வியாழன், செப்டம்பர் 22, 2011

ஸ்ரீமத் பாகவதம்!


தன் கம்பீரமான குரலில் சொல்ல சொல்ல ஒவ்வொரு
வார்த்தைகளும் நம் மனதில் அப்படியே ஜம்மென்று ஏறி
அமர்ந்துகொள்கிறது! நம்மையறியாமல்கவனம் சிதறாமல்
உபன்யாசத்தையே கேட்கவைப்பது எது?அவரின் கம்பீரமான
குரலா?மிகத்தெளிவான உச்சரிப்பா?அவரிடம் உள்ள
தெய்வீகத்தன்மையா எது?இவையெல்லாமுமா?
ஸ்ரீமத் பாகவதம் கேட்பவர்களை கட்டிப்போட்டுவிடுகிறார்
வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள்!

எல்லோரும் அந்த ஆனந்தத்தை அனுபவிக்கவேண்டும்
என்ற ஆர்வத்தில் இதைஎடுத்து வந்தேன்.இது முதல்பகுதி
YouTube ல் அடுத்தடுத்த பகுதிகள் வரிசையாக உள்ளது 
அவசியம் கேட்கவேண்டும் மனதிற்கு இதமாக இருக்கும்.

ஸ்ரீமத் பாகவதம் கேட்பதே தவம்!.


http://www.youtube.com/watch?v=UixNktiVqG0&feature=share





திங்கள், ஆகஸ்ட் 01, 2011

நிவேதா


அழகாக சிறு குழந்தைகளும் புரிந்துகொள்கிறார் போல
அருமையாக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தார்கள்
ஏற்பாட்டாளர்கள்!.

மேடையில் வண்ணமயமாக அடுத்தடுத்து ஒவ்வொரு காட்சிகளும் அதற்கேற்ற பாடலுடன் அரங்கேற…


இந்த 27 அன்று மூன்று வயது ஆகப்போகும் நிவேதா
மிகவும் ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டே இருந்தவள்
உற்சாகத்தோடு…

’அம்மா… பிள்ளையாரம்மா!’

’அம்மா ஹனுமான்!’

அடுத்து வந்த முருகரை தெரியவில்லை(!) ம்..ம்..
என அவள் யோசிக்க..

’இது முருகாசாமி.. நிவேதா..’

’ம்..ம்..முருகா சாமி….’ என ஆமோத்தித்தாள்

’ஹேய்..! அம்மா..அம்மா…கிருஷ்ணா!’

அத்துடன் கடவுள்களின் அணிவகுப்பு முடிந்து அடுத்து அரங்கேறிய காட்சியை பார்த்தவள் அம்மாவை திரும்பி பார்த்துக்கொண்டே கேட்டாள்…

’அம்மா எங்கே பிரம்மா?’

தூக்கிவாரிப்போட்டது!


ஞாயிறு, மே 08, 2011

அன்னையர் தின நல் வாழ்த்துகள்!


அன்னையர் அனைவருக்கும் அன்பான நல் வாழ்த்துகள்!

வெள்ளி, ஏப்ரல் 01, 2011

குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள். மழலை சொல்...


இந்த பெரிய மனிதர்கள் இருவரும்பேசிக்கொள்வதை....
கேட்டுகிட்டே இருக்கலாம் போல.. !! :)

சனி, மார்ச் 12, 2011

கனிமொழி..


முன்பு ஒரேயொரு தடவை நான் பார்த்து அச..ந்து
(அசந்துன்னா களச்சு)போன ஒரு படம் பத்தி விமர்சனம் 
எழுதினேன்,எனக்கு சினிமா விமர்சனமெல்லாம் எழுதி 
பழக்கமில்லை.அதுக்கப்புறமா இப்போதுதான்..

உண்மையில அசத்தல் படம்!கனிமொழிபடத்தை
பத்தி  சொல்லணும்னா..ஒருத்தன் ஒரு பொண்ண 
விரட்டி விரட்டி காதலிக்கிறான்..கூட நண்பர்கள்.. 
கடைசியில....(ம்ஹூம் அதை சொல்லிட்டன்னா
அப்புறமா இப்படி கதையை சொல்லிட்டா எப்படி
ன்னு கோச்சுக்குவீங்கல்ல..) சே..எல்லா படத்து
லயும் இதத்தானே சொல்றாங்க இதுல என்ன
அசத்தல்ன்னு கேக்குறீங்க... கேக்குது..கேக்குது :)

அதை எடுத்து...முடிச்சிருக்கிறவிதம் இருக்கே..
ப்ரமாதம்! எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நான் ரசித்து
அனுபவித்ததை எல்லோரும் அனுபவிக்கவேண்டும்
என்ற ஆர்வம்தான் இந்த பகிர்தல் அவ்வளவுதான்!   

கதையாகட்டும்,அதன் உடே ஓடும் நகைச்சுவை
யாகட்டும்!கதாபாத்திரங்களாகட்டும்,கதை நடக்கிற 
களமாகட்டும் எல்லாம் அசத்தல்!சும்மா அலட்டிக்காம
அனாயசமான அருமையான படம் எடுத்துருக்காங்க!



இந்தப்படத்தின் இயக்குனர் ஸ்ரீபதி ரங்கசுவாமி என்பவர் 
அவருக்கு என் வாழ்த்துகள்!

(ஏன் இந்த படத்தை பத்தி யாருமே சொல்லலை!!)

முக்கியமா ஒண்ணு... 

இந்த கனிமொழியப்பற்றித்தான் சொல்ல வந்தேன் 
நீங்களா ஏதாச்சும் நெனைச்சு வந்தா அதுக்கு நான் 
பொறுப்பில்லைJ)

(எல்லோரும் பெரிய பெரிய விஷயங்கள் எல்லாம்
பேசுறாங்க…என்னவோ எனக்கு தெரிந்தது.. :))

செவ்வாய், மார்ச் 01, 2011

ஸ்வர்ணலிங்கேஸ்வரர்!


                     திருச்சிற்றம்பலம்.


காசியில் நகரத்தார் சத்திரத்தில் ஒவ்வொரு
வருடமும் தீபாவளியன்று ஸ்வர்ணநாயகி
விசாலாட்சி மட்டுமே கொலுவிருந்து பக்தர்களுக்கு
காட்சி தந்த அம்பிகையின் பக்கத்தில் ஸ்வர்ண
லிங்கேஸ்வரரும் இருந்தால் எத்தனை அழகு!
என நினைத்த அடியாரின் எண்ணம் இன்று
நகரத்தார்களின் ஒத்துழைப்பினால் ஈடேற
அருள்  புரிந்த அழகு நாயகனின் அற்புத தரிசனம்!



வைரப் பிறை,வைர விபூதிபட்டையுடன் 3 ½ கிலோ
தங்கத்தில் செய்த சிவலிங்கம் காசி நகரவிடுதிக்கு
கொண்டு செல்லும் முன் பிள்ளையார்பட்டி உள்ளிட்ட
ஒன்பது நகரத்தார் கோவில்களுக்கும் சென்று பின்
எழுபத்தைந்து நகரத்தார்களின் ஊர்களுக்கும் எடுத்து
சென்று பிறகு(23)சென்னையில் திருவெற்றியூர் சென்று
நகரத்தார் சத்திரத்தில் வைத்து(சென்ற இடமெல்லாம் 
பொதுமக்கள் காண)அபிஷேக ஆராதனைகள் செய்து 
கோலாகலமாக பிப்ரவரி 26 (2011) திகதி டெல்லிக்கு
சென்று காசி நகரத்தார் சத்திரத்தில் சிவராத்திரியன்று 
ஸ்வர்ணாம்பிகையின் அருகில் ஸ்வர்ணலிங்கேஸ்வரர் 
பிரதிஷ்டை செய்யப்பட்டு அடியார்களுக்கு அருட்காட்சி
தருவார்.
                                             
                     திருச்சிற்றம்பலம்









சனி, பிப்ரவரி 12, 2011

(செட்டிநாட்டின்) எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள்.



செட்டிநாட்டு ஊர்கள் எழுபத்தைந்தின் வெண்பாவை முன் பதிவில் பார்த்தோம்.

இப்பொழுது அந்த எழுபத்தைந்து ஊர்கள் என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.

செட்டிநாட்டு ஊர்கள் எழுபத்தைந்தை

பற்றிய வெண்பா.

 

கோட்டையிலே மூன்று குடிகளிலே ஆறாகும்
பாட்டைவளர் பட்டிஇரு பத்தாகும்-நாட்டமிகும்
ஊர் பத்தாம் ஏரி, குளம், ஊருணி ஒவ்வொன்றாம்
சேர் வயல்கள் ஐந்தென்று செப்பு.

மங்கலம் மூன்று,வரம் ஒன்றே ஆறுபுரம்,
திங்கள் வகை ஒவ்வொன்று சீர் புரிகள் நான்கு,
பிற ஊர்கள் பத்து  சிலை குறிச்சி ஒன்றோ(டு)
அறம் வளர்ப்பார் ஊர் எழுபத்தைந்து.

மேலே குறிப்பிட்டுள்ள ஊர்கள் எழுபத்தைந்தின் பெயர்கள்:

கோட்டையிலே மூன்று::
1.தேவகோட்டை, 2.அலவாகோட்டை,
3.நாட்டரசங்கோட்டை.

குடிகளிலே ஆறு:
1.அரியக்குடி,2.ஆத்தங்குடி,3.பலவான்குடி,4.காரைக்குடி,
5.பனங்குடி,6.கீழப்பூங்குடி

பட்டி இருபத்து:
1.சிறுகூடல்பட்டி, 2.மகிபாலன்பட்டி,3.கண்டவராயன்பட்டி, 4.மிதிலைப்பட்டி,5.ஆவினிப்பட்டி6.குருவிக்கொண்டான்
பட்டி,7.கீழச்சிவல்ப்பட்டி,8.வேந்தன்பட்டி,9.வலையபட்டி,
10.புதுப்பட்டி,11.கொப்பனாபட்டி,12..நற்சாந்துபட்டி,
13.பனையப்பட்டி,14.வேகுப்பட்டி,15.மதகுபட்டி,16.கடியாபட்டி,
17.நேமத்தான்பட்டி,18.கல்லுப்பட்டி,19.தேனிப்பட்டி,
20.உலகம்பட்டி.

ஊர் பத்து:
1.கோட்டையூர், 2.பள்ளத்தூர், 3.கண்டனூர், 4.செவ்வூர், 
5.ஒக்கூர்,6.தெக்கூர்,7.உறையூர்,8.வெற்றியூர்,9.செம்பனூர்,
10.அமராவதிபுதூர்.

ஏரி,குளம்,ஊருணி ஒவ்வொன்று:
1.பாகனேரி, 2.கருங்குளம், 3.தாணிச்சாஊருணி

வயல்கள் ஐந்து:
1.புதுவயல்,2.சிராவயல்,3.ஆராவயல்,4.எ.சிறுவயல்,5.
ஒ.சிறுவயல்.

மங்கலம் மூன்று:
1.பட்டமங்கலம்,2.கொத்தமங்கலம்,3.காளையார்மங்கலம்.

வரம் ஒன்றே:
1.ராயவரம்.

ஆறு புரம்:
1.நாச்சியாபுரம்,2.நடராஜபுரம்,3.கே.லக்ஷ்மிபுரம்,
4.வி.லக்ஷ்மிபுரம்,5.ராமச்சந்திரபுரம்,6.சொக்கனாதபுரம்.

திங்கள் வகை ஒவ்வொன்று:
1.குழிபிறை,2.விராமதி,

சீர் புரிகள் நான்கு:
1.மேலைச்சிவபுரி,2.கோட்டையூர்அளகாபுரி, 3.கே.அளகாபுரி,
4.பி.அளகாபுரி.

பிற ஊர்கள் பத்து:
1.செட்டிநாடு,2.கானாடுகாத்தான்,3.கண்டரமாணிக்கம்,
4.கல்லல்,5.கோனாபட்டு,6.மானகிரி,7.நெற்குப்பை,
8.ராங்கியம்,9.அரிமளம்,10.சக்கந்தி.

சிலை,குறிச்சி ஒன்றோடு:
1.விரயாச்சிலை,2.பூலாங்குறிச்சி.

வியாழன், பிப்ரவரி 03, 2011

செட்டிநாட்டு ஊர்கள் எழுபத்தைந்தை பற்றிய வெண்பா.

கோட்டையிலே மூன்று
குடிகளிலே ஆறாகும்
பாட்டைவளர் பட்டிஇரு பத்தாகும்-
நாட்டமிகும் ஊர் பத்தாம்
ஏரி, குளம், ஊருணி ஒவ்வொன்றாம்
சேர் வயல்கள் ஐந்தென்று செப்பு.

மங்கலம் மூன்று,வரம் ஒன்றே
ஆறுபுரம்,திங்கள் வகை ஒவ்வொன்று
சீர் புரிகள் நான்கு,பிற ஊர்கள் பத்து
சிலை குறிச்சி ஒன்றோ(டு)
அரம் வளர்ப்பார் ஊர் எழுபத்தைந்து!.

ஞாயிறு, ஜனவரி 16, 2011

வெங்காய மாலை!

விலை மதிப்பில்லா.. வெங்காய மாலை!

இன்று இந்த வெங்காயம் இப்படி கிடு கிடுவென்று
விலை ஏறும் என்று என் உள்ளுணர்வு கூறியதாலோ
என்னவோ அன்றே( 20 வருடங்கள் முன்) இந்த அழகான
வெங்காயமாலையை செய்தேன்!

வியாழன், ஜனவரி 13, 2011

பொங்கலோ பொங்கல்!

பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட
நலமெலாம் பெற்று நாடு செழித்திட 
இனிய நல் வாழ்த்துகள்!

வியாழன், ஜனவரி 06, 2011

                           இதயம் நிறைந்த இனிய 
                       புத்தாண்டு நல் வாழ்த்துகள்! 

இவ்வாண்டு புத்தாண்டு குதூகலத்தில் வாழ்த்துகள் சொல்ல
தாமதமாகி விட்டது! அதனாலென்ன..

உலகமெங்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் என்றென்றும்
இக்குதூகலம் நீடித்து நிலைத்து நிற்க உளம் உருக
இறைவனை வேண்டி வணங்குகிறேன்.

என்றென்றும் எங்கும் மகிழ்ச்சி நிலவட்டும் வாழ்த்துகள்!

சனி, டிசம்பர் 25, 2010

செவ்வாய், நவம்பர் 23, 2010

அப்பச்சி...10

எங்க காடி  அந்த ரோடுல  நேரே  போயி  வளஞ்சு  திரும்பி  எதித்த பக்கத்தில  வரிசையா  இருந்த  ஒரு (கிட்டங்கி)வீட்டுக்கு  முன்னால நின்னுச்சு.

புதன், நவம்பர் 10, 2010

அப்பச்சி... 9

தைப்பிங்கில் அப்பச்சியை எல்லாருக்கும் நல்லாத் தெரியுமாம்!ரெம்ப  நல்லவுகன்னு எல்லாரும் சொல்லுவாங்களாம்.அங்கே கிட்டங்கி இருக்கு அங்கதான் அப்பச்சி மணிலெண்டிங் பண்ணிக்கிட்டுருக்காங்க…..
'தைப்பிங்' ரொம்ப அழகான ஊராம்!..

திங்கள், நவம்பர் 01, 2010

அப்பச்சி 8

 வழி பூரா அண்ணன் சிரிக்க சிரிக்க ஏதேதோ பேசிக்கிட்டே வந்தாங்க ஆத்தா எதுக்குமே சரியாப் பேசலை. அவுக கேட்டதுக்கு மட்டும் என்னமோ சொல்லிக் கிட்டிருந்தாங்க...

செவ்வாய், அக்டோபர் 19, 2010

அப்பச்சி... 7

அப்போ...? இங்கேயிருந்து அக்கரை போவதற்கே அரை மணி நேரமாகும்அதுக்கப்புறம் அங்கேயிருந்து ரெண்டரை மணி நேரம் என்றால் மூணு மணிநேரத்துக்குமேல ஆகுமே '?ஆத்தா குரல் என்னமோ மாதிரி..

திங்கள், அக்டோபர் 04, 2010

அப்பச்சி... 6


அப்பத்தான் அங்கு வந்த ஒருத்தர் ஆத்தாவை பாத்து " ஆ.. ச்சி..." அப்படின்னு சத்தமா கூப்பிட்டு கிட்டு ஆத்தாகிட்ட ஏதோ சொல்ல வேகமா வந்தவரை அங்கிருந்தவங்க அவசரமா ஓடிவந்து'அண்ணே அண்ணே இருங்க  இங்க வாங்கன்னு அவர் கையை பிடிச்சு இழுத்து கூட்டிகிட்டு போக நானும் ஆத்தாவும் ஒண்ணும் விளங்காம பார்த்துக் கிட்டிருக்க'
சரி சரி நேரமாகுது வாங்க சொணங்காம புறப்படலாம்னு அம்மான் சொல்ல அங்கேருந்து எல்லாரும் புறப்பட ..

புதன், செப்டம்பர் 22, 2010

அப்பச்சி... 5



நாங்க போன போட் சின்னதா வெயில் படாம இருக்க மேல மூடியிருந்துச்சுஉள்ளே எதிர் எதிரே பெஞ்ச் மாதிரி போட்டிருந்துச்சு. அதில் நானும் ஆத்தாவும் ஒரு பக்கமும், எதித்தாப்ல அந்த அண்ணனும் கூடவந்த ரெண்டு இமிகிரேஷன் ஆஃபீஸர்களும் உக்காந்திருந்தாங்க...

வியாழன், செப்டம்பர் 09, 2010

அப்பச்சி... 4

ரூம் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு ஆத்தாயாரோ கூப்பிடுகிறாங்க கதவத் தெறக்கவா..கேட்டுக்கொண்டிருக்கும்போதே ஆத்தாவே வந்து கதவைத் திறக்க வெளியில.. ஆத்தாவோடசொந்தக்காரர் (கப்பலில் உள்ள மேலும் இரு அதிகாரிகளுடன்) நின்று கொண்டிருந்தார்...!

திங்கள், ஜூலை 26, 2010

அப்பச்சி.. 3

ஊரில் (மெட்றாஸில்) இருந்து புறப்படும் அன்னைக்கு ஹார்பருக்கு ஆச்சி(அக்கா ) அண்ணன் ரெண்டுபேரும் வழியனுப்புவதற்கு வந்திருந்தாங்க, ஆச்சி அவளோட (நாலுமாத)குழந்தையையும் தூக்கிக் கொண்டு வந்திருந்தாள். அவளுக்கு அப்பச்சியிட்ட குழந்தையை காமிக்கணும்னு ரெம்ப ஆச ..

ஞாயிறு, ஜூலை 11, 2010

அப்பச்சி - 2

‘காலையில சீக்கிரமா எந்திருச்சு பாஸ்போட்டெல்லாம் எடுத்து வச்சுக்கிட்டு தயாரா இருக்கணும், இமிகிரேஷன் அதிகாரிங்கல்லாம் வெள்ளனவே வந்திருவாக ஒம்போது மணிக்கெல்லாம் சோதனை ஆரமிச்சுருவாக முன்னாடியே போய் வரிசையா நிக்கணும் அந்தா இந்தான்னு மத்தியானம் ஒருமணி ரெண்டுமணியாயிரும் கரையெறங்குறதுக்கு என்று ஒருத்தர்(அவர் நெறையத்தடவை கப்பலில் போய் வந்துகிட்டு இருக்காராம்)எல்லோரிடமும் சொல்லிக்கிட்டிருந்தார்.

ஞாயிறு, ஜூன் 20, 2010

அப்பச்சி... 1


”அன்பான இனிய  தந்தையர் தின நல் வாழ்த்துகள்!"

முன்பு ”தோழியர்” வலைப்பதிவிலும்,பின்பு “தமிழோவியம்”த்திலும் வெளி வந்த பதினோரு பாகங்கள் கொண்ட ’அப்பச்சி’தொடர் கதையை இன்று தந்தையர் தினத்தின் நினைவாக மீள் பதிவு செய்கிறேன்.தங்களின் மேலான கருத்துக்களை தந்து செல்லுங்கள்.

நன்றியுடன் அப்பச்சியின் அன்பு மகள்!


அப்பச்சி

‘முந்தா நா, நேத்து,இன்னைக்கோட மூணு நாளாச்சு இன்னொம் மூணுநா போச்சுன்னா அதுக்கடுத்தனா காலைல அப்பச்சியை பாத்துறலாம்ல (அம்மா)ஆத்தா?’.


ஞாயிறு, மே 30, 2010

அற்புதம்!



கைலாஷ்! வார்த்தையை உச்சரிக்கும்போதே உள்ளத்தில் ஏற்படும் பரவசத்தை என்னவென்று சொல்ல! உச்சரிப்பதற்கே இந்த நிலை என்றால் நேரில் 
சென்றால்!சொல்ல வார்த்தைகள் இல்லை.


அப்படியொரு பேரு பெற்றவர்கள்!வணங்குகிறேன் இவர்களை.

நன்றி:   திருக்கயிலாய நந்தி கிரி வலம் 

புதன், மே 19, 2010

நாதஸ்வரம்

சீரியல் என்றாலே மனதில் ஒரு வெறுப்பு. அதை மாற்றி விட்டது சன் தொலைக்காட்சியில் சமீபத்தில் அரங்கேறிய இந்த நாதஸ்வரம்! ஆனாலும் மனதிற்குள் சின்ன சந்தேகம், ஒரு வேண்டுதல். போகப் போக நாடகத்தின் தன்மை மாறி விடாமல் இதை இப்படியே தொடர வேண்டும் இதன் இயக்குனர் என்று.

இயல்பான நடையில் எந்த வித ஆடம்பரம் அலட்டல் மேல்பூச்சு ஏதும் இல்லாத ஒரு தொலைக்காட்சி சீரியல் இந்த நாதஸ்வரம்! இதில் தோன்றும் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரின் நடிப்பும்..! ம்ஹூம் நடிப்பென்றே சொல்லக்கூடாது! அவர்கள் அவர்களாவே வாழ்கிறார்கள்! சூழ்நிலையும் அவ்வாறே!

நாடகம் என்பதை காட்டிலும் அன்றாடம் சாதாரண குடும்பத்தினரின் வீட்டிற்குள் நடக்கும் நிகழ்வுகளை (இடையிடையே நகைச்சுவை கலந்து) அப்படியே வீடியோ பதிவு போல்! நமக்கு அளித்திருக்கிறார், இதன் இயக்குனரும், கதாநாயகனுமான திருமுருகன்.

இன்னும் இது பற்றி சொல்லலாம்! மொத்தத்தில் (மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு :) நல்ல இசை!




வியாழன், மே 13, 2010

ஒரு வழி சொல்லுங்களேன்

ரொம்ப நாளாய் பாடாய் படுத்தற விஷயம். 
கொஞ்சநேரம் சமையல் கட்டைவிட்டு வந்தால் 
போதும் உடனே ஃப்ரிஜுக்கு கீழிருந்தோ அல்லது 
ஏதாவது இடுக்கிலிருந்தோ சத்தமில்லாமல் 
வந்து சட்டென்று சாப்பாட்டு மேஜையின் 
மேல் ஏறி உலா வர ஆரம்பிக்கும். நாம் வருவது 
எப்படித்தான் தெரியுமோ நாம் ஒரு காலை உள் 
வைக்கும்போதே கண்டுகொண்டு மேஜைக்கு 
கீழே எங்காவது நழுவி அப்படியே பதுங்கிக்
கொள்ளும் அப்போத்தானே மறுபடி நாம் 
நகர்ந்தால் சட்டென்று வெளிவந்து (எதிலடா 
வாய் வைக்கலாம்னு)விட்டஇடத்தில் இருந்து 
தொடர முடியும்.

அப்படி உலாவரும்போது தப்பித்தவறி நம் கண்களில்  
பட்டாலோ வெறுக்கென்று நம் உடலில் ஒரு உணர்வு 
தோன்றுமே அய்யே.. அவ்வளவுதான் அதுக்கப்புறம்  
மேஜை மேலிருக்கும் அத்தனை பண்டங்கள்மேலும்
(மூடி இருந்தால்கூட)சந்தேகம் வர ஆரம்பிக்கும் இதில்  
ஏறி இருக்குமோ அதில் வாய் வைத்திருக்குமோ என்று 
எதைப்பார்த்தாலும் அருவருப்பு.

சரி பாவம் சாப்பாடு கிடைக்காமல்த் தானே இப்படி  
அலையுதுகள் அதனாலே நாமே வேளா வேளைக்கு  
சாப்பாடு போட்டுட்டா அப்புறம் இந்த தொந்தரவு  
இல்லை அதுக பாட்டுக்கு சாப்பிட்டுட்டு தொந்தரவு 
செய்யாமலாவது இருக்கும் என்றுஅதுங்க பதுங்கற  
இடமா பாத்து பாத்து சோறு அல்லது தோசை இனிப்பு  
எல்லாம் நம்ம சாப்பிடறதை போடணும் அதுகளுக்கு  
தெரியும் இல்லாட்டினா மறுபடி நம்மோட பங்குபோட 
மறுபடி மேஜை மேல ஏறிரும்ல(எல்லாம் ஒரு
நினைப்புத்தான்:) என்று வகை வகையா போட்டா 
அதை மோந்து கூட பாக்காது பழையபடி மேஜைதான்! 
அங்கே போட்ட சாப்பாடு காஞ்சுபோய். கிடக்கும் ம்ம்..

இதுல இன்னோரு கஷ்டம் நாம நடக்கும் போது  
கால்களுக்கு இடையில் குறுக்கும் நெடுக்கும் ஓடி  
அதும்மேல மிதிக்காம இருக்க நாம் இ..இ.. ஈ..ஏ..இ.. 
ன்னு(வினோதமான சத்தங்களுடன்)  பரதநாட்டியம் 
வேற கத்து வச்சுக்கனூம்.

இந்த பல்லியை(அதுக்கு எந்த தொந்தரவும் செய்யாம) 
விரட்டறதுக்கு என்னதான் வழி? தயவு செய்து 
யாராவது சொல்லுங்களேன்.






சனி, மே 08, 2010

அனைவருக்கும் அன்னையானவள் !

அன்னையர் அனைவருக்கும்  அன்பான வாழ்த்துகள்!

குழுமத்தில் நண்பர் தமிழ்த்தேனி அவர்கள் இட்ட இந்த
பாடல் வெகுவாக கவர்ந்தது.  அன்னையர் தினத்தின்
நினைவாக அதை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.


கற்பெனும் தரத்தை கண்ணியமாய்க் காத்து
அப்பனின் விந்தை  யற்புதப் பந்தில்
வாங்கித்  தாங்கி கருவாக்கி  உருவாக்கி
இடிபோன்ற  வலிதாங்கி இடைவழியே
வெளிவாங்கி கனக முலைவழியே
உதிரத்தைப் பாலாக்கி அன்போடு
அரவணைத்தூட்டி   கைகால் முளைக்க
வைத் தறிவும் ஆயுளும் அணுக்குள்
நுணுக்கி   அற்புதமாய் காத்து
அப்பனையும் அடையாளம் காட்டிய
அற்புதப் படைப்பாளி  அம்மா!
அம்மா  என்றால்  அம்மா

-தமிழ்த்தேனீ





செவ்வாய், ஏப்ரல் 13, 2010

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

                                    கருப்பர் கோவில்

கருப்பண்ணன் வாழ்கின்ற
ராங்கியம் சென்றிட்டால்
காலமும் காத்து நிற்பான்.

கண்போன்ற மாதராம்
ஏகாத்தா ராக்கம்மை
கருணையாம் அன்பை ஈவார்

விருப்பின்றி வெறுப்பின்றி
வந்திட்ட அனைவருக்கும்
விரும்பிய வரம் அருள்வான்

விளயாத நிலத்தையும்
விளவித்து காட்டியே
வித்தைகள் புரிந்து நிற்பான்

உருகியே தினம் பாடி
உள்ளத்தில் வைத்திட்டால்
உலகினை ஆளவைப்பான்

உறவென்று அவனையே
உறுதியாய் பற்றிட்டால்
உண்மைகள் புரியவைப்பான்

இரு பொழுதும் விளக்கேற்றி
இல்லத்தில் கும்பிடவே
இன்முகம் காட்டிவருவான்

இல்லாமை நிலைபோக்கி
எல்லாமும் பெற்றிடவே
என்றென்றும் அருள் புரிவான்

-அரிமழம் செல்லப்பா


வெள்ளி, டிசம்பர் 04, 2009

நீயும் நானும்



நீ நான்
வரும் போது வராததும்
வராத போது வருவதும்
வழக்கமாகி போனது
உனக்கும் எனக்கும்!

-மீனா

வியாழன், அக்டோபர் 15, 2009

இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்!



ஏற்றுக தீபம்
எழிலொளி சூழ்கவே
இன்பம் பெருக
எல்லோரும் வாழ்கவே
ஆற்றுக பணி
அவனியெல்லாம் சிறக்கவே
அன்பு பெருக
அறநெறி ஓங்கவே
போற்றுக நம்மொழி
புகலுக செம்மொழி
புவனம் ஏத்த புகழுற
வாழ்க வாழ்கவே

இத்தீபத்திருநாளில்
இதயம் நிறைந்து
இன்பம் பொங்கும்
இனிய தீபாவளி நல்
வாழ்த்துகள்!

வெள்ளி, செப்டம்பர் 25, 2009

நவசக்தி நாயகியே.....

கலையாத கனவுகளின் நினைவான நிலவொளியே

அலையாடும் நெஞ்சிற்கு ஆறுதலாய் வருபவளே

மலையரசி பெற்றெடுத்த மாதவத்தின் பெரும்பயனே

குலையாத பேரெழிலின் அழியாத நித்தியமே

வலையாடும் வேல்விழியால் வண்ணத்தை இறைப்பவளே

நிலையாக என்நெஞ்சில் நின்றாடும் சுந்தரியே

சிலையாக நின்றென்னைச் சித்தம் குலையச் செய்பவளே

கலையாவும் பயிலவைக்கும் கருத்தான துர்க்கையளே ! 1


உனையெண்ணிப் பாடிவரும் அடியவரின் துயர் தீர்ப்பாய்

உனையன்றி வேறில்லை என்பவரை உயர்த்திடுவாய்

உன்னருளால் இயங்குகிறேன் உலகாளும் தூயவளே

உன்பெருமை பாடுகிறேன் உத்தமியே சுந்தரியே

உன்கண்ணின் ஒளியாலே என்வாழ்வு சிறக்குதம்மா

உன்கைகள் அணைப்பாலே என்மேனி சிலிர்க்குதம்மா

உன்னைப்போல் ஓர்தெய்வம் உலகினில்நான் கண்டதில்லை

உண்மையிது சொல்லிவைத்தேன் உண்மையே நீதானம்மா! 2


ஏனென்று கேளாமல் என்னுள்ளே நீ புகுந்தாய்

தானாக வந்தென்னில் தணியாத சுகம் தந்தாய்

ஊனாடும் உயிரெல்லாம் நிறைந்தங்கே ஒளிசெய்தாய்

மீனாடும் கண்ணாலே மனதினிலே நிறைந்துவிட்டாய்

தேனூறும் சொல்லாலே தித்திக்கும் தமிழ்தந்தாய்

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியானாய்

நானாக நானில்லை என்னுமோர் நிலைதந்தாய்

பூணாரம் பூண்டவளே பொன்மகளே துர்க்கையம்மா! 3


மலையமான் மகளாகி மறையோனுக்காய்த் தவமிருந்தாய்

கலையாத பக்தியுடன் ஊசிமுனைத் தவமிருந்தாய்

தலையாடும் கிழவனாகச் சிவன்வரவே நீசிரித்தாய்

பிழையான மொழிபேசும் விருத்தனையே நீசினந்தாய்

பிறழாத பணிவுடனே பணிவிடைநீ செய்திருந்தாய்

அழகான தன் தோற்றம் சிவன்காட்ட நீமகிழ்ந்தாய்

மனங்கொண்ட மணவாளன் மனம்மகிழ மணமுடித்தாய்

எனையாளும் தாய்நீயே என்றென்றும் எனைக்காப்பாய்! 4


பாற்கடலில் நீயுதித்துப் பரந்தாமன் மனையானாய்

ஆர்ப்பரிக்கும் அலைகடலில் அழகே நீ நிதியானாய்

மாலவனின் மார்பினிலே குடியிருக்கும் மங்கையானாய்

சூலம் ஏந்தியேநீ மஹிஷசுர மர்த்தினியானாய்

விஷ்ணு மாயையாய்நீ மாலினைத் துயிலெழுப்பினாய்

மதுகைடப வதம்செய்த மனோஹரியும் நீயம்மா

வணங்கிவரும் அடியவரின் மனதுறையும் பொருள் நீயே

நனியனேன் என்னையும் காப்பதுவுன் கடனம்மா! 5


சொல்விளக்கும்பொருளானாய் சொல்விளக்கமே நீயானாய்

பல்லோரும் போற்றிடவே பார்புகழும் உருவானாய்

கல்லார்க்கும் கற்றார்க்கும் காட்டு மறைப்பொருளானாய்

எல்லாமும் நீயாகி மஹா ஸரஸ்வதியாய்த் திகழ்ந்தாய்

பல்வினைக்கும் சொந்தமானக் கொடியவரை வதம் செய்தாய்

வல்வினையால் வருந்துவோரின் துன்பமெல்லாம் நீ துடைத்தாய்

கல்விக்கே அதிபதியாய் கலைமகளெனும் பேர்பெற்றாய்

சொல்லாலே துதிக்கின்றேன் தூயவளே காத்திடம்மா! 6


ஏழுலகும் போற்றுகின்ற எங்கள்குல நாயகியே

ஏழ்கடலும் வற்றச்செய்யும் ஹூங்காரம் கொண்டவளே

ஏழுதலை நாகமுன்றன் முடிமேலே ஆடுதம்மா

ஏழுசுரம் பாடிவரும் இன்னிசையின் நாயகியே

ஏழ்முனிவர் கைதொழுதுன் அடிபோற்றி வந்தாரம்மா

ஏழேழு பிறவிக்கும் என்றன் துணையானவளே

ஏழ்நிலையில் வீற்றிருந்து யோகியர்க்கு அருள்பவளே

ஏழையெனைக் காத்திடவே எழுந்தோடி வாருமம்மா! 7


எட்டுத்திக்கும் புகழ்மணக்கும் ஏகாம்பரி நாரணியே

எட்டாக்கனியாக எங்கிருந்தோ அருள்பவளே

எட்டியுன்னைக் கண்டிடவோ எனக்குள்ளே தெரிபவளே

எட்டிரண்டு கைகள் கொண்ட எனையாளும் துர்க்கையளே

எட்டிவரும் துன்பங்கள் எனைவருத்தச் செய்யாதே

எட்டாத இன்பங்கள் எனக்கிங்கே இனிவேண்டாம்

எட்டியுன்றன் கால்பிடித்தேன் எனையேற்றுக் கொள்ளம்மா

தட்டாதிப் பாலகனைப் பரிந்தேற்றுக் கொள்ளம்மா! 8


நவமணியே! நவநிதியே! நல்லோரின் துணை நீயே!

நவாவரண நாயகியே! நினைத்தபோது வந்திடுவாய்!

நவயோக சுந்தரியே! நாடுமன்பர் நலம்சேர்ப்பாய்!

நவகோண நாயகியே! நாளுமின்பம் கூட்டிடுவாய்!

நவநவமாய்ப் பொலிபவளே! நெஞ்சினிலே நீயிருப்பாய்!

நவதுர்கை நாயகியே! நோய்பிறப்பு தீர்த்திடுவாய்!

நவசக்தி நங்கையளே! நாதமுடி வானவளே!

நவராத்ரியில் நினைப்பணிந்தேன்! நல்வரம் நீ தருவாயம்மா! 9


-சங்கர்குமார்

வியாழன், செப்டம்பர் 24, 2009

நாட்டரசன்கோட்டை நாயகி !

கண்களுக்கு ஒளிதரும் கண்ணுடைய நாயகி கண்ணாத்தாள்!

சிவகங்கை தேவஸ்தானம் மதுராந்தகி நாச்சியார் ஆளுகைக்குட்பட்ட 86 திருக்கோயில்களில் சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவிலும் ஒன்றாகும். முத்துக்குட்டிப்புலவர் என்பவர் ”கண்ணுடைய நாயகி அம்மன் பள்ளு என்று கண்ணாத்தாளின் மகிமையை சிற்றிலக்கியமாகவே படைத்திருக்கிறார்!.

கண்ணுடையநாயகி 6 சகோதரிகளுடன் தோன்றியதாக முத்துக்குட்டிப்புலவர் சொல்கிறார்..

விரும்பு காளையில் வாள்மேல் நடந்தாள் வாளைப்பனங்குடி பெரியநாயகி , வெற்றி யூரினில் அம்மன் , அரும் பொருளுவாட்டிப் பெரியாள் , அடுத்த மங்கலந்தன்னில் வாழ் அறியவள் இவளாது பெண்களுக்கும் பெரியவளார்க்கும் பெரியவள் பெரும்புரியெல்லாம் பெற்றவள் என்னைப் பெற்றதாய் கன்ணுடையவள் என்று.

அந்த 6 அன்புச்சகோதரிகள் காளையார் கோவில் வாள்மேல் நடந்த அம்மன், பாகனேரி புல்ல நாயகி அம்மன், பனங்குடி பெரிய நாயகி அம்மன், வெற்றியூர் அம்மன், உருவாட்டி பெரிய நாயகி அம்மன், மறவங்கலத்தில் அரிய நாச்சி அம்மன் ஆகியோர்கள் ஆவார்கள்.

கண் சம்பந்தப்பட்ட நோய் எதுவாய் இருந்தாலும் கண்ணாத்தாளை வேண்டி(வெள்ளியினால் செய்த) கண்மலர் வைத்து வணங்கினால் போதும்.அதுபோல கண் மற்றும் உடம்பின் எந்த பாகமென்றாலும் நோய் குணமாக வேண்டி மாவிளக்கு(அரிசியுடன் வெல்லம் சேர்த்து இடித்து செய்வது) ஏற்றுவதாக வேண்டி அம்மன் பாதத்தில் ஏற்றி வைத்து அவ்விளக்கை எடுத்து உடம்பில் பாதிக்கப்பட்ட இடத்தில் சிறு துணியை விரித்து அதன்மேல் வைத்து எடுத்து குணமாக்கு தாயே என்று வணங்கி பலன் கண்டவர்களும் ஏராளம்!

நாட்டரசன்கோட்டையில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கொருமுறை நடைபெறும் களியாட்டம் வெகு சிறப்பானது. மேலும் பதினெட்டுச்சித்தர்களில் ஒருவரான அழுகுணிச்சித்தர் இவ்வூரில்த்தான் அடங்கியுள்ளார் என்பதும் கம்பன் சமாதி இங்குதான் உள்ளது என்பதும்
போற்றுதற்குரியதாகும்!.

அவிச்ச நெல்லும் முளைக்கும் அதிசயம் இந்த ஊரில்த்தான் நடப்பதாக பக்தர்கள் சொல்கிறார்கள்!

கண்ணாத்தாள் கோவிலின் முன்பு உள்ள தெப்பக்குளமும், கோவிலின் முகப்பு மண்டபமும்,சிற்பங்களும் அவசியம் பார்த்து பயனடைய வேண்டியவை.

புதன், செப்டம்பர் 23, 2009

இரண்டிரண்டு...!

வருவதும் போவதும் இரண்டு ---இன்பம்,துன்பம்

வந்தால் போகாதது இரண்டு --- புகழ்,பழி

போனால் வராதது இரண்டு --- மானம்,உயிர்

தானாக வருவது இரண்டு ---இளமை,முதுமை

நம்முடன் வருவது இரண்டு ---பாவம்,புண்ணியம்

அடக்க முடியாதது இரண்டு ---ஆசை,துக்கம்

தவிர்க்க முடியாதது இரண்டு ---பசி,தாகம்

நம்மால் பிரிக்கமுடியாதது இரண்டு ---பந்தம்,பாசம்

அழிவைத் தருவது இரண்டு ---பொறாமை,கோபம்

எல்லோருக்கும் சமமானது இரண்டு ---பிறப்பு,இறப்பு

செவ்வாய், ஜூன் 30, 2009

கதையல்ல…..இது…..!

இந்த புளிய மரத்தில்தான் எவ்வளவு பூ!! மறைந்து கொண்டிருக்கும் மஞ்சள் வெயிலில் அதன் நிறம்..! இள மஞ்சள்? இல்ல பழுப்பு..? நுனியில் சின்னதா வளஞ்சு கொஞ்சமா சிகப்பு!வினோதமான(புளியம்)பூ!அந்தச் சின்னப்பூ அழகுபோல இருக்கு! இன்னும் கொஞ்ச நாளில் காய்ச்சு குலுங்கும்! ஆனால் யாரும் தேடுறதில்லை. அது பூக்கறதையும் காய்க்கறதையுமாவது யாராவது கவனிப்பார்களா? முதலில் பூக்கள்,அதுக்கப்புறம் குட்டி குட்டியா இளம் பச்சை நிறத்துல பிஞ்சு!எப்போ பெரிசாகுது!

அட! ரெண்டு நாலாச்சு இந்தப்பக்கமா வந்து..அதுக்குள்ள இப்ப ஓடுகள் பழுப்பு நிறமாக மாறி! ஓ.. பழுத்து விட்டது!. ம்..ம் இன்னும் ரெண்டு மூணு நாள்ல ஒவ்வொன்னா கீழே விழுக ஆரம்பிச்சுடும்..! இப்படி தினமும் எவ்வளவு புளியம்பழம் கொட்டுது ஆனா யாரும் தேடாம, அந்த வீட்டுக்கு முன்னாடி நிறுத்துற காருகளுக்கு அடியில் நசுங்கி... கொஞ்சம் கொஞ்சமாய் அவ்வளவும் காணாம போயிரும்! இல்லை இதோ உருண்டையா சதுரமா கோணல் மாணலாய் காப்பித்தூள் நிறத்தில் கொட்டிக் கிடக்கும் அதோட விதைகள்! கொஞ்ச நாளில் துளிர்விடத் தொடங்கிறும் ஆனா அதையும் வர விடாமல் வாரி வழித்து எங்கோ குப்பையோடு குப்பையாக அள்ளி கொட்டி மண்ணோடு மண்ணாக…..

நான் மட்டும்தான் ஒவ்வொரு நாளும் அதன் மாற்றத்தை கவனிக்கிறேனா?!. இந்த மரத்தை..இல்ல செடிய நட்டவர்கள் இப்போது எங்கே இருப்பார்கள்?!அது வாடகை வீடு, நிச்சயம் அந்த வீட்டில இப்ப இருக்கிறவர்களாய் இருக்காது.இப்ப இப்படி பூத்து,குலுங்கி நிற்கும் இந்த மரத்தை நினைத்துப்பார்ப்பார்களா? இதை நட்டவர்கள்!

ஸ்…அய்யய்யொ யாராவது பாக்கிறாங்களா என்ன..! நல்லவேளை தடுமாறி விழுகாம சமாளிச்சிட்டோம் யப்பா..!

‘இதென்ன இந்த நாய் இப்படி பாக்குது! பின்னாடியே வேற வருதே! வேகமா போகக்கூடாது, பாத்தும் மெதுவாவே போகணும்..இன்னமும் அது கூடவே வருதே… கடவுளே..! நல்லவேளை அது அங்கேயே நிக்கிறமாதிரி தெரியுது..கடவுளே… கடவுளே… அட என்னது திரும்பி போகுது! ஓ...கொஞ்ச தூரம் வரை எனக்கு பாதுகாப்பு கொடுத்துச்சோ!சே.. நாய்ன்னாவே விரட்டும் கடிக்கும்னே எப்பவும் நம்மளா பயந்துகிட்டு…

அதுக்குள்ள இருட்டிட்டு வருதே.. தினமும் இப்படித்தான். நாளைக்கு கொஞ்சம் சீக்கிறமா கிளம்பி விடணும்.வேகமா நடந்தாத்தான் நல்லா இருட்டுறதுக்குள்ள போயிடலாம். என்ன இப்படி வேர்த்து கொட்டுது.. வீட்டுக்கு போனவுடனே இந்த ஷூவை கழட்டி சாக்சையும் கழட்டினாத் தான் நிம்மதி, காலுக்குள்ள கச கசன்னு … நாளைக்கு இந்த சாக்சை தொவைக்கப்போட்டுறணும்.. வாச லைட்ட போட்டுட்டு போயிருக்கணும் எப்படி இருட்டாயிருச்சு..! தண்ணி என்னமா தவிக்கிது..! உள்ள போன ஒடனே மடக் மடக்ன்னு தண்ணிய குடிக்கணும்.. ஆஹா என்ன சுகம்! இந்த தண்ணியில என்னதான் இருக்கோ என்ன ருசி!.

இதுகளுக்கு வேற சாப்பாடு போடணுமே..அமைதியா இருந்துட்டு இந்த முயல் குட்டி ரெண்டுகளும் எப்படித்தான் தெரிஞ்சுகிதுங்களோ நா வந்ததை!சாப்பாட்டுக் கிண்ணத்தை தட்டுறதும் வாயில கவ்வி முன் பக்கமா போட்டு அதுகளுக்கு ரொம்ப பசிங்கறத சொல்லுறதும்.. அதிசயம்தான்!


^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

அடக்கடவுளே மறுபடி ஒரு தற்கொலையா…?!ஏன் இந்த நடிகைங்கள்லாம் இப்படி தற்கொலை செஞ்சுக்கணும்?இதுதானா விடுபடறதுக்கு வழி?இப்படி செய்யலாமா?இவங்களுக்குன்னு அம்மா,அப்பா தம்பி தங்கச்சி அண்ணன் அக்கா எவ்வளவு சொந்தக்காரங்க? இன்னும் வாழ்க்கையில என்னவெல்லாமோ நடக்க இருக்குது எல்லாத்தயும் விட்டுட்டு ஏன் இப்படி சாகணும்?!

எவனோ ஒருத்தனை விரும்பி சந்தர்ப்ப சூழ்நிலையால விட்டு பிரிஞ்சு போயிட்டா அதுக்காக,செத்து மடிவாங்களா!வாழ்க்கையில இன்னும் எவ்வளவோ இருக்கே?

காதல் மட்டுந்தானா வாழ்க்கை?…இப்படி மத்தவங்க கேட்பது சரி!ஆனால் ஒருவேளை யாருமே அவ(ர்க)ளின் நிலையில் நின்று பார்த்தால்த்தான் தெரியுமோ?என்னவோ ஏதாயிருந்தாலும் சாவைத் தவிர்க்கலாம்..ப்ச்ச..


^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


எரிமலையாய் குமுறுகிறது ஏன்? ஏன்? ஏன்? என்று நாலாபுறமும் கேள்விகள் ஆங்காராமாய் காதில் கேட்கிறது கழுத்தின் பின்புறம் நரம்பெல்லாம் துடித்து இசிக்கின்றது உள்ளமெல்லாம் வலி சொல்லொணாத வலி இதய பாரம் தாங்க முடியவில்லை எதுவும் வேண்டாம் எதுவும் வேண்டாம் என்ன செய்யலாம் விடுதலை இல்லையா? மனம் வெறுப்பால் துவளுகிறது ஓட முடியவில்லை ஒட்டுறவாடமும் பிடிக்கவில்லை காலம் போய்க்கொண்டிருக்கிறது மீண்டும் மீண்டும் இதே.. என்ன செய்ய

சம்பாதிக்கிறோம் என்ற அகங்காரம் தான் இல்லாவிட்டால் எதுவும் இல்லை என்ற ஆணவம் பிறக்கும்போதே எழுதிவிட்டான் இறைவன், இவரவர்களுக்கு இதுதான் என்று யாரும் யாரையும் தாங்கவில்லை தாங்குகிறவர்கள் தவற விட்டாலும் எதுவும் நின்று விடாது அதெற்கென்று அவன் ஏற்கனவே வழி வைத்திருப்பான் எல்லாம் தானாக அடுத்ததை நோக்கி நகர்ந்து கொண்டுதான் இருக்கும் அதுதான் இறை ரகசியம் இதை அறியாத பிறவிகளுக்கு ஆணவம் அகங்காரம் என்ற மாயை கண்ணை கட்டி விடும் .

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

மரியா இரண்டு வாரம் வேலைக்கு வரமாட்டா..எப்படி சமாளிக்கப் போறோம்னு நெனச்ச மாதிரி.பத்து நாளா வீடு துடைக்காம அங்கங்கே அழுக்குத்திட்டு திட்டா தெரியுது…அயன் செய்ய வேண்டிய துணி வேற மலையாக குமுஞ்சு போச்சு..

இத்தனை நாளா பெஞ்ச மழையில செடிகளுக்கு தண்ணி ஊத்துற வேலை இல்லாமல் இருந்துச்சு, இனிமே அதுவும் சேர்ந்துடும். ஆனால் தண்ணி ஊத்துறதும் ஒரு சுகமாத்தான் இருக்கு!

‘என்ன ஒரு அழகு இந்த மஞ்ச பூ! கனகாம்பரத்தின் பரம்பரையோ! அந்த கனகாம்பரத்துல பச்சை நிறத்தில மேல அழகான ஆரஞ்சு நிறத்தில இருக்கும் பூ !. இதில அதே பச்சை நிறத்துல மேல அழகான மஞ்சள் நிறத்துல இருக்க பூவுல! இடையிடையே வெள்ளையா ஓரியா நீள நீளமா சின்ன சின்ன இதழோட! அழகு! இலைகள் கனகாம்பர இலைகள் போலவே! அதை விட சிறிது ஓரியாக..! சாதாரணமாக இருக்கும் செடி உரத்தின் காரணமோ என்னவோ தெரியலை கொழு கொழுன்னு பச்சையும் மஞ்சளும் வெள்ளையுமா! தள தளன்னு! இன்னும் நிறைய வரிசையா இதையே வச்சா அழகா இருக்கும்!. இன்னும் தொட்டிகள் வேற வாங்கணும்.அன்னைக்கு ஒரு நாள் நர்சரியில் பார்த்த வெள்ளை நிறத்தில சந்தன கிண்ணம் மாதிரி இருந்த அந்த தொட்டியை வாங்கி வந்து இந்த செடியை அதுல வைக்கணும்.இன்னும் அழகா இருக்கும்!

செடிகளுக்கிடையில் சின்ன சின்னதா வேண்டாத செடி! மஞ்சக் காமாலைக்கு நல்லதுன்னுசொல்வாங்க கீளா நெல்லியோ என்னவோ, சின்..னதா அதில் வரிசை வரிசையா அரிசி மாதிரி இலை! இலைக்கு நடு நடுவில பச்சை நிறத்தில் தொங்குற கடுகு மாதிரி காய்! இந்த செடிய பிடுங்கி எடுக்கறதுக்கே மனசில்லை…

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

சுத்தி சுத்தி வந்தும் ஒன்றும் புரியவில்லை ஏன் எதற்கென்று மனமே ஒரு சூன்யமாகி போன மாதிரி,

‘சூன்யம் ‘ எதற்கு அப்படி சொல்லவேண்டும்? எங்கெங்கெனாதபடி இறைவன் நிறைந்திருக்கின்றான் என்னும் போது ‘சூன்யம்’ என்றொரு சொல் எங்கிருந்து எப்படி வந்தது! மனிதர்கள் அவர்களாகவே எதை எதையோ உண்டு பண்ணி அதற்கு அவர்களாகவே ஒரு பெயர் வைத்து.எதற்காகவாவது அடித்துக் கொள்வதிலேயே வாழ்க்கை பெரும்பாலும் முடிந்து விடுகிறது. இதன் நடுவில் அவ்வப்போது கொஞ்சம் இடை வெளியில் பெரிய மனது வைத்து அவனை நினைத்து(?) ஆலயம் சென்று..(இதுவும் கூட அவன் அழைத்தால் மட்டுமே!).

நாம் கல்லை எடுத்து நாயின் மீது வீசினால் நாய் கல்லை நோக்கி பாயாது வீசிய நம் மேல்த்தானே பாயும் ? நமக்கு ஏற்படும் நல்லது கெட்டது யாவும் விணைப்பயனாய் வருகிறதென்பதை உணராமல் அதை செய்தோர் மீது கோபம் கொள்கிறோம் இப்படி பல விஷயங்கள் புரிபடாமலே போகிறது.

அது புரியும் போது தவறுகள் எல்லாம் செய்து முடித்து விடுகிறோம் அதை முன்பே ஏன் உணர மாட்டோமென்கிறோம்?அதற்கு என்ன செய்ய வேண்டும்?

கண்களே கருவிழிகளே நீங்கள் எதை பார்க்கிறீர்கள்’
சின்னஞ்சிறு செவிகளே நீங்கள் எதை கேட்கிறீர்கள்’
பிஞ்சுக்கரங்களே நீங்கள் எதை செய்கிறீர்கள்’
தளர் நடை போடும் கால்களே நீங்கள் எங்கு செல்கிறீர்கள்’
இனிய இதயமே நீ எதை எண்ணுகிறாய்
யாவருக்கும் தந்தையான இறைவன் நம்முடைய ஒவ்வொரு செயலையும் மேலிருந்து உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறான்.

ஆதலால் எல்லாவற்றிலும் எப்போதும் கவனமுடன் இருங்கள் என்று சிறுவயதில் இருந்து அதற்கான பக்குவத்தை அந்த பிஞ்சு உள்ளங்களில் விதைத்தால்?

ஆமா.....

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


.....எழுதுவது,பேசுவது,படிப்பது போன்று.....நிகழ்விற்கு தகுந்தாற்போல் எப்போதும் தொடர்கிறது...கதைபோன்ற கதையல்லாத எண்ணங்கள்...!

...இப்ப அனுப்புகிறோமே...?அதனலென்ன அதான் இன்னைக்கி ராத்திரி 12 மணிவரைக்கும் நேரம் இருக்……!