திங்கள், அக்டோபர் 04, 2010

அப்பச்சி... 6


அப்பத்தான் அங்கு வந்த ஒருத்தர் ஆத்தாவை பாத்து " ஆ.. ச்சி..." அப்படின்னு சத்தமா கூப்பிட்டு கிட்டு ஆத்தாகிட்ட ஏதோ சொல்ல வேகமா வந்தவரை அங்கிருந்தவங்க அவசரமா ஓடிவந்து'அண்ணே அண்ணே இருங்க  இங்க வாங்கன்னு அவர் கையை பிடிச்சு இழுத்து கூட்டிகிட்டு போக நானும் ஆத்தாவும் ஒண்ணும் விளங்காம பார்த்துக் கிட்டிருக்க'
சரி சரி நேரமாகுது வாங்க சொணங்காம புறப்படலாம்னு அம்மான் சொல்ல அங்கேருந்து எல்லாரும் புறப்பட ..

ஆத்தாவுக்கு என்னதுஏதோ சொல்லவந்தவுகள சொல்ல விடாமே கூட்டி போயிட்டாங்களே அப்படின்னுசந்தேகம் வந்துருச்சு.  'ரெம்ப முடியலையா? லேசா முடியலைன்னா அதுக்காக வராம இருக்கமாட்டாக  பயப்படற மாதிரி ஒன்னுமில்லையே?' ன்னு அம்மானிடம் கேக்கும்போது ஆத்தாவின் குரல் தொண்டை கட்டிய மாதிரி இருந்துச்சு. அம்மான் உடனே ' அதெல்லாம் ஒன்னுமில்லே ஒங்களுக்குத்தான் தெரியுமே ஐத்தான்(மைத்துனர்)லேசா ஒன்னுன்னாலும் ஜாக்ரதையா இருப்பாங்கள்ள ? அதனாலதான் வரல்ல, வேறொன்னுமில்ல' அப்டீன்னு சொல்லி சிரிச்சாங்க.

ஆனாலும் ஆத்தாவுக்கு கவலையா இருந்துருக்கும்னு நெனைக்கிறேன் நேத்து இருந்த மாதிரி இல்லை என்னமோ போல இருந்தாங்க.எனக்கும் கஷ்டமா இருந்துச்சு.பேசிக்கிட்டே எல்லோரும் கார் நிக்கிற இடத்துக்கு வந்துட்டோம்.


அப்பச்சிய இன்னும் பாக்கலையேங்கறது இருந்தாலும் அதுக்கும்மேல அங்குள்ளவங்களையும் அந்த இடங்களையும் அவங்க பேசுவதையும் பார்க்க பார்க்க அதிலேயே மூழ்கிட்டேன்! காருக்கு பக்கத்துல வந்ததும் எங்களோட பெட்டிகளை எல்லாம் தூக்கி வந்த ஆட்களிடம் அண்ணன் சொன்னாங்க ' ரெண்டு காடி இருக்கு, பொட்டிகள ரெண்டுலையுமா சரி பண்ணி ஏத்துங்கப்பா' ன்னு , 'காடியா ?என்னது காடி?!' ன்னு கேட்ட என்கிட்ட 'காரு' தான் இங்கேயெல்லாம் அப்படித்தான் சொல்லுவோம் மலாய் மொழியில காடின்னு சொல்லுறது' அப்ப்டின்னாங்க …….! காருதான் ' காடி'யா இனிமே நானும் காடின்னுதான் சொல்லனும்னு நினைச்சுக்கிட்டேன்!.


அந்த ரெண்டு காரையும் ஓட்டிய டிரைவர்கள் அட! இவங்க என்ன அந்த சீனாக்காரங்க மாதிரியே இல்லை வேற மாதிரி இருக்காங்க?! அதே சப்பைமூக்கு ஆனா செவப்பில்லே ஆத்தா சொல்வாங்களே செகப்புமில்லாம கருப்புமில்லாம இருந்தா ' மா நெறம்'ன்னு அந்த மாதிரி! கண்ணும் வேறமாதிரி ஒடனே கேக்காம இருக்க முடியலை மெதுவா கேட்டேன் 'இவங்களும் சீனாக்காரங்கதானா ?' அண்ணனுக்கு கேட்டுருச்சு'என்ன..?என்ன கேக்குதுன்னாங்க' ஆத்தா சொன்னாங்க ' ஒன்னுமில்லே காரோட்டறவங்க சீனர்களான்னு கேக்குறா' அம்மான் சொன்னாங்க 'இல்லெல்லை இவங்க இந்த நாட்டுக்காரங்க மலாய்க்காரங்க அப்டின்னாங்க'! எல்லாமே அதிசயம் 
எனக்கு!.


அதுக்கப்புறம் நானு ,ஆத்தா, அம்மான்,அண்ணன் ஒரு காடியிலும் மத்தவங்க இன்னொரு காடியிலும் ஏறிக்கிட்டு அங்கருந்து புறப்பட்டோம் ,கொஞ்ச நேரத்தில மொதல்ல அங்க போட்ல வந்து எறங்கினோமே ஹார்பர்
அது மாதிரியே  இங்கயும் இன்னொரு இடத்துக்கு  வந்துட்டோம்! அங்கே எங்களுக்கு முன்னாலேயே வரிசை வரிசையா நிறையக் காடி(கார்) நின்னுகிட்டு இருந்துச்சு! எங்க காடியையும் அந்த வரிசையில் போய் நிறுத்தினார் எங்கள் டிரைவர்.


காருக்குள்ள காத்திருக்கும் போது  அம்மான் சொன்னாங்க 'அந்தா தண்ணிக்குள்ள மஞ்சக்கலர்ல நிக்குதே?அதுதான் 'ஃபெரி அதில தான் 
நாம அக்கரைக்குப் போயி அதுக்கப்புறம் தான் தைப்பிங் போகணும் 
ஃபெரி அக்கரைக்குப் போக அரைமணி நேரமாகும்னு சொன்னாங்க!அக்கரையா ? அப்படீன்னா மறுபடியும் கப்பலா ?!


அரை மணி நேரத்திற்குமேல காத்திருந்தோம் , " ஃபெரி  வந்துருச்சு! போலருக்கு  நல்ல வேளை சீக்கிரம் வந்துருச்சு"ன்னு அம்மான் சொல்லிக் கொண்டிருக்கும் போது எங்களுக்கு எதித்தாப்பில வரிசை வரிசையா ஃபெரிக்குள்ளயிருந்து காடிகள் வருது! ஒவ்வொரு காடி வரும் போதும் டமார் டமார்ன்னு சத்தம்! 'என்னாத்தா இப்படி சத்தம் கேக்குது' ன்னேன் அதுக்கு 'ஃபெரிக்குள்ளேயிருந்து காடிகள் வரும்போது அங்க போட்டுருக்க இரும்பு பலகையில் ஏறி ஏறி வாரதாலே அந்த சத்தம் வருது" ன்னாங்க.


எல்லாக் காடிகளும் போயி அதுக்கடுத்து சர் சர்ன்னு உள்ளேயிருந்து 'மோட்டர்பைக்' குகள்!நிறைய வந்துச்சு!  எல்லாம் போனதுக்கப்புறம் எங்களுக்கு முன்னடி நின்னுகிட்டிருந்த காடிகள் மெதுவாக நகர .. 
எங்க காடியும் அதுக்குப் பின்னாலே 'ஃபெரி'க்குள்ள போக..


ஆத்தா கேட்டாங்க 'அக்கரையில இருந்து எவ்வளவு நேரமாகும் தைப்பிங் போய்ச்சேர?' ன்னு அதுக்கு அண்ணன் 'அங்கருந்து ரெண்ட்ரை மணி நேரமாகும்' ன்னாங்க .


கருத்துகள் இல்லை: