புதன், செப்டம்பர் 22, 2010

அப்பச்சி... 5



நாங்க போன போட் சின்னதா வெயில் படாம இருக்க மேல மூடியிருந்துச்சுஉள்ளே எதிர் எதிரே பெஞ்ச் மாதிரி போட்டிருந்துச்சு. அதில் நானும் ஆத்தாவும் ஒரு பக்கமும், எதித்தாப்ல அந்த அண்ணனும் கூடவந்த ரெண்டு இமிகிரேஷன் ஆஃபீஸர்களும் உக்காந்திருந்தாங்க...


காலையில் கப்பலில் மொத தடவையா இவங்களையெல்லாம் பாத்தவுடன் என்ன இப்படி இருக்காங்க! மூக்கெல்லாம் சப்பையா கண்ணெல்லாம் சின்..னதா அவ்வளோ செகப்பா! அப்ப எனக்கு வந்த சந்தேகத்த இப்ப ஆத்தாகிட்டே கேட்டேன் 'இவுகள்ளாம்  சீனாக்காரங்க  இப்படித்தான் இருப்பாகளாம் முந்தியே அப்பச்சி சொல்லியிருக்காக 'ன்னு ஆத்தா சொன்னாங்க. நான் அதிசயமா அவங்களையே பாத்துக்கிட்டிருந்தேன்.
இதோ.. இங்கேயும் எனக்கு இடது பக்கத்தில வெளியில் நின்னுகிட்டு பார்க்கிறதுக்கு அவங்க மாதிரியே ஒரு ஆள் 'போட்' ஓட்டிக்கொண்டிருந்தார்! ஓ..இவ..ரும் சீனாக்காரர்தான்! ஆனா பாத்தா எல்லாரும்(கண்ணு மூக்கு) ஒரே மாதிரி இருக்காங்க யாருன்னு எப்படி கண்டு பிடிக்கிறது! எனக்கு ஒண்ணும் புரியலை அதிசயமா இருந்துச்சு!

வேகமா போய்க்கிட்டு இருந்த போட் இப்போ மெதுவா போக ஆரம்பிச்சுருச்சு என்னன்னு பாத்தா...கரை கிட்டத்தில வந்துருச்சு! எனக்கு பர பரன்னு இருந்துச்சு. 'போட் 'டும் மெது மெதுவா கரையை தொட்டது, ஓட்டிக் கொண்டிருந்த அந்த ஆள் போட்' டில இருந்த பெரீய்ய்ய குண்டு கயிறை, இந்த மாதிரி இவ்வளவு பெரிய கயிற இதுக்கு முன்னாடி பார்ததேயில்லை! எடுத்து கரைமேல் தூக்கிப் போட்டார் அப்போ அங்கே நின்னுகிட்டு இருந்த ஆள்.. (அட! இவரும் சப்பை மூக்கு சின்ன கண்ணு! அவரைப்போலவே!!) அதை எடுத்து அங்கருந்த கருப்பா குட்டையா ஏதோ தூண் போல இருந்ததில் மாட்டி விட்டார்.

அதுக்கப்புறம் தான் எங்களை ஒவ்வொருத்தரா இறக்கி விட்டாங்க இப்பவும் அதே பயம்! ஆடிக்கிட்டு இருக்குற போட்ல இருந்து எப்படி தண்ணிக்குள்ள விழாம எறங்கப் போறோம்னு , அங்கருந்து இறங்கும் போதும் அத விட்டு நடந்து வரும் போதும் எனக்கு லேசா தலை கிறு கிறுன்னு சுத்திக்கிட்டு வந்துச்சு 'ஆத்தா.. தலை சுத்துது' ன்னேன் ஆத்தாவும்'இந்தாத்தான் வந்துட்டம்ல அவ்வளவுதான் சத்த பொறுத்துக்க ' ன்னு சொல்லி என் கையை புடிச்சு இழுத்துகிட்டு எங்களை கூட்டிகிட்டு போனவங்க பின்னாடியே போயி அங்கருந்து கொஞ்ச தூரம் நடந்து எல்லாரும் வெளியில வந்தோம்.

அங்க நெறைய்..ய பேர் வந்திருந்தாங்க! என்னோட அம்மான்(அத்தையின் கணவர்), அப்புறம் ஒன்றுவிட்ட சித்தப்பா ,பங்காளிவீட்டு அய்யா இன்னும் மத்தவங்களும்.. அவங்களை எனக்குத் தெரியலை இப்படி நிறைய எங்களுக்காக காத்திருந்தாங்க! ஆனா அப்பச்சிய மட்..டும் காணும்..?

அங்கருந்தவங்க எல்லாரும் ஆத்தாவை பார்த்ததும் 'வாங்க வாங்க எப்படி பிரயாணம் எல்லாம் எப்படி சௌகரியமாக இருந்ததா?'ன்னு கேட்டுட்டு 'வாங்காத்தா எப்படி இருக்கீய ? அப்டின்னு என்கிட்ட கேட்டுகிட்டு  இருக்கையில  ஆத்தாவும் அவங்கள்ள ஒருத்தர் கிட்ட 'ஏன் அவுக வரலை? வராம இருக்க மாட்டாகளே! எனக்கு எழுதுன கடுதாசையில கூட மொதநாளே பினாங்குக்கு வந்தர்ரேன்னு எழுதியிருந்தாக, இங்க நிக்கிறாகன்னு இருந்தேன் இங்கயும் இல்ல அவுக தைப்பிங்க்ல இருந்தே வல்லையா 'ன்னு கேட்டதுக்கு அம்மான் (மாமா அத்தையின் கணவர்) சொன்னாங்க  'வாரதாத்தான் இருந்தாக நேத்து காலயில லேசா உடம்பு சரியா இல்லை, சரி நா இவ்வளவு தூரம் போயி அப்பறம் அவங்களை கூட்டிகிட்டு தைப்பிங்குக்கு உடனே திரும்பனும்  அலைச்சலா இருக்கும் அதனால நீங்களும் பினாங்குல அந்த தம்பியுமா போயி கூட்டிக் கிட்டு வந்துருங்கன்னு அனுப்பிச்சாங்க அதனாலதான் நாங்க வந்தோம் 'ன்னு சொல்லிக் கொண்டிருக்கும் போது..


கருத்துகள் இல்லை: