும் அதோட விதைகள்! கொஞ்ச நாளில் துளிர்விடத் தொடங்கிறும் ஆனா அதையும் வர விடாமல் வாரி வழித்து எங்கோ குப்பையோடு குப்பையாக அள்ளி கொட்டி மண்ணோடு மண்ணாக…..

நான் மட்டும்தான் ஒவ்வொரு நாளும் அதன் மாற்றத்தை கவனிக்கிறேனா?!. இந்த மரத்தை..இல்ல செடிய நட்டவர்கள் இப்போது எங்கே இருப்பார்கள்?!அது வாடகை வீடு, நிச்சயம் அந்த வீட்டில இப்ப இருக்கிறவர்களாய் இருக்காது.இப்ப இப்படி பூத்து,குலுங்கி நிற்கும் இந்த மரத்தை நினைத்துப்பார்ப்பார்களா? இதை நட்டவர்கள்!

ஸ்…அய்யய்யொ யாராவது பாக்கிறாங்களா என்ன..! நல்லவேளை தடுமாறி விழுகாம சமாளிச்சிட்டோம் யப்பா..!

‘இதென்ன இந்த நாய் இப்படி பாக்குது! பின்னாடியே வேற வருதே! வேகமா போகக்கூடாது, பாத்தும் மெதுவாவே போகணும்..இன்னமும் அது கூடவே வருதே… கடவுளே..! நல்லவேளை அது அங்கேயே நிக்கிறமாதிரி தெரியுது..கடவுளே… கடவுளே… அட என்னது திரும்பி போகுது! ஓ...கொஞ்ச தூரம் வரை எனக்கு பாதுகாப்பு கொடுத்துச்சோ!சே.. நாய்ன்னாவே விரட்டும் கடிக்கும்னே எப்பவும் நம்மளா பயந்துகிட்டு…

அதுக்குள்ள இருட்டிட்டு வருதே.. தினமும் இப்படித்தான். நாளைக்கு கொஞ்சம் சீக்கிறமா கிளம்பி விடணும்.வேகமா நடந்தாத்தான் நல்லா இருட்டுறதுக்குள்ள போயிடலாம். என்ன இப்படி வேர்த்து கொட்டுது.. வீட்டுக்கு போனவுடனே இந்த ஷூவை கழட்டி சாக்சையும் கழட்டினாத் தான் நிம்மதி, காலுக்குள்ள கச கசன்னு … நாளைக்கு இந்த சாக்சை தொவைக்கப்போட்டுறணும்.. வாச லைட்ட போட்டுட்டு போயிருக்கணும் எப்படி இருட்டாயிருச்சு..! தண்ணி என்னமா தவிக்கிது..! உள்ள போன ஒடனே மடக் மடக்ன்னு தண்ணிய குடிக்கணும்.. ஆஹா என்ன சுகம்! இந்த தண்ணியில என்னதான் இருக்கோ என்ன ருசி!.

இதுகளுக்கு வேற சாப்பாடு போடணுமே..அமைதியா இருந்துட்டு இந்த முயல் குட்டி ரெண்டுகளும் எப்படித்தான் தெரிஞ்சுகிதுங்களோ நா வந்ததை!சாப்பாட்டுக் கிண்ணத்தை தட்டுறதும் வாயில கவ்வி முன் பக்கமா போட்டு அதுகளுக்கு ரொம்ப பசிங்கறத சொல்லுறதும்.. அதிசயம்தான்!


^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

அடக்கடவுளே மறுபடி ஒரு தற்கொலையா…?!ஏன் இந்த நடிகைங்கள்லாம் இப்படி தற்கொலை செஞ்சுக்கணும்?இதுதானா விடுபடறதுக்கு வழி?இப்படி செய்யலாமா?இவங்களுக்குன்னு அம்மா,அப்பா தம்பி தங்கச்சி அண்ணன் அக்கா எவ்வளவு சொந்தக்காரங்க? இன்னும் வாழ்க்கையில என்னவெல்லாமோ நடக்க இருக்குது எல்லாத்தயும் விட்டுட்டு ஏன் இப்படி சாகணும்?!

எவனோ ஒருத்தனை விரும்பி சந்தர்ப்ப சூழ்நிலையால விட்டு பிரிஞ்சு போயிட்டா அதுக்காக,செத்து மடிவாங்களா!வாழ்க்கையில இன்னும் எவ்வளவோ இருக்கே?

காதல் மட்டுந்தானா வாழ்க்கை?…இப்படி மத்தவங்க கேட்பது சரி!ஆனால் ஒருவேளை யாருமே அவ(ர்க)ளின் நிலையில் நின்று பார்த்தால்த்தான் தெரியுமோ?என்னவோ ஏதாயிருந்தாலும் சாவைத் தவிர்க்கலாம்..ப்ச்ச..


^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


எரிமலையாய் குமுறுகிறது ஏன்? ஏன்? ஏன்? என்று நாலாபுறமும் கேள்விகள் ஆங்காராமாய் காதில் கேட்கிறது கழுத்தின் பின்புறம் நரம்பெல்லாம் துடித்து இசிக்கின்றது உள்ளமெல்லாம் வலி சொல்லொணாத வலி இதய பாரம் தாங்க முடியவில்லை எதுவும் வேண்டாம் எதுவும் வேண்டாம் என்ன செய்யலாம் விடுதலை இல்லையா? மனம் வெறுப்பால் துவளுகிறது ஓட முடியவில்லை ஒட்டுறவாடமும் பிடிக்கவில்லை காலம் போய்க்கொண்டிருக்கிறது மீண்டும் மீண்டும் இதே.. என்ன செய்ய

சம்பாதிக்கிறோம் என்ற அகங்காரம் தான் இல்லாவிட்டால் எதுவும் இல்லை என்ற ஆணவம் பிறக்கும்போதே எழுதிவிட்டான் இறைவன், இவரவர்களுக்கு இதுதான் என்று யாரும் யாரையும் தாங்கவில்லை தாங்குகிறவர்கள் தவற விட்டாலும் எதுவும் நின்று விடாது அதெற்கென்று அவன் ஏற்கனவே வழி வைத்திருப்பான் எல்லாம் தானாக அடுத்ததை நோக்கி நகர்ந்து கொண்டுதான் இருக்கும் அதுதான் இறை ரகசியம் இதை அறியாத பிறவிகளுக்கு ஆணவம் அகங்காரம் என்ற மாயை கண்ணை கட்டி விடும் .

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

மரியா இரண்டு வாரம் வேலைக்கு வரமாட்டா..எப்படி சமாளிக்கப் போறோம்னு நெனச்ச மாதிரி.பத்து நாளா வீடு துடைக்காம அங்கங்கே அழுக்குத்திட்டு திட்டா தெரியுது…அயன் செய்ய வேண்டிய துணி வேற மலையாக குமுஞ்சு போச்சு..

இத்தனை நாளா பெஞ்ச மழையில செடிகளுக்கு தண்ணி ஊத்துற வேலை இல்லாமல் இருந்துச்சு, இனிமே அதுவும் சேர்ந்துடும். ஆனால் தண்ணி ஊத்துறதும் ஒரு சுகமாத்தான் இருக்கு!

‘என்ன ஒரு அழகு இந்த மஞ்ச பூ! கனகாம்பரத்தின் பரம்பரையோ! அந்த கனகாம்பரத்துல பச்சை நிறத்தில மேல அழகான ஆரஞ்சு நிறத்தில இருக்கும் பூ !. இதில அதே பச்சை நிறத்துல மேல அழகான மஞ்சள் நிறத்துல இருக்க பூவுல! இடையிடையே வெள்ளையா ஓரியா நீள நீளமா சின்ன சின்ன இதழோட! அழகு! இலைகள் கனகாம்பர இலைகள் போலவே! அதை விட சிறிது ஓரியாக..! சாதாரணமாக இருக்கும் செடி உரத்தின் காரணமோ என்னவோ தெரியலை கொழு கொழுன்னு பச்சையும் மஞ்சளும் வெள்ளையுமா! தள தளன்னு! இன்னும் நிறைய வரிசையா இதையே வச்சா அழகா இருக்கும்!. இன்னும் தொட்டிகள் வேற வாங்கணும்.அன்னைக்கு ஒரு நாள் நர்சரியில் பார்த்த வெள்ளை நிறத்தில சந்தன கிண்ணம் மாதிரி இருந்த அந்த தொட்டியை வாங்கி வந்து இந்த செடியை அதுல வைக்கணும்.இன்னும் அழகா இருக்கும்!

செடிகளுக்கிடையில் சின்ன சின்னதா வேண்டாத செடி! மஞ்சக் காமாலைக்கு நல்லதுன்னுசொல்வாங்க கீளா நெல்லியோ என்னவோ, சின்..னதா அதில் வரிசை வரிசையா அரிசி மாதிரி இலை! இலைக்கு நடு நடுவில பச்சை நிறத்தில் தொங்குற கடுகு மாதிரி காய்! இந்த செடிய பிடுங்கி எடுக்கறதுக்கே மனசில்லை…

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

சுத்தி சுத்தி வந்தும் ஒன்றும் புரியவில்லை ஏன் எதற்கென்று மனமே ஒரு சூன்யமாகி போன மாதிரி,

‘சூன்யம் ‘ எதற்கு அப்படி சொல்லவேண்டும்? எங்கெங்கெனாதபடி இறைவன் நிறைந்திருக்கின்றான் என்னும் போது ‘சூன்யம்’ என்றொரு சொல் எங்கிருந்து எப்படி வந்தது! மனிதர்கள் அவர்களாகவே எதை எதையோ உண்டு பண்ணி அதற்கு அவர்களாகவே ஒரு பெயர் வைத்து.எதற்காகவாவது அடித்துக் கொள்வதிலேயே வாழ்க்கை பெரும்பாலும் முடிந்து விடுகிறது. இதன் நடுவில் அவ்வப்போது கொஞ்சம் இடை வெளியில் பெரிய மனது வைத்து அவனை நினைத்து(?) ஆலயம் சென்று..(இதுவும் கூட அவன் அழைத்தால் மட்டுமே!).

நாம் கல்லை எடுத்து நாயின் மீது வீசினால் நாய் கல்லை நோக்கி பாயாது வீசிய நம் மேல்த்தானே பாயும் ? நமக்கு ஏற்படும் நல்லது கெட்டது யாவும் விணைப்பயனாய் வருகிறதென்பதை உணராமல் அதை செய்தோர் மீது கோபம் கொள்கிறோம் இப்படி பல விஷயங்கள் புரிபடாமலே போகிறது.

அது புரியும் போது தவறுகள் எல்லாம் செய்து முடித்து விடுகிறோம் அதை முன்பே ஏன் உணர மாட்டோமென்கிறோம்?அதற்கு என்ன செய்ய வேண்டும்?

கண்களே கருவிழிகளே நீங்கள் எதை பார்க்கிறீர்கள்’
சின்னஞ்சிறு செவிகளே நீங்கள் எதை கேட்கிறீர்கள்’
பிஞ்சுக்கரங்களே நீங்கள் எதை செய்கிறீர்கள்’
தளர் நடை போடும் கால்களே நீங்கள் எங்கு செல்கிறீர்கள்’
இனிய இதயமே நீ எதை எண்ணுகிறாய்
யாவருக்கும் தந்தையான இறைவன் நம்முடைய ஒவ்வொரு செயலையும் மேலிருந்து உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறான்.

ஆதலால் எல்லாவற்றிலும் எப்போதும் கவனமுடன் இருங்கள் என்று சிறுவயதில் இருந்து அதற்கான பக்குவத்தை அந்த பிஞ்சு உள்ளங்களில் விதைத்தால்?

ஆமா.....

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


.....எழுதுவது,பேசுவது,படிப்பது போன்று.....நிகழ்விற்கு தகுந்தாற்போல் எப்போதும் தொடர்கிறது...கதைபோன்ற கதையல்லாத எண்ணங்கள்...!

...இப்ப அனுப்புகிறோமே...?அதனலென்ன அதான் இன்னைக்கி ராத்திரி 12 மணிவரைக்கும் நேரம் இருக்……!

கருத்துகள் இல்லை: