திங்கள், நவம்பர் 01, 2010

அப்பச்சி 8

 வழி பூரா அண்ணன் சிரிக்க சிரிக்க ஏதேதோ பேசிக்கிட்டே வந்தாங்க ஆத்தா எதுக்குமே சரியாப் பேசலை. அவுக கேட்டதுக்கு மட்டும் என்னமோ சொல்லிக் கிட்டிருந்தாங்க...



அம்மானும், அண்ணனும் என்கிட்டேயும் நடு நடுவே படிக்கிறதப் பத்தியெல்லாம் கேட்டாக எனக்குப் புடிக்கவேயில்லை பள்ளிக்கூடம்னாலே கொண்டை போட்டுக்குணு இருக்குற அந்த ஒண்ணாப்பு வாத்தியார்! (எல்லாரும் அப்படித்தான் சொல்லுவாங்க நாங்க யாருமே அவரு பேர சொல்றதில்ல)அவரோட நெனப்புத்தான் வரும் அவரைக் கண்டாலே (நினைத்தாலே)பயம். அத மறந்துட்டு இருக்கும் போது இவங்க ஏன் அதயே கேக்குறாங்கன்னு மனசுக்குள்ள தோணுச்சு! என்னமோ பதில் சொன்னேன்.

'அவுக சும்மாதானே  இருக்காக ரெம்ப ஒண்ணு
மில்லையே'?ஆத்தா கேக்கும் போதே தொண்டை அடச்ச மாதிரி பேசுனாங்க, திரும்ப திரும்ப அப்பச்சிய பத்தியே கேட்டுக் கிட்டு இருந்தாங்க. எதுக்குன்னு தெரியலை ஆனா எனக்கு கஷ்டமா இருந்திச்சு.

அம்மான் சொன்னாங்க 'ஐத்தான்(அப்பச்சியை அப்படித்தான் அம்மான் கூப்பிடுவார்கள்) ஏங்கிட்டகூட முந்தாநாள் சொன்னாக ஒங்களைக் கூட்டப்போறேன்னு, அப்பறந்தான் உடம்பு சரியில்லைன்னு டாக்டர் கிட்டே போயி காட்டிகிட்டு வருவோம்னு போயிருக்காக அவரு கிட்ட இந்த மாதிரி மனைவியும் மகளும் நாளைக்கு மறுநா ஊரிலிருந்து வாராங்க நான் பினாங்கு போயி கூட்டிவரணும் நாளைக்கி சாயந்திரம் போரதா இருக்கேன்னு சொல்லியிருக்காக அவரு இதோடு நீங்க போக வேண்டாம்னு சொன்னாராம் அதுக்கப்புறம் தான் நேத்து ஏங்கிட்ட விவரத்தைச் சொல்லிக் கேட்டாக போய்ட்டு வரமுடியுமான்னு சரின்னு நேத்து சாயந்தரம் பொறப்பட்டு வந்தேன், வேற பயப்படுற மாதிரி ஏதும் இல்லைன்னு சொன்னாலும் ஆத்தா வருத்தமாத்தான் இருந்தாங்க, ஆத்தாவை பாக்க பாக்க பாவமா இருந்துச்சு நேத்தெல்லாம் எப்படி சந்தோஷமா இருந்தாங்க.

வழியில் ஓரு இடத்தில் அண்ணன் காடியை நிறுத்த சொன்னாங்க அங்க ஒரு ஹோட்டல்(ரெஸ்டாரண்ட்) இருந்துச்சு, 'இன்னும் ஒண்ணரை மணி நேரமாகும் தைப்பிங் போறதுக்கு அதுவரை எவ்வளவு நேரம் சாப்பிடாம இருக்குறது இங்கே பலகாரம்(டிபன்) சாப்பிட்டுட்டு போகலாம் இதுவும் சின்னபுள்ள என்னேரத்துக்கு சாப்பிடாம இருக்கும் வாங்கன்னு கூப்பிட்டாங்க, ஆத்தாவோ 'எனக்கு ஒண்ணும் வேண்டாம்'னு ஏங்கிட்டேநீ போயி சாப்பிட்டுட்டுவான்னு சொல்லிட்டு அண்ணங்கிட்ட 'இவளக் கூட்டி போயி நீங்களும் சாப்பிட்டு வாங்க நா காருக்குள்ளேயே இருக்கேன்னு சொல்லிட்டாங்க.

அண்ணன் விடல்லை இல்ல நீங்களும் வாங்க வேணும்கிறத கொஞ்சம் சாப்பிட்டுக் கெளம்பலாம்ன்னு மறுபடியும் கூப்பிட்டாங்க ஆத்தா வேண்டவே வேண்டாம்பனுட்டாங்க, சரி சாப்பிடாட்டாகோப்பியாவது சாப்ப்பிடலாம் வாங்கன்னாங்க, "கோப்பியா"?! (அப்பறந்தான் தெரிஞ்சுச்சு காப்பியத்தான் அப்படி சொன்னாங்கன்னு! அதே மாதிரிதான் வர வழியில எங்களை முந்திகிட்டு போன லாரியை காட்டி சொன்னாங்க இந்த லோரி க்காரனைப் பாருங்க எப்படிப் போறான் அப்படீன்னு எல்லாத்தயும் திருப்பி சொல்றாங்க அதிசயமா இருந்துச்சு!)எனக்கு பாத்ரூம் போகணும்னு ஆத்தாகிட்டே சொன்னேன் சரி வான்னு அவங்களும் ஏங்கூட எறங்கி வந்துட்டாங்க.

உள்ளே போனோம்,அங்க இருந்தவங்க எல்லாருமே சீனர்கள்தான்!  எனக்கு அவங்கள.. அவங்க பேசுனத எல்லாம் பாக்க பாக்க வேடிக்கையா இருந்துச்சு!அண்ணன் அவங்ககிட்ட என்னவோ சொன்னாங்க எனக்கு ஒண்ணூமே புரியலே அப்புறம் நா மட்டும்தான் சாப்பிட்டேன்.அவங்கள்ளாம்காப்பி….. இல்லல்லகோப்பி சாப்பிட்டாங்க!.

ம்ம்.. பிராக்குப் பாக்காம சாப்பிடு சீக்கிரமா போகணும்லஅவசரப் படுத்தினாங்க ஆத்தா, 'ஆமாத்தா சீக்கிரம் சாப்பிட்டு வா நேரமாச்சுல்ல' அம்மானும் சொன்னாங்க அவசர அவசரமா சாப்பிட்டு முடிச்சேன்.

'என்ன தண்ணி சாப்பிடுறே?'ன்னாங்க,மொதல்லயே குடுச்சுட்டேன்னேன் 'அது இல்ல ஜூஸ் ஏதாவது குடிக்கிறியா?'ன்னு கேட்டாங்க! அவங்க எல்லாத்தையும் தண்ணின்னுதான் சொல்வாங்களாம்!.

எல்லாரும் திரும்ப காடியில் ஏறி புறப்பட்டோம் அதுவரை ஒருத்தர் மாத்தி ஒருத்தர் பேசிக் கொண்டே வந்தவங்க அதுக்கப்புறம் யாருமே பேசல்ல எல்லாரும் பேசாம இருந்தாங்க.நா வெளியில வேடிக்கை பார்த்துக்கிட்டே வந்தேன் போறவழியெல்லாம் மரங்களுக்கு நடுவில நடுவில வீடு! அந்த வீடெல்லாம் தரையில இல்லாம நாக்காலி மாதிரி எல்லாப் பக்கமும் கால் காலா இருக்கு அதுக்கு மேல வீடு! வீட்டச் சுத்தி பூச்செடி தெரிஞ்சுச்சு! 

'இதென்ன வீடெல்லாம் இப்படி இருக்கு'னேன் 'இது"பலகைவீடு" மலாய்க்காரங்க வீடு இங்கல்லாம் இப்படித்தான் இருக்கும்'ன்னாங்க!  எனக்கு அந்த வீடுகளை ரெம்ப புடிச்சுது பாக்குறதுக்கு அழகா இருந்துச்சு!.

நான் எப்ப தூங்கினேன்னு தெரியல நல்லா தூங்கிட்டேன் திடீர்னு ஆத்தா எழுப்பினாங்க 'எந்திரி தைப்பிங் வந்திருச்சாம் இன்னம் கொஞ்ச நேரத்தில போயிருவோம்ன்னாங்க' எனக்கு ஒரே ஆவலா இருந்துச்சுதைப்பிங் வந்துருச்சா!கேட்டுகிட்டே ரெடியா எந்திருச்சு உக்காந்துட்டு வெளியில பார்த்தேன்.

இன்னும் கொஞ்ச நேரத்தில அப்பச்சிய பாத்துருவோம்!னு நெனக்கிறபோதே பரபரப்பா இருந்துச்சு! அதோடு அப்பச்சிக்கு சீக்கிரமா உடம்புக்கு தேவலையாகிரணும் கடவுளே அப்படீன்னு நெனச்சுக்கிட்டே ஆத்தாவை பாத்தேன், ஆத்தாவும் என்னப் போலதான் வேண்டிக்கிட்டு இருந்திருப்பாங்க போல தோணுச்சு ஏன்னா ஆத்தா கண்ணை மூடிக்கிட்டு இருந்தாங்க திரும்பவும் வெளியில் பார்த்தேன் இதுதான் தைப்பிங்கா! காடி ஊருக்குள்ள நுழைஞ்சுது...

3 கருத்துகள்:

தக்குடு சொன்னது…

அக்கா, நான் உங்க அப்பச்சி கதையை படிச்சுண்டு இருக்கேனே!!!..:) காரைக்குடி தெருல நடந்து போகற மாதிரி இருக்கு. அருமையான முயற்சி!!..:)

meenamuthu சொன்னது…

காரைக்குடியெல்லாம் கூட தெரிஞ்சு வச்சுருக்கிற தக்குடுவை இங்கே கண்டதில் மகிழ்ச்சி!நன்றிப்பா.. :)

தக்குடு சொன்னது…

என்ன இப்படி சொல்லிட்டேள் அக்கா! காரைக்குடி தங்கம் உலகத்துக்கே தெரியுமே. அங்க உள்ள மனுஷாளோட மனசும் தங்கம் தான்..:)