ஞாயிறு, ஜூன் 20, 2010

அப்பச்சி... 1


”அன்பான இனிய  தந்தையர் தின நல் வாழ்த்துகள்!"

முன்பு ”தோழியர்” வலைப்பதிவிலும்,பின்பு “தமிழோவியம்”த்திலும் வெளி வந்த பதினோரு பாகங்கள் கொண்ட ’அப்பச்சி’தொடர் கதையை இன்று தந்தையர் தினத்தின் நினைவாக மீள் பதிவு செய்கிறேன்.தங்களின் மேலான கருத்துக்களை தந்து செல்லுங்கள்.

நன்றியுடன் அப்பச்சியின் அன்பு மகள்!


அப்பச்சி

‘முந்தா நா, நேத்து,இன்னைக்கோட மூணு நாளாச்சு இன்னொம் மூணுநா போச்சுன்னா அதுக்கடுத்தனா காலைல அப்பச்சியை பாத்துறலாம்ல (அம்மா)ஆத்தா?’.




அப்பச்சியை சரியா ஞாபகம் கூட இல்லை சிரிச்சுக்கிட்டு செவப்பா நல்ல உயரமா கம்பீரமா வேட்டியை மாப்பிள்ளைக் கட்டுகட்டிக்கிட்டு.. (ஆமா அப்பச்சி எப்பவுமே அப்படித்தான் வேட்டிய கட்டுவாகலாம் எல்லாரும் கட்டுற மாதிரி கட்டமாட்டகளாம் ஆத்தா சொல்ல கேட்டிருக்கேன்) ஏதோ லேசா மொகம் நெனப்புக்கு வருது போட்டோவில பாத்து பாத்து அதே மாதிரி நெனச்சுகிட்டிருக்கேனோ என்னவோ ஆனா ஒன்னு மட்டும் நல்லா நெனவிருக்கு, நா அப்பச்சி மடியில ஒக்காந்துகிட்டுருப்பேன் அப்போ இந்த ஓட்ஸ் இல்ல ஓட்ஸ அதை பால்ல போட்டு காய்ச்சி ஆத்தா அப்பச்சிக்கு கொடுப்பாக. அதை அந்த பால மட்டும் குடிச்சிட்டு அடியிலே இருக்குமே ஓட்ஸ் அதை எனக்குத் தருவாக, ஏன்னா எனக்கு பால் பிடிக்காது ஆன அதில இருக்குற ஓட்ஸ் ரொம்ப புடிக்கும் அதனாலதான்.அது மட்டும் இன்னும் மறக்கல்ல.

எனக்கு அஞ்சு வயசிருக்கும்போது அப்பச்சி (அப்பா) மலேயாவுக்கு கொண்டுவிக்க (மணிலெண்டிங் பண்ண) போகும் போது (ஏற்கனவே அங்குதான் இருந்தாங்க ஒவ்வொரு மூன்று வருஷம் நான்கு வருஷத்திற்கொரு முறை வந்து வந்து போவார்கள் அப்படித்தான் இந்த முறையும் வந்திருந்தார்கள்) இப்போ அஞ்சு வருஷமோ ஆறு வருஷோமோ ஆச்சு அப்ப போனவுக அப்பச்சி திரும்ப இன்னும் வரலை அதுக்கப்புறம் இதோ இப்போ எங்களை மலேசியாவுக்கு வரச்சொல்லி நானும் ஆத்தாவும் போய்க் கிட்டிருக்கோம்.

எனக்கு ஒரே அதிசயம் எதைப்பார்த்தாலும் (கப்பலே) அதிசயம், அதிலும் கப்பல்ல இருக்கிற லைப்ரரி,சாப்பிடுற ஹால், தியேட்டர்,நீச்சல் குளம், விளையாடுற இடம், எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச ஓய்வெடுக்கும் அந்த நீள வரண்டா!ஆனா கடல் பக்கம் லேசாக்கூட திரும்ப மாட்டேன், கடல்ல அந்த கரு ஊதா கலர்ல தண்ணியப் பாக்கும்போது பயம்மா இருக்கும் ஏன்னே தெரியாது, அப்புறம் ‘ஐய்ய.. பிடிக்கவே பிடிக்காது அங்க உள்ள சாப்பாடு..!

கப்பல் எப்பவும் லேசா அசைஞ்சுகிட்டே இருக்கும் அது ரொம்ப ரொம்ப மெதுவா இருந்தாலும் நெறையப்பேருக்கு தலை சுத்துச்சு! அதனால எப்பவும் வாந்திவர்ர மாதிரியே இருக்கும். கப்பல்ல ஒவ்வொரு சாப்பாட்டு நேரமும் ஒரு ஆள் வந்து எல்லா ரூம் வாசலிலும் மணி அடித்து அறிவிப்பார் வர வர அந்த மணி சத்தம் கேட்டாலே என் ஆத்தாவிற்கு குமட்ட ஆரம்பித்துவிடும் எனக்கும்தான்!. காலையில் டிபன் என்னன்னா.. ரொட்டியில வெண்ணையை அப்பி உவ்வே..(தடவி அந்த ப்ரெட்டின் கனத்திற்கு) அதை பார்க்கும் போதே...! எனக்கு வேண்டவே வேண்டாம்னு சொல்லிருவேன் ’ஏதாவது சாப்பிட்டாத்தானே இல்லைன்னா இன்னம் பெரட்டும் கொஞ்சமாவது சாப்பிடு’ன்னு ஆத்தா என்ன கெஞ்சினாலும் சாப்பிடவே மாட்டேன்.

‘அப்பாடி..! அதுக்குள்ள ஆறு நாளு ஓடிருச்சு! நாளைக்கு அதிகாலைல அஞ்சு மணிக்கெல்லாம் தூரத்தில கரை தெரிஞ்சுரும்’னு ஆத்தாவும் கூட வந்த மற்றவர்களும் சொன்னாங்க. ரெம்ப மகிழ்ச்சி எல்லார் முகத்திலும்! அங்கயும் இங்கயுமா சந்தோஷமாக போய்க்கிட்டும் வந்துகிட்டுமா இருந்தாங்க!

‘நாளைக்கு இன்னேறம் அப்பச்சியை பாத்து பேசிக்கினு இருப்போம்!’ என்னைக் கட்டிப் பிடிச்சு சொல்லும் போதே ஆத்தாவுக்கு சந்தோஷம் தாங்க முடியலை அது அவங்களை பாக்கும்போதே தெரிஞ்சுச்சு!

*******************************************






கருத்துகள் இல்லை: