எங்க காடி அந்த ரோடுல நேரே போயி வளஞ்சு திரும்பி எதித்த பக்கத்தில வரிசையா இருந்த ஒரு (கிட்டங்கி)வீட்டுக்கு முன்னால நின்னுச்சு.
அங்க அந்த வீட்டுக்கு வெளியில நெறைய்யப்பேரு நின்னுகிட்டு இருந்தாங்க!'இந்த வீடா?'ன்னு கேட்டேன் ஆமான்னாங்க அம்மான்.
'என்னப்பச்சி இது கூட்டம்...? எதுக்கு !என்னன்னு தெரியலியே’ன்னு ஆத்தா பதறிபோயி கேட்டுகிட்டு இருக்கும் போது எங்களை பாத்த அங்கருந்தவங்க நாலைஞ்சு பேரு 'இதோ வந்துட்டாங்கன்னு சொல்லி கிட்டே காடிக்கு பக்கத்துல வேகமா வந்தாங்க.
நானும் ஆத்தாவும் இறங்குவதற்குள் அவசரமா முதலில் காடியில இருந்து எறங்கிய அண்ணன் பின் பக்கமாக வந்து காடி கதவை திறந்து விட்டாங்க.
அங்க வெளியிலயும் ,உள்ளுக்குள்ளேயும் இருந்தவங்க, எங்ககிட்டத்துல வந்து கிட்டு இருந்தவங்க,எல்லார்கிட்டேயும் ஒரே பதட்டம்…..
ஆத்தாவிற்கும் பட படன்னு வந்துருச்சு, எனக்கும் அங்க இருந்த கூட்டத்தையும், அவங்க எல்லாம் எங்களையே பாத்துகிட்டு இருந்ததும் பாத்து என்னவோ ரெம்ப பயமா இருந்துச்சு.
அண்ணனும் மத்தவங்களும் எங்க ரெண்டு பேரையும் உள்ள கூட்டி போனாங்க,உள்ளுக்குள்ளே நுழஞ்சதும் அங்கருந்த அத்தனை பேரும் எந்துருச்சு நின்னு எங்களுக்கு வழி விட்டாங்க!.
இவ்வளவு பேரு இருக்காங்க “எங்கே அப்பச்சியக்காணும்!ன்னு .....
நான் கூட வருகிறேனா இல்லையான்னு கூடப் பார்க்கலை ஆத்தா, வேகமாக உள்ளே போ(ஓடி)னார்கள் நான் பின்னாடியே போனேன் முதலில் உள்ள ஹாலைக் கடந்து அடுத்த கட்டுக்குள் கூட்டி போனார்கள், உள்ளே... நுழையவே முடியாம கூட்டம்! எல்லாரும் விலகிக் கொண்டு ஆத்தாவுக்கு இடம் கொடுக்க ,யாரோ என்னை அணச்சு பிடிச்சுகிட்டாங்க,உள்ளே போன ஆத்தா…..
"கதறிய கதறல்..." அங்கே….
என் அப்பச்சி அழகாக அமைதியாக புன்னகை மாறாமல் மல்லாந்து படுத்து மீளாத்தூக்கத்தில் இருந்தார்கள்.
“அப்படி அன்று என் கனவுகளை எல்லாம் தன்னோடு எடுத்து சென்ற என் அப்பச்சியை இன்று வரை என்னால் மறக்க முடியவில்லை”.
முற்றும்.
-மீனாமுத்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக