ஊரில் (மெட்றாஸில்) இருந்து புறப்படும் அன்னைக்கு ஹார்பருக்கு ஆச்சி(அக்கா ) அண்ணன் ரெண்டுபேரும் வழியனுப்புவதற்கு வந்திருந்தாங்க, ஆச்சி அவளோட (நாலுமாத)குழந்தையையும் தூக்கிக் கொண்டு வந்திருந்தாள். அவளுக்கு அப்பச்சியிட்ட குழந்தையை காமிக்கணும்னு ரெம்ப ஆச ..
அப்பச்சியிடம் சொணங்காம சீக்கிரமா வந்து ஓம்மகள பாக்கச்சொல்லி சொல்லணும் அவுக இவளைப் பாத்தாகன்னா பொருக்கமாட்டாத (பெருமையா) சந்தோஷப் படுவாகன்னு ஆத்தா சொல்ல .. ஆச்சியும் ஆமா சீக்கிரம் வரச்சொல்லி சொல்லுங்க நாங்கள்ளாம் பாத்து வெகு நாளாச்சு,அப்பறம் நல்லபடியா போய் சேந்ததுக்கு எறங்கினவொடனே அப்பச்சியிட்ட சொல்லி தந்தி கொடுக்க சொல்லுங்க எங்களுக்கு நெனப்பெல்லாம் அங்கதான் இருக்கும் என்றாள்.
அவளுக்கு நம்மளும் போக முடியவில்லையேன்னு ஏக்கம் . அண்ணன் அப்படியில்லை அண்ணன் ஸ்கூல் படிச்சதெல்லாம் மலேசியாவிலதான் அப்புறமா காலேஜில படிக்கிறதுக்குதான் ஊருக்கு வந்தாங்க அதனால அவர்களுக்கு இதெல்லாம் ஒண்ணும் தெரியலை சாதாரணமா இருந்தாங்க.
நாங்களும் ஏழெட்டு மாதம் முன்னாடியே புறப்பட்ருக்க வேண்டியது ஆத்தாவும் ஆச்சிக்கு புள்ளை பொறந்ததுக்கப்புறம் வாரோம்னு சொல்லி.. இப்பத்தான் போக முடிஞ்சுச்சு பாஸ்போட் எடுத்து ஒரு வருஷமாச்சு, போனா எப்பவோ போயிருக்கலாம். இப்பத்தான் தண்ணிபகச்சிருக்கு போல!அப்படித்தான் ஆத்தா எப்பவும் சொல்லுவாங்க நம்ம எங்க இருக்கோமோ அங்க தண்ணி பகையானாத்தான் அந்த எடத்தவிட்டு வேறு எடத்துக்கு போறாப்ல வரும் அது வரை என்னதான் செஞ்சாலும் போக முடியாதுன்னு).
அன்னைக்கு ஹார்பரில் அழுதுகிட்டே ஆச்சி கீழே நின்னுக்கிட்டு கையை ஆட்டிக்கிட்டு டாட்டா சொல்ல நானும் ஆத்தாவும் மேலே கப்பலின் தளத்தில் நின்னு அவ்…வளோ நேரம் கயை ஆட்டிகிட்டே இருந்தோம்!அப்பத்தான் மெது மெதுவா கப்பல் அசைய ஆரம்பிச்சது அட! கப்பல் பொறப்ட்ருச்சு ! அவ்வளவுதான் எனக்கு ஒரே அதிசயம்! கையை ஆட்டவும் மறந்து நெஞ்சுவரைக்கும் இருக்கும் கைப்பிடியில் எக்கி கீழே தண்ணியை தள்ளிக் கொண்டு கப்பல் நகந்து போவதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து..
திடீருன்னு நினைவு வந்து திரும்பி பார்த்தா .. கையை ஆட்டி ஆட்டி காண்பித்துக்கொண்டிருக்கும் ஆச்சி ,அண்ணன் இன்னும் அங்கு சொந்தக்காரங்களை வழியனுப்ப வந்தவங்க எல்லாரும் சின்ன சின்ன உருவமா ! அதிசயிச்சுப்போயி பார்த்துக் கொண்டே இருக்கும் போது அவங்க எல்லாரும் சின்ன சின்ன புள்ளியா..
ஆத்தா...ன்னு என்ன்மோ சொல்ல திரும்புறேன் ஆத்தா பொங்கி பொங்கி கண்ணீரு ஊத்த அழுது கிட்டு மூக்கை சிந்திகிட்டு எனக்கும் அழுகை அழுகையா வருது..
1 கருத்து:
மனம் நெகிழும் பகிர்வு.. தண்ணீர் மலையான் பாடல் ஞாபகம் வருது மீனா
கருத்துரையிடுக