புதன், நவம்பர் 10, 2010

அப்பச்சி... 9

தைப்பிங்கில் அப்பச்சியை எல்லாருக்கும் நல்லாத் தெரியுமாம்!ரெம்ப  நல்லவுகன்னு எல்லாரும் சொல்லுவாங்களாம்.அங்கே கிட்டங்கி இருக்கு அங்கதான் அப்பச்சி மணிலெண்டிங் பண்ணிக்கிட்டுருக்காங்க…..
'தைப்பிங்' ரொம்ப அழகான ஊராம்!..


அங்க பார்க்கவேண்டியது நெறய்ய இருக்காம்! முக்கியமா லேக் காடன்! நடுவில லேக் அதை சுத்தி பெரிய பூங்கா இருக்காம்! பச்சை பசேல்னு பாக்கறதுக்கு அழகா இருக்குமாம்!. 


அப்புறம்' பூமலை'ன்னு ஒரு மலை இருக்காம் பேரு மாதிரியே அதுவும் அழகா இருக்குமாம்! மேலே முருகன் கோயில் எல்லாம் இருக்காம்!மலைக்கு போறதுன்னா ஜீப்பிலதான் போகணுமாம்! அங்க மலை அடிவாரத்தில அதுக்காகவே ஜீப்  நாலஞ்சு இருக்குமாம்!.ஜீப்ல போறதுக்கு டிக்கெட் வாங்கணும். வாங்கி கிட்டு அதில போனா அவங்களை மேலே கூட்டிபோயி இறக்கி விட்டுட்டு அங்க ஏற்கனவே சுத்தி பார்த்துட்டு காத்திருக்கவங்களை ஏத்திகிட்டு கீழே வருமாம். அப்புறமா நாமலும் அதேபோல வர ஜீப்ல கீழ வரணுமாம்!


இப்படி காலைல பத்து மணியில இருந்து  சாயந்தரம் அஞ்சு மணி வரைக்கும்தான் ஜீப் மேலயும் கீழயுமா போய் போயி வந்துகிட்டு இருக்குமாம்.அதுக்கப்புறம் அடுத்த நாள்தானாம்!. ராத்திரிக்கு ஜீப் எதுவும் போகாதாம்! மழை பெய்யுற நேரத்துல  பாதுகாப்பா இருக்குறதுக்காக  யாரையுமே கூட்டி போக மாட்டாங்களாம்.


பூமலைக்கு சுத்திப்பாக்க வரவங்க அங்க தங்கிட்டு வரலாம்னு நெனைச்சாலும் மேலேயே நல்ல நல்ல ஹோட்டல்கள் எல்லாம் இருக்காம் வேணுமின்னா தங்கிட்டும் வரலாமாம் லீவு சமயத்துல முன்னாடியே புக் பண்ணிக்கலாமாம்.இதெல்லாத்தையும் அந்த அண்ணனும்,அம்மானும் மாத்தி மாத்தி சொல்லிகிட்டே வந்தாங்க!


கேக்க கேக்க அதிசயமா இருந்துச்சு!தைப்பிங் போன உடனே அங்கே எல்லாம் கூட்டி போகச் சொல்லி அப்பச்சிகிட்டே கேக்கணும்.


அந்தக்கடை எங்க பெரியத்தா வீட்டுக்கடை அதை பெரியப்பச்சி இறந்தபிறகு அப்பச்சிதான் அத்தனையும் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள்தான் (ரப்பர்)தோட்டங்கள், வரவு செலவு எல்லாம் பார்த்து வந்தார்கள்,அப்பச்சிக்கு உதவியாக இரண்டு கணக்குப் பிள்ளைகளும் இருந்தார்கள்.இவர்கள் எல்லோருக்கும் சமயல் செய்யறதுக்குன்னு ஒரு அண்ணன், அவரும் ஊரில் இருந்து வந்தவர்தான்.


அப்பச்சி எல்லோரிடமும் மிகவும் அன்பாக பிரியமாக இருப்பாங்களாம். அடிக்கடி சிங்கப்பூர்,ஜோஹுர்,மூவார், மலாக்கா, சிரம்பான், கோலாலம்பூர், தாப்பா, ஈப்போ,என எல்லா ஊரிலிருந்தும் பினாங்கிற்கு வேலையாக போறவங்கள்ளாம் வழியில இருக்க தைப்பிங் வந்து கிட்டங்கியில் ராத்திரி தங்கியிருந்துட்டு மறுநா போவாங்களாம். 


அதுபோல பினாங்கு,சுங்குரும்பை,கூலிம்,அலோர்ஸ்டார் என இந்தபக்கம் இருந்து கோலாலம்பூருக்கு வேலையாக வாரவங்களும் தைப்பிங் வந்து தங்கிட்டு போவாங்களாம்!.


அப்படி வர்ற விருந்தாளிகள் எல்லோருக்கும் என்னென்ன தேவைப்படும்னு தெரிஞ்சு அவங்களை பூமலைக்கு கூட்டிகிட்டு போறதுக்கான ஏற்பாடுகள் எல்லாம் செஞ்சு இன்னம் மத்த எடங்களையும் சுத்திகாமிச்சு அனுப்பி வைப்பாங்களாம்! இப்படி அங்கு வாரவங்களூக்கு எந்த ஒரு குறைவும் வைக்காமல் பாத்து பாத்து செய்வாங்களாம் அப்பச்சி!.


அங்க உள்ள சமையல்கார அண்ணனுக்கு அப்பச்சி மேல் அவ்வளவு பிரியமாம் எங்கசெட்டியார் எங்கசெட்டியார் என்று எந்த நேரமும் அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுத்து வருகிறவர்களுக்கு அப்பச்சி என்ன செய்யச் சொன்னாலும் முகம் சுளிக்காமல் செய்து கொடுப்பாராம்.


அப்பச்சிக்கேத்த சமையல்காரர்! கணக்குப் பிள்ளைகளும் சொல்லவே வேண்டாம் அப்பச்சிமேல் அவர்களுக்கும் அப்படியொரு பிரியமாம், அங்குள்ள சீனர்களும் கூட அப்பச்சியை பார்த்தால் அத்தனை மரியாதையோடும் அன்போடும் நடந்து கொள்வாங்களாம் அது எப்படி!அப்பச்சி எப்போதும் எல்லார்கிட்டயும் புன்சிரிப்போடயும் பிரியத்தோடயும் குரல்ல கனிவோடயும்  இருக்குறதாலயோ!?


அந்த நல்ல அப்பச்சியை இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் பார்க்கப்போறோம்!. அப்பச்சி என்னைப் பாத்தவுடனே எங்கிட்டே என்ன பேசுவாங்க? என்ன கேப்பாங்க? எப்டி இருப்பாங்க? அண்ணனிடம் கேட்கலாம் என்று திரும்பி அவங்களைப் பார்த்து இதுதான் தைப்பிங்கா..?’ 


நான் கேட்டது கேட்டுச்சோ என்னவோ தெரியலை யாருமே ஒண்ணுமே சொல்லலை காடி வேகமாக அடுத்த ரோடில் திரும்பிச்சு  அங்க ..

கருத்துகள் இல்லை: