திங்கள், பிப்ரவரி 20, 2006

யாரிவர்

இந்த அற்புதமான கவிஞரின் பல கவிதைகள் எனக்கு புரிந்து கொள்ள கடினமாய் இருக்கும்(கவிதை நல்லா ரசிப்பேன் அதுக்கு மேலே தெரியாதுங்க)ஆனாலும் எப்படியாவது புரிந்து கொண்டுவிட வேண்டும் என்று திரும்ப திரும்ப படித்து பார்ப்பது மிகவும் பிடிக்கும்!

அவரின் கவிதைகளில் ஒன்று:

'மாலை ஸ்பரிசம்'


அன்று கடல் அமைதியாக இருந்தது
ஆழத்தை மறைத்துப் போர்த்திய மேலாடை
தூரத்து கப்பலசைவால்
சிற்றலையாய் வந்து என்
பாதம் தொட்டபோது உன் ஆழம் புரிந்தது
புன்னகையில் உள்ளம் சொல்லும்
காதலியின் சிரிப்பு போல
அது கப்பலுக்கும் எனக்கும் கூட
தொடர்பைத் தந்தது
வின்னில் பறந்த மாலைக் கொக்குகள்
கிழித்த காற்றசைவு காதில் பட்டது
சொல்லாமல் சொல்லும் உன் காதற் சேதியாய்.
மரங்கள் தளிர்த்தன
மலர்கள் மலர்ந்தன
நாளைச் சூரியன்
வந்து தொடும்
சுகம் நினைந்து.
உள்ளுக்குள் பசித்தது.
பசிதான் வாழ்வு
பசிதான் நெருப்பு
நெருப்புதான் ஓட்டம்.
ஓட வைக்கச் சிரிப்பதும்
ஓடவைத்துச் சிரிப்பதும்
உன் வழக்கமெனினும்
இன்று
உன் புன்னகை
அது தரும் சுகம்
தூரத்துச் சிற்றலையாய்
கொக்கு கிழித்த காற்றாய்
மெல்ல வந்து
என்னைத் தொடும்
உன் நினைவாக
உன் ஸ்பரிசமாக.


இன்னொன்று:


கற்கள் நாங்கள்.
சில நீரை எதிர்த்து
பாறாங்கல்லாய் இன்னும்
நிற்கின்றன
எதிர்ப்பின்றி நீரின் ஓட்டத்தில்
ஓடிய போது கூர்முனை
மழுங்கி சுருக்கம் போய்
கல்லென்றே தெரியாவண்ணம்
வெண்ணைய் போல் உருண்டு திரண்டு
உன் கை ஒரு நாள் தீண்டும் சுகத்தில்
வெட்டவெளியில்
ஆற்றுப்படுகையில்
அலைகடற்கரையில்
அன்னாந்து பார்த்தபடி
நான்".

இக்கவிதைக்கான விளக்கத்தை அவரிடம் கேட்டால்..!

வாழ்வைக்குறித்த என் தேடல்கள் பல நேரங்களில் கவிதையாய் உருவெடுக்கின்றன.

கவிதையை ஆரம்பித்து வைக்கிறார் திருமங்கை ஆழ்வார்(கலியன்)பெற்ற தாயைவிட
இறைவன் செய்வான் என்பது துணிபு. உண்மையா?என்று கேள்வி வருகிறது.பெளதீகமாக
இல்லை என்ற விடை கிடைத்தவுடன்,ஏன் குறை நமக்கு வருகிறது என்ற கேள்வி போகிறது.
அப்போது ஒருபுதிய புரிதல் வருகிறது.ஏதாவது நாம் முதல் போட்டிருந்தால் லாபம் வரவில்லை
என்று அங்கலாய்க்கலாம் .எந்த முதலும் இல்லாமல் வாழ்வு ஒரு மாபெரும் பரிசாக நமக்கு
கிடைத் திருக்கிறது.ஒவ்வொரு நிமிடமும் லாபம்தான்.நட்டம் என்பதே இல்லாத ஒரு
சமாச்சாரம் வாழ்வு.

எல்லாமே-நமது துக்கம்,சுகம்,இனிமை எல்லாம் வரவுதான்.அவைதான் வாழ்வை ஓட்டுகின்றன.இப்படி
பார்க்கும் போது வாழ்வைக் குறித்து சலிப்புறும் மனது சமனப்படுகிறது.கனியன் பூங்குன்றன் சொன்ன
உவமை உடனே நினைவிற்க்கு வருகிறது.புனல் வருகிறது.பூங்குன்றன் வாழ்வைப் புனலில் மிதக்கும்
இலையென்றான்.எனக்கென்ன மோ 'நாம்' கல் போன்றவர்கள் என்று தோன்ற்கின்றது.எதையும் வருகின்ற
வழியில் ஏற்றுக் கொள்ளாததால்,எதிர்வினை கொடுப்பதால் 'கல்' பொருந்தும் என்று தோன்றுகினறது.வெறும்
பாராங்கல்லாய் சிலர்,கூழாங்கல்லாய் சிலர்,கூழாங்கல்லில் ஒரு சேதி இருக்கிறது.

இதுதான் என் கவிதை. என்று அதற்கான விளக்கத்தை அழகாக எடுத்து சொல்வார்!

இவர் யாரென்று தெரிகிறதா?

இங்கே சென்றுதான் பாருங்களேன் http://kavithai.rediffblogs.com/



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~


சமீபத்தில் படித்ததில் ஒரு கவிதை...!(மேலே உள்ள கவிதைகளுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லைங்க)

மீன் முள்
காலில் குத்த
துள்ளிக்குதித்த
என்பிள்ளையிடம்
கேட்டேன்
மீன்ஏன் துள்ளுகிறது?
பிள்ளைத்தமிழ் பேசியது:
மீனின்ஒரு முள்
குத்தியே நான்
குதித்து துள்ளீனேன்
இத்தனை
முள்ளும்மொத்தமாய்க்
குத்தினால்
ஏன்
துள்ளாது மீன்?

அப்துல் காதர்.----------

அன்பு மீனா.

கருத்துகள் இல்லை: