ஞாயிறு, ஜூலை 11, 2010

அப்பச்சி - 2

‘காலையில சீக்கிரமா எந்திருச்சு பாஸ்போட்டெல்லாம் எடுத்து வச்சுக்கிட்டு தயாரா இருக்கணும், இமிகிரேஷன் அதிகாரிங்கல்லாம் வெள்ளனவே வந்திருவாக ஒம்போது மணிக்கெல்லாம் சோதனை ஆரமிச்சுருவாக முன்னாடியே போய் வரிசையா நிக்கணும் அந்தா இந்தான்னு மத்தியானம் ஒருமணி ரெண்டுமணியாயிரும் கரையெறங்குறதுக்கு என்று ஒருத்தர்(அவர் நெறையத்தடவை கப்பலில் போய் வந்துகிட்டு இருக்காராம்)எல்லோரிடமும் சொல்லிக்கிட்டிருந்தார்.



(முன்பெல்லாம் கப்பல் பினாங்குத்தீவை அடைந்தபிறகு கரையைவிட்டு இரண்டு மூன்று மைல்கள் தள்ளி கடலில் நங்கூரம் போட்டு நிறுத்தி விடுவார்கள் . இமிகிரேஷன் அதிகாரிகள் தனி படகில் கப்பலுக்குள் வருவார்கள் . பிறகு முதல் வகுப்பில் , தொடங்கி முறையே இரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு என அவரவர்கள் பிரயாணம் செய்யும் வரிசைப்படி எல்லா சோதனை யு ம் முடிந்த ஒரு மணி நேரத்தில் அதிகாரிகளுடன் கப்பல் கரையை அடையும் அதன் பிறகுதான் பிரயாணிகள் கரையிறங்க அனுமதிக்கப் படுவார்கள்.)

ராத்திரி ரொம்ப நேரம் அப்பச்சிய பத்தியே ஆத்தா பேசிக் கொண்டிருந்தாங்க. 'அப்பச்சி ஒன்னயப் பாத்தவுடன் சந்தோஷப்படுவாக எப்பவும் கடுதாசியில ஒன்னப் பத்தித்தான் கேட்டுகிட்டே இருப்பாக இப்ப நேரபாக்க போறோம்னு எவ்வளவு சந்தோஷமா இருப்பாக தெரியுமா ?' அப்படீன்னு இன்னும் என்னென்னவோ சொல்லிக் கொண்டே இருந்தாங்க.

நாளைக்குக்காலையில அப்பச்சியை பார்க்கப்போறோம்ங்ற ஆவல்,ஆத்தாவுக்கு மட்டுமா எனக்கும்தான்!அப்பச்சி எப்படி இருப்பாங்க?எனக்கு என்னல்லாம் வாங்கித்தருவாங்க? எப்பப்பாத்தாலும் இந்த பாவாடை சட்டையே போட்டு போட்டு சலிச்சு போச்சு அழகான சட்டை வாங்கித்தரச் சொல்லி கேக்கணும்,எங்களை எங்கெல்லாம் கூட்டிபோவாங்க?என்னல்லாம் வாங்கித்தருவாங்க?

அதிகாலையில ஆத்தா என்னை எழுப்பும் போது அஞ்சு மணி இருக்கும் ஆத்தா எப்பவும் சொல்வார்கள் சாமானியத்தில் இவளை எழுப்ப முடியாதுன்னு சாதாரண நாளுன்னா வழக்கம் போல் எந்திருக்க மாட்டேனோ என்னவோ அன்னைக்கு வாரிசுருட்டி எழுந்து உக்காந்துகொண்டு’என்ன ஆத்தா பினாங்கு வந்துருச்சா கரை தெரியுதா ..?!’என்னால கண்ணை சரியாத் திறக்ககூட முடியலை கசக்கியபடி தூக்கக் கலக்கத்தோடு கேட்டேன்.
'பினாங்கு வந்துருச்சு எந்திரி எந்திருச்சு சன்னவழிய வெளிய பாரு கரை தெரியுதுன்னாங்க! அவ்வளவுதான் ஒரே குதி குதிச்சு ஆத்தாவின் படுக்கையில் ஏறி..
அங்குதான் வட்டமாக குட்டி ஜன்னல் இருக்கு. அதற்கு பொருத்தமா சின்ன திரை போட்டு அழகுபோல இருக்கும்! நானும் ஆத்தாவும் ரூம்ல இருக்கும் போது எப்பவும் பெட்டில் காலை பின்புறமாக மடிச்சு வச்சுக்கிட்டு அதன் வழியே வெளியில் வேடிக்கை பார்க்கறதுக்கு ரொம்ம்ப பிடிக்கும். ஜன்னல் வழியே வெளியில பாத்தாக்க அந்த நீளமான வரண்டா தெரியும். வரண்டாவின் தடுப்புக் கம்பிக்கு அந்தப்பக்கம் கருஊதாக் கடல் தெரியும், அதான் எனக்கு பயமா இருக்குமே.ஆனாலும் ஜன்னல் வெளியே பாக்கறதுனால அதுவும் வரண்டா முழுக்க நிறையப்பேர் அங்க போட்டுருக்குற ஈஸி சேர்ல உக்காந்துகிட்டு,இல்லன்னா படுத்துகிட்டு,நின்னு கிட்டு,நடந்துகிட்டு இருக்கிறதால அதுவும் உள்ளருந்து பார்கறேன்ல அதனால பயமாவே இருக்காது.

இப்பவும் அதுபோல பெட்மேல ஏறிகிட்டு கரை தெரியுதான்னு பார்த்தேன் ! அப்பாடி..! என்ன அழகாருக்கு!ஜிகு ஜிகுன்னு லைட்டெல்லாம் போட்டு! (அதுவரை நான் பார்த்தறியாத புதிய உலகம்!)ஒரே சந்தோஷம்! ஐச.. ஆத்தா இதான் பினாங்கா? கண்ணை பெரிசா திறந்துகிட்டு திரும்பிப் பாக்காமலே ஆத்தாவைக் கேட்டேன் 'அழகுபோல இருக்குல்ல ஆத்தா?அப்படியே பார்த்துக்கிட்டே இருந்தேன்.’சரி சரி எறங்கி வா நேரமாயிரும்ன்னு ஆத்தா சொல்றது காதில விழுகவேயில்லைச..

காலையில வெள்ளனவே ரெடியா இருந்தாதானே மொதல்ல போயி வரிசையில் நிக்கமுடியும் இல்லன்னா கூட்டம் வந்துரும் அப்பறம் ரெம்ப நேரம் காத்து நிக்கணும் அப்படீன்னு என்னை குளிக்கச் சொல்லி பாவாடை சட்டயெல்லாம் எடுத்து தந்து,தலை சீவி பின்னிவிட்டுட்டு அவங்களும் குளிச்சு, புறப்பட்டுக் கொண்டிருக்கும் போது மணி ஆறு இருக்கும் எங்களின் ரூம் கதவை யாரோ வேகமா தட்டினாங்க!

கருத்துகள் இல்லை: